2026 மே 07, வியாழக்கிழமை

நொரிடேக் நிறுவனத்தின் கொழும்பு விற்பனை நிலையம்

A.P.Mathan   / 2014 ஜூன் 16 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் மேசைப் பீங்கான் பாத்திரங்கள் உற்பத்தியில் முன்னோடி கூட்டுநிறுவனமாக திகழும் நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) ஆனது, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 06ஆம் திகதி) இல. 77, தர்மபால மாவத்தை, கொழும்பு 07 என்ற தனது புதிய முகவரிக்கு இடமாறியுள்ளது.

தர்மபால மாவத்தை / சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஆகியவை சந்திக்கும் இடத்தில் (அதாவது பித்தள சந்தி என்று பரவலாக அறியப்பட்ட இடத்தில்) 10,000 சதுர அடி பரப்பளவில் உபாய ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்த முதன்மை விற்பனை நிலையம், மூன்று மாடிகளை கொண்டிருக்கின்ற அதேவேளை அவ்விடத்திலிருந்து அதனை தெளிவாக பார்க்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

கண்கவர் திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ கலந்து சிறப்பித்தார். அத்துடன் இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மைதங்கிய நுபுஹிடோ ஹொபோ, NLPL நிறுவனத்தின் பிரதித் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு. யொசினரி சிமாயா, NLPL பொது முகாமையாளர் திருமதி. சுஜாதா ஈகொடகெதர, NLPL நிறைவேற்று ஆலோசகர் திரு. நிமல் பெரேரா, NLPL பணிப்பாளர் திரு. ரி.சி. தென்னக்கோன், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை முகாமையாளர் திரு. குமார விக்கிரம உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

'மதிப்புமிக்க இந்த அமைவிடத்திற்கு இடம் மாறியமை எம்முடைய பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு காலடியாக அமைவதுடன், இலங்கையில் எமது சர்வதேச வர்த்தக குறியீட்டின் பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் உள்ளது. கொழும்பிலுள்ள இந்;த முதன்மை விற்பனை நிலையமானது – டோக்கியோ, நகோயா, ஹொங்கொங் மற்றும் நியூஜெர்சி போன்ற நகரங்களில் அமைந்திருக்கும் இதுபோன்ற மதிப்புமிக்க ஏனைய சர்வதேச சங்கிலித்தொடர் காட்சியறைகளுடன் இணைந்து கொள்கின்ற அதேவேளை, எமது உற்பத்திகளின் கலப்பற்ற சிறப்புத் தன்மையை இப் பிராந்தியத்திற்கு கொண்டு வருகின்றது. இதனை எமது பிராந்திய கேந்திர மையமாகவும் நாம் நிலைநிறுத்தி இருக்கின்றோம். அதன்மூலம் உலகின் இப்பாகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் தேவைகளையும் நிவர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்'; என்று NLPL நிறுவனத்தின் பிரதித் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு. யொசினரி சிமாயா தெரிவித்தார்.

நொரிடேக் முதன்மை விற்பனை நிலையம் தன்னகத்தே உள்ள பரந்த வகைகளிலான உற்பத்திகளின் மூலம் சில்லறைச் சந்தை மற்றும் மொத்த விற்பனை சந்தை ஆகிய இரண்டிற்கும் தேவையானவற்றை வழங்குகின்றது. இதன் முதலாவது மாடி, சில்லறை வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மட்டங்களிலுமான விலைகளைக் கொண்ட உற்பத்திகளை இத் தளம் வழங்குகின்றது. இங்கு அன்பளிப்புக்கான பொருட் தெரிவுகளும் கண்கவர் திருமணம்சார் உற்பத்திகளும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இரண்டாவது மாடி பயிற்சியளித்தல் தளமாக (Training Floor) காணப்படுவதுடன், மேசை தள வடிமைப்புக்கள் மற்றும் மேசை ஆசாரமுறை பற்றிய செய்முறை காட்சிப்படுத்தலை மேற்கொள்ளும் தளமாகவும் இது செயற்படும். மூன்றாவது மாடியில் உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல் துறைக்குத் தேவையான உற்பத்திகள் நிறைந்து காணப்படும்.

திரு. யொசினரி சிமாயா மேலும் கூறுகையில், 'புதிய முதன்மை விற்பனை நிலையத்தின் புதுமையான சிறப்பம்சங்களாக பயிற்சியளித்தல் அமர்வுகள் மற்றும் மேசை ஆசாரமுறைகள் பற்றிய செய்முறைக் காட்சிப்படுத்தல்கள் போன்றனவும் காணப்படும். முழு விபரம் அடங்கிய மேசைத் தள வடிவமைப்புக்கள், பராமரிப்பு, கையாள்தல் மற்றும் மேசைப் பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்தல் போன்ற விடயங்களை இது உள்ளடக்கியிருக்கும். வீடொன்றை அமைத்து, ஒரு புதிய வாழ்க்கையை ஒன்றினைந்து ஆரம்பிக்கின்ற இளம் தம்பதிகளே இந்த முன்னெடுப்பின் முதன்மையான இலக்காக உள்ளனர். இது ஒரு முக்கியமான காரணியாகும். இவ்விடயத்தில் நாம் மிகக் கூடுதலான கவனத்தை செலுத்துகின்றோம். இத்துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் என்ற வகையில், எமது நிபுணத்துவத்தையும் அதேபோன்று எப்படிச் செய்வது என்ற உள்ளார்ந்த அறிவையும் எமது வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் விரும்புகின்றோம். அதன்மூலம் அவர்கள் முழுமையாக ஊக்கப்படுத்தப்படுவதுடன் தம்முடைய வாழ்க்கைமுறை போக்காக நொரிடேக் உற்பத்திகளை அனுபவித்து மகிழவும் வழிபிறக்கும்' என்றார்.

சிலோன் செரமிக் கூட்டுத்தாபனம் மற்றும் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த ஜப்பானின் நொரிடேக் கொம்பனி லிமிட்டெட் ஆகிவற்றின் ஒரு கூட்டு முயற்சிக் கம்பனியாக 1972ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட NLPL ஆனது, இன்று இலங்கையின் முன்னோடி மேசைப் பீங்கான் (போர்சலைன்) பாத்திரங்கள் உற்பத்தி கம்பனியாக முக்கியத்துவமிக்க அந்தஸ்தை பெற்றிருக்கின்றது.

நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) தனது 80% உற்பத்திகளை தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் உள்ள முக்கியமான சந்தைகள் பலவற்றுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இவற்றுள் - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், மத்தியகிழக்கு, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, மெக்ஸிகோ மற்றும் கொரியா போன்றவற்றின் சந்தைகளும் உள்ளடங்கும். மீதமுள்ள 20% உற்பத்திகளும் கிருலப்பனை, வத்தளை, மாத்தளை, பன்னல மற்றும் பண்டாரநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களிலுள்ள காட்சியறைகள் ஊடாக உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

கம்பனி ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் - தனது ஒரு மாதத்திற்கான உற்பத்தி வசதியை 3,000 தொகுதிகளில் இருந்து 12,000 தொகுதிகளாக அதிகரிப்பதற்காக கிட்டத்தட்ட ரூபா 1,000 மில்லியனை முதலீடு செய்து பல்வேறு விரிவாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களை NLPL நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அத்துடன் முதலாவது Bone China மேசைப் பாத்திரங்கள் உற்பத்தி தொழிற்சாலையை அறிமுகம் செய்யும் பொருட்டு ரூபா 160 மில்லியனை கம்பனி முதலீடு செய்திருக்கின்றது. இத் தொழிற்சாலை இலங்கையின் இக் குறிப்பிட்ட துறையில் முன்னோடியாக திகழ்கின்றது. ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் FDA இனால் ஈயம் மற்றும் கேட்மியம் வெளியேற்றம் தொடர்பில் நிர்ணயிக்கப்பட்ட தராதரங்கள் இக் கம்பனியால் உற்பத்தி செய்யப்படும் மேசைப் பாத்திரங்களில் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன. 

150 பேரைக் கொண்ட ஆளணியுடன் தனது தொழிற்பாட்டை ஆரம்பித்த இந்த தொழிற்சாலை கடந்த பல வருடங்களில் 1200 திறனுள்ள தொழிலாளர்களைக் கொண்டதாக வளர்ச்சி அடைந்துள்ளது. உண்மையில் இத் தொழிற்சாலையில் பணியாற்றும் அதிகமான தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு தத்தமது தொடர்புடைய துறைகள் தொடர்பில் ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய நிபுணத்துவத்திற்கு புறம்பாக, இதனது முகாமைத்துவ நடைமுறைகளுக்கு இலங்கை தர நிறுவகத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற ISO 9001:2000 தரச் சான்றுபடுத்தலும் ஆதரவளிக்கின்றது. மாத்தளையில் அமைந்துள்ள தொழிற்சாலையானது உலகளவில் காணப்படும் மிகப் பெரிய உற்பத்தி வசதிகளுள் ஒன்றாக திகழ்கின்ற அதேநேரம், நொரிடேக் (Noritake) வர்த்தக குறியீட்டின் கீழ் உயர்தரமிக்க மேசைப் பாத்திரங்களை உற்பத்தி செய்து வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .