A.P.Mathan / 2015 ஜூன் 08 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

'வளர்ந்து வரும் சந்தைகளில் உயர்ந்துள்ள வாகன விற்பனைத்துறை' எனும் தலைப்பில் Carmudi வெளியிட்டிருந்த அறிக்கையில், உலகளாவிய ரீதியில் கார் கொள்வனவு செய்யும் முறையில் எவ்வாறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பிலும், அதில் இணைய மற்றும் மொபைல் ஆகியவற்றின் பங்களிப்பு, அதிகரித்துச் செல்லும் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் மத்திய அளவு குடும்பங்களின் வளர்ச்சி போன்றன இதில் பங்களிப்பை செலுத்தியிருந்தன. Carmudi இனால் ஒன்லைனில் கார் கொள்வனவாளர்கள் மற்றும் கார் விநியோகத்தர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்த கருத்தாய்வுகளின் மூலமாகவும், இலங்கையின் துறைசார் ஈடுபாட்டை கொண்டவர்களுடனான ஆழமான நேர்காணல்கள் மூலமாகவும் இந்த அறிக்கையின் தரவுகள் பெறப்பட்டிருந்தன.
சர்வதேச கார் விற்பனையின் நிலை
2015 இல் சர்வதேச வாகன விற்பனை என்பது 89 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 2.4 சதவீத அதிகரிப்பாகும். 2012 இல் சர்வதேச விற்பனைப் பங்கு 50சதவீதமாக அமைந்திருந்தது, இந்த பெறுமதி 2020 இல் 60 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவற்றின் சர்வதேச இலாப பங்கும் 10 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார்களை பொறுத்தமட்டில், ஆசியாவில் கொள்வனவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக் அதிகமாக காணப்படுகிறது. 65 சதவீதமான பதிலளிப்பாளர்கள், அடுத்த இரு வருட காலப்பகுதியில் புதிய கார் ஒன்றை கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். 7 சதவீதமானவர்கள் மாத்திரமே பயன்படுத்திய கார்களை வாங்க இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
வாகன E-வணிகத்தின் வளர்ச்சி
சர்வதேச ரீதியில் வாகன E-வணிகம் என்பது பாரியளவு வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது புதிய வாகனங்களை கொள்வனவு செய்வோரில் 80 சதவீதமானவர்களும், பாவித்தகார்களை கொள்வனவு செய்வோரில் 100 சதவீதமானவர்களும் தமது சொப்பிங் அனுபவத்தை ஒன்லைனில் பெற்றுக் கொள்கின்றனர். இணைய மற்றும் மொபைல் பாவனை என்பது வளர்ந்து வரும் சந்தைகளில் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளன. கார் சொப்பிங் அனுபவத்தை ஒன்லைனுக்கு கொண்டு செல்வது என்பது, மேலைத்தேய நாடுகளை பின்பற்றி அமைந்துள்ளன. இதற்கான ஆதாரங்களை கூகுள் தேடல் கோரிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. வருடா வருடம் இந்த தேடல் வளர்ச்சி என்பது அதிகரித்து காணப்படுகிறது, குறிப்பாக இலங்கையில் மோட்டார் வாகன தேடல் என்பது 41 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கையில் கார்கள் பதிவு செய்யும் எண்ணிக்கை 1997 முதல் 2014 வரை மாதமொன்றில் சராசரியாக 1689.19 ஆக அமைந்திருந்தது. கொள்வனவு செய்யும் முன்னர், இணையத்தளத்தில் குறித்த ரக கார் பற்றிய விபரங்களை பெற்றுக் கொண்ட பின்னர், தாம் கொள்வனவு செய்திருந்ததாக 30 சதவீதமான கார் கொள்வனவாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இலங்கை கார் விற்பனையில் மாற்றங்கள்
இலங்கையின் மோட்டார் வாகன துறை என்பது, அண்மைக் காலத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை எதிர்நோக்கியிருந்தது. 2010 இல் விலை சடுதியாக குறைந்திருந்தது, ஏனெனில் வரிகள் குறைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக வாகன இறக்குமதி அதிகரித்திருந்தது. 2011 இல் புதிய மோட்டார் வாகன பதிவு 46 சதவீத அதிகரிப்பை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பதிவு செய்திருந்தது. 2012 இல் இறக்குமதி தீர்வைகள் மீளாய்வு செய்யப்பட்டிருந்த நிலையில், வாகன இறக்குமதியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இலங்கையின் 70 சதவீதமான கார் விநியோகத்தர்கள் கருத்துப்படி, கடந்த பன்னிரண்டு மாதங்களில் மாற்றமடைந்து வரும் பொருளாதார சூழ்நிலை காரணமாக கார்கள் விற்பனையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததாக Carmudi மேற்கொண்டிருந்த ஆய்வில் தெரிய வந்திருந்தது. 20 சதவீதமான கார் விநியோகத்தர்களின் கருத்துப்படி கார்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை வாகன இறக்குமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 1000cc அல்லது அதற்கு குறைவான வலு கொண்ட என்ஜின்களையுடைய கார்களின் விலைகளை 300,000 ரூபாவால் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த திட்டங்கள் பிற்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுடன், மோட்டார் வாகன துறை மற்றும் அதன் பங்காளர்களுக்கு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
ஒன்லைனுக்கான மாற்றம்
இலங்கையின் கார் விநியோகத்தர்கள் கருத்துப்படி, கார் கொள்வனவாளர்களில் 30 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் இணையத்தை பார்வையிட்ட பின்னர், தமது கொள்வனவுகளை மேற்கொணிடிருந்ததாகவும், 10 சதவீதமான கொள்வனவாளாகள், குறித்த விநியோகத்தரின் இணையத்தளத்தை பார்வையிட்ட பின்னர் தமது கார்களை கொள்வனவு செய்திருந்;ததாகவும் அறிவித்திருந்தனர். கார் விநியோகத்தர்கள் கருத்துப்படி, 60 சதவீதமான கார் கொள்வனவாளர்கள், பத்திரிகைகள், சிறுவிளம்பரங்கள் போன்றவற்றை விபரங்களை பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்துவதாக அறிந்து கொள்ள முடிந்தது. இதன் மூலம், இலங்கையில் பத்திரிகைகள் மற்றும் சிறுவிளம்பரங்கள் போன்றன தற்போதும் அதிகளவு பயன்பாட்டில் உள்ளமை அறிந்து கொள்ள முடிந்துள்ளது. கார் விநியோகத்தர்கள் அதிகளவு டிஜிட்டல் துறையில் ஈடுபட்ட போதிலும், 40 சதவீதமான கார் விநியோகத்தர்கள் ஒன்லைனில் தமது விளம்பரங்களை பதிவு செய்வதுடன், 60 சதவீதமான கார் விநியோகத்தர்கள் பத்திரிகைகள் மற்றும் சிறுவிளம்பரங்களில் தங்கியுள்ளனர்.
இலங்கை முகாமைத்துவ பணிப்பாளர் ஃபிராஸ் மார்கார் கருத்து தெரிவிக்கையில், 'வருடா வருடம் ஒப்பிடுகையில் வாகன தேடல் என்பது 41 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை என்பது, இலங்கை சந்தையில் காணப்படும் வாய்ப்புகளை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக தரவுகளின் பிரகாரம் பெரும்பாலான இலங்கையர்கள் பத்திரிகைகள் சிறுவிளம்பரங்கள் போன்றவற்றை கொண்டு தரவுகளை பெற்றுக் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. ஒன்லைன் மூலங்களும் கொள்வனவு ஒன்றை மேற்கொள்வதற்கு முன்னர் பங்களிப்பை வழங்குவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. அடுத்த இரு ஆண்டுகளில் இந்த முறையில் எம்மால் மாற்றத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். ஒன்லைன் பாவனை அளவுகள், என்பது வாகன கொள்வனவின் போது முக்கிய பங்களிப்பை வழங்குவதாக அமைந்திருக்கும். Carmudi என்பது தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனது புதுவிதமான இணையத்தளத்தை கொண்டுள்ளது. கார் கொள்வனவாளர்களுக்காக சிறந்த மூலமாக அமைந்திருக்கும் என்பதுடன், ஆயிரக்கணக்கான வாகனங்களை ஒன்லைனில் கொண்டுள்ளது. 2 நிமிட நேரத்தினுள் வாகன விற்பனையாளர்களுக்கு ஒன்லைனில் துரிதமாக பதிவேற்றம் செய்யக்கூடியதாக அமைந்திருக்கும். இலங்கையில் ஒன்லைன் வாகன விற்பனை துறைக்கு சிறந்த எதிர்காலத்தை நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன், தற்போது நாம் இணைந்து செயலாற்றும் பெருமளவிலான துறைசார் பங்காளர்களையும் உள்வாங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்க்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
Carmudi பற்றி
2013 இல் Carmudi தாபிக்கப்பட்டிருந்தது. தற்போது பங்களாதேஷ், கமரொன், கொங்கோ, கானா, இந்தோனேசியா, ஐவரி கோஸ்ட், மெக்சிகோ, மியன்மார், நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கட்டார், ருவாண்டா, சவுதி அரேபியா, செனகல், இலங்கை, டன்சேனியா, ஐக்கிய அரபு இராச்சியம், வியட்நாம் மற்றும் சம்பியா போன்ற நாடுகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது. வாகன சந்தையான இதில் விற்பனையாளர்கள், கொள்வனவார்கள் மற்றும் கார் விநியோகத்தர்கள் ஆகியோர் சந்திக்கின்றனர். கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வணிக நோக்கிலமைந்த வாகனங்களை கண்டறிவதற்கு சிறந்த ஒன்லைன் பகுதியாக அமைந்துள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .