2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

களைகட்டியது 2013இன் முதல் வார பங்கு கொடுக்கல் வாங்கல்கள்

A.P.Mathan   / 2013 ஜனவரி 06 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

2012ஆம் ஆண்டின் முதல் வாரத்துடன் ஒப்பிடுகையில், 2013ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் பங்கு கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்த போக்கில் நிறைவடைந்திருந்தன. இதற்கு சந்தையில் சிறியளவிலான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகளவில் நிலவியமை பிரதான காரணமாக அமைந்திருந்தது. 

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,747.71 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3121.71 ஆகவும் அமைந்திருந்தன. ஜனவரி முதலாம் திகதி பங்குச்சந்தை செயற்பாடுகள் இடம்பெறவில்லை அத்துடன், ஜனவரி 2013 முதல் மிலங்க விலைச்சுட்டெண் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டிசெம்பர் 31ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,710,200,129 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 29,197 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 28,289 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 908 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், எஸ்எம்பி லீசிங், என்விறிசோர்சஸ் (உரிமைப்பங்குகள்), ஆர்பிகோ மற்றும் சிலோன் லெதர் (உரிமைப்பங்குகள்) போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

சிலோன் பிரின்டர்ஸ், சிஎஃவ்ஐ, கொலோனியல் மோட்டர்ஸ், கலாமசூ மற்றும் பிம்புத் ஃபினான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 54,200.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 49,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் தங்க ஆபரண விற்பனையில் ஓரளவு வீழ்ச்சி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1450.00 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

சர்வதேச சந்தையை பொறுத்தமட்டில் 2013ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் நிலவுவதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 129.41 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 208.42 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .