2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

பணியிடத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு திட்டம் முன்னெடுப்பு

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 04 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் முன்னணி ஆணுறை வர்த்தக நாமமான டியுரெக்ஸ் தயாரிப்புகளை விநியோகிக்கும் ரெக்கிட் பென்கீசர் மற்றும் லங்கா பிஸ்னஸ் கொலிஷன் ஒன்றிணைந்து, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில், அண்மையில் உறுதிமொழிப் பிரச்சார விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இந் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபால் சிறிசேன மற்றும் பிரதி சுகாதாரத்துறை அமைச்சர் லலித் திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், இவ் விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் 'Zero AIDS related deaths' என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இவ் விழிப்புணர்வுத் திட்டமானது உலகத்தில் மரண விகிதத்தை குறைப்பதற்கு பொதுமக்கள், அரசாங்கம், வியாபார முக்கியஸ்தர்கள் போன்றோருக்கு விடுக்கும் அழைப்பாக முன்னெடுக்கப்பட்டது.

ஏனைய நாடுகளை போலல்லாது, இலங்கையில் எய்ட்ஸ் நோய்த்தாக்கமானது சமுதாயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய நீடித்த பிரச்சினையாக காணப்படுகிறது. இந் நோய்த்தாக்கமானது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. எனவே, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்த்தாக்கத்தை தடுப்பதற்கு சமூக அணிதிரட்டலுக்கான தேவை காணப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்த்தாக்கத்தை சமூகத்திலிருந்து இல்லாதொழிக்க வேண்டும்.

இந் நிகழ்ச்சியில் ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் ராகுல் முர்காய் கருத்து தெரிவிக்கையில், 'நமது வர்த்தக நாமமான டியுரெக்ஸ் மற்றும் LBCH இன் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளிடையே மிக முக்கிய தொடர்பு காணப்படுகிறது.  டியுரெக்ஸ் வர்த்தகநாமமானது LBCH உடனான பங்காண்மையூடாக நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மத்தியில் அவர்களின் ஆதரவின் கீழ் விழிப்புணர்வுகள் முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகிறது. 2012ஆம் ஆண்டிற்கான எய்ட்ஸ் திட்டத்தில் பூச்சிய நிலையை அடைய உதவிகளை செய்வதே டியுரெக்ஸ் வர்த்தக நாமத்தின் இறுதிச் சவாலாக உள்ளது' என்றார்.

ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் விநியோக பணிப்பாளர் டன்சீம் ரெஸ்வான் கருத்து தெரிவிக்கையில், 'மக்கள் அன்பாக வாழ்வதற்கான சுதந்திரத்தை வழங்குவதே டியுரெக்ஸ் வர்த்தக நாமத்தின் நோக்கமாகும். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்த்தாக்கம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. எனினும், இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் எச்.ஐ.வி நோய்த்தாக்கம் பரவுதல் பிரச்சனைக்குரிய விடயமாகவுள்ளது' எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளரான அரூஸ் அஹமட், 'இவ்விடயம் தொடர்பில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவினை பெற திட்டமிட்டுள்ளோம். இவ் உறுதிமொழிச் சுவரில் விசேட விருந்தினர்கள் மற்றும் பங்கேற்றவர்கள் கையெழுத்திட்டதுடன், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்த்தடுப்பிற்கு ஆதரவினை பெறும் நோக்கில் LBCH அங்கத்தவர்களை கொண்ட முன்னணி நிறுவனங்களிடையே இச்சுவர் கொண்டு செல்லப்பட்டது' என்றார்.

LBCH நிறுவனமானது, சிவப்பு தலையணையில் 'விழிப்புணர்வை பரப்புங்கள் - எச்.ஐ.வி யை அல்ல' என்ற தொனிப்பொருளின் கீழ் மேற்கொண்ட திட்டத்திற்கு பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் ஸ்டான்டர்ட் சாட்டர்ட் வங்கியின் தலைவரும், LBCH குழு அங்கத்தவருமான அனிர்வன் கொஷ் டஸ்ட்டிடார் கருத்து தெரிவிக்கையில், 'வேலைத்தளம் மற்றும் சமூகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதே எமது குறிக்கோளாகும். எனவே இப் பிரிவில் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிப்பை வழங்கும் மக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம், பழக்கவழக்கம் போன்றன நாட்டின் உற்பத்திதிறனை சீராக கொண்டு செல்வதற்கு துணைபுரிகின்றன. இத்திட்டத்தின் ஊடாக வைரஸ் பரவுதலுக்கு எதிராக அனைவரையும் ஈர்க்கும் என நம்புகிறோம்' என்றார்.

டியுரெக்ஸ் மற்றும் LBCH இன் விழிப்புணர்வு திட்டத்தில் சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க ஆகியோரின் பிரசன்னத்தின் ஊடாக சுகாதாரத்துறையின் உயர் ஆதரவினையும், ஊக்குவிப்பையும் பெற்றுள்ளது என நிரூபனம் ஆகின்றது.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த தகவல்கள்
எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கமானது வர்த்தக துறையில் பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. புள்ளிவிபரங்களுக்கு அமைய, எச்ஐவி மற்றும் எயிட்ஸ் தொற்றுடன் உயிர்வாழும் 10 பேரில் 9 பேர் தொழில்துறையை சார்ந்தவராக உள்ளனர். எனவே இந்த நிலை குறித்து முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிடின், தொழில்நிலையத்தின் உற்பத்திதிறனை பாதிக்கும் வகையில் அமைந்துவிடும். உலகளாவிய ரீதியில் 2015ஆம் ஆண்டளவில் எயிட்ஸ் மூலம் வர்த்தக துறையில் ஏற்படும் ஊழியர் இழப்பு 74 மில்லியனாக அமைந்திருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற விழிப்புணர்வு திட்டங்களின் மூலம், மூன்றில் இரண்டு மடங்கான தொற்றுகளை தவிர்த்துக் கொள்ள முடியும். இலங்கையில் எச்ஐவி தொற்றுடன் வாழும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், வாராந்தம் 2 புதிய எச்ஐவி தொற்றுக்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. எனவே இந்த நிலை குறித்து துரிதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வெண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை புள்ளிவிபரம் - NSACP வலைத்தளம் (மூலம்)
  • இலங்கையானது குறைந்தளவான எச்.ஐ.வி தொற்றுநோயை கொண்டுள்ளதுடன்;, 2011ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி எச்.ஐ.வி நோய்த்தாக்கம் 0.1% வும் 4,200 பேர் எச்.ஐ.வி நோய்த்தாக்கத்துடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2012ஆம் ஆண்டிறுதியில் அறிக்கைகளுக்கு அமைய மொத்த எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 1,649 ஆகவும் (981 ஆண்கள், 688 பெண்கள்), ஆண் பெண் விகிதம் 1:5:1 ஆகும்.
  • 2012 இறுதியில், அறிக்கைகளின் படி எய்ட்ஸ் நோயாளர்கள் மற்றும் எய்ட்ஸ் நோய்த்தாக்க மரண எண்ணிக்கை முறையே 432, 283 ஆக பதிவாகியிருந்தது.
  • அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய (15–19 வயதினரை தவிர்ந்து) HIV positive உள்ள ஆண்களின் எண்ணிக்கை சமனாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பாலும் 35-39 வயதுப்பிரிவினரே எச்.ஐ.வி நோய்த்தாக்கத்திற்கு உள்ளாவதுடன், அனைத்து வழக்குகளிலும் 20% தை எட்டியுள்ளது.
  • இலங்கையில் பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35,000- 47,000ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் 8,332, அனுராதபுரத்தில் 1,138 பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .