2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொமர்ஷல் கிரெடிட்டின் முதலாம் அரையாண்டில் வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 346 மில்லியன்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 13 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, 2013 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாதங்களில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 345.9 மில்லியனை பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ரூபா 287.6 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தை விடவும் இது 20.2% அதிகரிப்பாக காணப்படுகின்றது. 
 
2013 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனம் உழைத்துக் கொண்ட தேறிய வட்டி வருமானம் ரூபா 1.8 பில்லியன் என்பதுடன் கடந்த வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட ரூபா 1.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 51% அதிகரிப்பாகும். அதேவேளை வட்டி வருமானமானது, ரூபா 3.1 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கடந்த வருடத்தில் பெற்றுக் கொண்ட ரூபா 1.8 பில்லியனை விடவும் இது 72.6% அதிகரிப்பாகவும் உள்ளது. 
 
கம்பனியின் மொத்த சொத்துத் தளம் தற்போது சுமார் ரூபா 21.5 பில்லியனாக அதிகரித்துள்ள அதேநேரம் 2013 மார்ச் 31ஆம் திகதியன்று இருந்த சொத்துத் தளத்தை விடவும் இது ரூபா 3.2 பில்லியன் அதாவது 17.7% அதிகரிப்பாக உள்ளது. பங்கு ஒன்றிற்கான தேறிய சொத்துக்களின் பெறுமதியானது தற்சமயம் ரூபா 7.55 ஆக அதிகரித்துள்ளதுடன் 2013 மார்ச் 31ஆம் திகதி நிறைவடைந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது ரூபா 1.45 அதிகரிப்பாக காணப்படுகின்றது. கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் வைப்புத் தளத்தின் பெறுமதி ரூபா 16.0 பில்லியனாக காணப்படுவதுடன் 2013 மார்ச் 31ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்டதை விடவும் இது 21.4% அதிகரிப்பாகவும் உள்ளது. கடன் வழங்கல் சேவைத் தளத்தின் பெறுமதியானது தற்போது ரூபா 16.5 பில்லியனாக மேம்பாடு கண்டுள்ள அதேவேளை 2013 செப்டெம்பர் 30 ஆம் திகதி முடிவடைந்த அரையாண்டு காலப்பகுதியில் இதில் 13.7% அதிகரிப்பொன்று அடையப்பெற்றுள்ளது.
 
கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனம் 2013/14 நிதியாண்டுக்காக பங்கு ஒன்றிற்கான இடைக்கால பங்கிலாபமாக ரூபா 0.50 இனை 2013 ஒக்டோபர் 10ஆம் திகதி கொடுத்துள்ளது. இதன்படி, மொத்தமாக ரூபா 119 மில்லியன் இடைக்கால பங்கிலாபம் வழங்கப்பட்டுள்ளது. கொமர்ஷல் கிரெடிட் நிறுவனமானது, 10.9 பங்குகளை தம்வசம் வைத்திருக்கும் பங்குரிமையாளர்களுக்கு தலா ஒரு பங்கு எனும் அடிப்படையில் 2013 மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும் வகையில் தனது ஒதுக்குகளை மூலதனமதிப்பாக்கம் செய்தமையை தொடர்ந்து மேற்படி இடைக்கால பங்கிலாபம் வழங்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி நிதியியல் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனம் திகழ்கின்ற அதேநேரத்தில், 30 வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டில் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 64 இற்கும் அதிகமான இடங்களில் பரந்துபட்டதாக அமைந்துள்ள சேவை வலையமைப்பை இ;ந்நிறுவனம் கொண்டியங்குகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .