
கண்டி பொது வைத்தியசாலைக்கு நீண்ட காலமாக தேவையாக காணப்பட்ட உட்செலுத்தல் எக்கிகள் இரண்டை அன்பளிப்பாக வழங்க மொபில் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் முன்வந்திருந்தது. கண்டி பொது வைத்தியசாலையின் சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு இந்த உட்செலுத்தல் எக்கிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில், சிறுவர் தீவிர சிகிச்சை வசதிகள் நான்கு பிரதான வைத்தியசாலைகளில் மாத்திரமே காணப்படுகிறது. இதில் கண்டி பொது வைத்தியசாலை, லேடி றிட்ஜ்வே வைத்தியசாலை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சிறுவர் வைத்தியசாலை மற்றும் கராபிட்டிய போதனா வைத்தியசாலை என்பன அடங்குகின்றன.
நாட்டின் சிறுவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் முக்கிய இடத்தை வகிக்கும் கண்டி பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு படுக்கைகள் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும், கடுமையான சுகயீனத்துடன் பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை நாட்டின மத்திய, வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல பிள்ளைகள் இந்த பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றன. எனவே, இந்த பிரிவின் மூலம் வழங்கப்படும் சேவைகளையும், இந்தப் பிரிவின் வழங்களையும் விஸ்தரிப்பதற்கான கட்டாய தேவை காணப்பட்டது.
சுகயீனமடைந்து மோசமான நிலையில் காணப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும். இந்த மோசமான நிலையை ஆராய்ந்த பின்னர், மொபில் லுப்ரிகன்ட்ஸ், கண்டி பொது வைத்தியசாலையின் சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு இரு உட்செலுத்தும் எக்கிகளை அன்பளிப்பாக வழங்கியிருந்தது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சிகிச்சைகளை வழங்க முடியும். தமது வருடாந்த சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஓரங்கமாக இந்த நடவடிக்கையை மொபில் லுப்ரிகன்ட்ஸ் முன்னெடுத்திருந்தது.
இந்த உட்செலுத்தும் எக்கிகளை கையளிக்கும் நிகழ்வில் மொபில் லுப்ரிகன்ட்ஸ் பணிப்பாளர் ஹேமந்த வர்ணசூரிய கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் முன்னணி லுப்ரிகன்ட் நிறுவனம் எனும் வகையில், மொபில் லுப்ரிகன்ட்ஸ் பல சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் கண்டி பொது வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் மோசமான நிலையில் காணப்படும் சிறுவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அதிகளவு உட்செலுத்தும் எக்கிகள் தேவைப்படுவதை நாம் எமது ஆரம்ப கட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தோம். அத்துடன், வைத்தியசாலை முகாமைத்துவம் தமது சேவைகளை விஸ்தரிப்பதற்கான திட்டத்தை கொண்டிருந்ததையும் நாம் அறிந்து கொண்டோம். எனவே, இதற்கமைவாக நாம் இரு அலகுகளை அன்பளிப்பாக வழங்கியிருந்தோம்' என்றார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'எமது நாட்டின் எதிர்காலம் எமது சிறுவர்கள், எனவே சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், சிறுவர்களின் நலனுக்கு எம்மாலான பங்களிப்பை வழங்குவது என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக அமைந்துள்ளதாக நாம் உணர்ந்தோம். எதிர்காலத்திலும் இதுபோன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.