A.P.Mathan / 2015 மே 23 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமானது 'WE CARE' என்ற தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு திட்ட முன்னெடுப்பின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தில் உள்ள லிஹினியகம வைத்தியசாலைக்கு அண்மையில் ஒரு அம்பியுலன்ஸ் வாகனத்தை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளது. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (அம்பாறை) டாக்டர் சேனக தலகலவிடம் இவ் வாகனம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய வை.கே. சின்ஹா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
டாக்டர் தலகலவின் தகவலின்படி, தெஹியத்தக்கண்டிய பிரதேசமானது நாட்பட்ட சிறுநீரக நோயினால் (CKD) பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக சுகாதார அமைச்சினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இப் பகுதியில் தற்போது சுமார் 350 புதிய நோயாளர்கள் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளனர். நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு தெஹியத்தக்கண்டியவில் உள்ள ஆதார வைத்தியசாலை தற்சமயம் சிகிச்சை அளித்து வருகின்றது. எவ்வாறிருப்பினும் அதற்கு அருகிலுள்ள லிஹினியகம பிரதேசத்தில் அதிகளவிலான நோயாளர்கள் இருப்பதாக அறிக்கையிடப்பட்டதை கவனத்திற் கொண்டு, இந்த புதிய நோயாளிகளுக்கு நோய் நிவாரணம் அளிக்கும் முகமாக லிஹினியகம வைத்தியசாலையில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக அண்மைக் காலங்களில் தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தில் பெருமளவிலான நாட்பட்ட சிறுநீரக நோயாளர்கள் காணப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த அம்பியுலன்ஸ் வாகனத்தை அன்பளிப்பு செய்தமையை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வரவேற்றதுடன், பாராட்டும் தெரிவித்தார். அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சேனக தலகல, டாக்டர் திலக் ராஜபக்ஷவுடன் இணைந்து வைத்தியசாலை சார்பாக அம்பியுலன்ஸ் வாகனத்தை பெற்றுக் கொண்டனர்.
அம்பியுலன்ஸ் வாகனத்தை கையளிக்கும் நிகழ்வில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. சுபோத் டக்வல உரையாற்றுகையில், 'சமூகப் பொறுப்புள்ள ஒரு கூட்டாண்மை பிரஜை என்ற வகையில், ஒரு நிறுவனத்தின் இலாபகரமான வளர்ச்சி என்பது நாடு முழுவதும் வாழ்கின்ற மக்கள் சமூகங்களின் பொருளாதார, சுற்றாடல் மற்றும் சமூக நிலைபேண்தகு தன்மையிலேயே தங்கியிருக்கின்றது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் திடமாக நம்புகின்றது. மிக எளிமையானதும் ஆனால் உறுதியானதுமான இந்த நம்பிக்கையே எமது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு முன்னெடுப்புக்கள் அனைத்தினதும் அடிநாதமாக திகழ்கின்றது என்பதுடன், வழக்கமான முன்னெடுப்புக்கள் இந்த அடிப்படையிலேயே நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார்.
'இதனை மனதிற் கொண்டே எமது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை 'WE CARE' என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன் விருத்தியடையச் செய்தும் வருகின்றோம். அதுவே, லிஹினியகமவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவிற்கு இன்று இந்த அம்பியுலன்ஸ் வாகனத்தை வழங்கும் தீர்மானத்திற்கு எம்மை இட்டுச் சென்றுள்ளது. இப் பிரதேசத்தில் வாழும் அதிக எண்ணிக்கையிலான நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு விரைவான மற்றும் உரிய நேரத்திலான சிகிச்சைகளை வழங்குவதற்கு இது குறிப்பிடத்தக்களவுக்கு உதவி புரியும். ஒரு அம்பியுலன்ஸ் என்பது இங்கு ஒரு அவசர தேவையாக காணப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான நன்கொடை ஒன்றை வழங்குவதற்கு எமக்கு வாய்ப்பு கிடைத்ததையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியும் உளத் திருப்தியும் அடைகின்றோம்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய வை.கே. சின்ஹா கருத்துத் தெரிவிக்கையில், 'இந்திய அரசாங்கமும் அதேபோல் இலங்கையில் தொழிற்படும் பல இந்திய நிறுவனங்களும் இங்குள்ள மக்கள் சமூகத்திற்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக சுகாதாரத் துறையில் இவ்வாறான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. லங்கா ஐ.ஓ.சி. பி.எல்.சி. நிறுவனத்தினால் இந்த அம்பியுலன்ஸ் வாகனம் அன்பளிப்புச் செய்யப்பட்டமையானது அது போன்றதொரு நடவடிக்கையே ஆகும். அந்த வகையில் குறிப்பிட்ட பிரதேசத்தில் நோயினால் பாதிப்பட்டிருக்கும் மக்களுக்கு இது பெரும் உதவியாக அமையும் என்று நான் நம்புகின்றேன்' என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், 'டிக்கோயா பிரதேசத்தில் அமைந்துள்ள கிளன்கெய்ர்ன் வைத்தியசாலைக்கு நவீன வசதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டதால் மிக விரைவில் இவ் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும்' என்றார். அதேவேளை இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக மேலும் பல சுகாதாரம்சார் செயற்றிட்டங்கள் இந்திய அசாங்கத்திடம் இருக்கின்றன என்றும் உயர்ஸ்தானிகர் உறுதிபட தெரிவித்தார். அம்பியுலன்ஸ் வாகனத்தை கையளிக்கும் நிகழ்வில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் சுயாதீன பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் அரச உயரதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
6 minute ago
21 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
35 minute ago
45 minute ago