2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

தொடர்ந்தும் சீரான போக்கில் கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள்

A.P.Mathan   / 2013 ஜனவரி 14 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக சாதகமான நிலையில் நிறைவடைந்திருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஈடுபாடு கடந்த வாரம் கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் அதிகம் காணப்பட்டதை அவதானிக்க முடிந்திருந்தது. நாட்டில் அரசியல், நீதித்துறை சார்ந்த நெருக்கடிகள் காணப்பட்ட போதிலும், அவை கொழும்பு பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும்பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,747.71 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3121.71 ஆகவும் அமைந்திருந்தன. ஜனவரி முதலாம் திகதி பங்குச்சந்தை செயற்பாடுகள் இடம்பெறவில்லை அத்துடன், ஜனவரி 2013 முதல் மிலங்க விலைச்சுட்டெண் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 07ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,795,582,353 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 21,682 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 20,452 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,220 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிஐரி, எஎம்எஃப் கொ.லிமிடெட், சிலோன் பெவரேஜ், ஹேலீஸ் ஃபைபர் மற்றும் மேர்க் சிப்பிங் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ரேணுகா ஷோ (சாதாரண), ரேணுகா ஷோ, எஸ்எம்பி லீசிங் (சாதாரண), இந்தோ மலே மற்றும் பாம் கார்டன் ஹோட்டல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 54,200.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 49,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக தங்க விற்பனையில் வீழ்ச்சி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1480.00 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 127.93 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 206.99 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .