2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

INTEPID இலங்கையில் மேலும் முதலீடு

S.Sekar   / 2023 மே 01 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

Intrepid Travel, இலங்கையில் தனது செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பு செய்ய முன்வந்துள்ளது. அதன் பிரகாரம், கொழும்பிலுள்ள தனது செயலணியை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் காணப்படும் மாபெரும் செயலணியையும் கொண்டுள்ளது. 230க்கும் அதிகமான ஊழியர்களையும், பிரயாண தலைவர்களையும் கொழும்பில் கொண்டுள்ளது.

அண்மையில் நாட்டில் நிலவிய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் நிறைந்த சூழல் காரணமாக, சில பல்தேசிய நிறுவனங்கள் அண்மையில் மேற்கொண்டிருந்த செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இது முற்றிலும் மாறுபட்டதாக இது அமைந்துள்ளது.

கொழும்பில் தனது வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு Intrepid தன்னை அர்ப்பணித்துள்ளது. அதற்காக மேலும் 30 பணி நிலைகளுக்காக இந்த ஆண்டில் இலங்கையில் நபர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். Intrepid கொழும்பின் சிறப்பு நிலையத்தினூடாக, சர்வதேச நிறுவனத்துக்கு பல்வேறு பணி நிலைகளினூடாக ஆதரவளிக்கப்படுவதுடன், அவற்றில் பொறியியல், தொழில்நுட்ப கட்டமைப்பாளர்கள், மனித வளங்கள், நிதியியல் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றன அடங்குகின்றன.

இலங்கைக்கான தனது மேலதிக அர்ப்பணிப்பினூடாக, 2023 ஆம் ஆண்டில் புதிய கட்டணம் செலுத்தப்படும் பட்டதாரிகள் பயிலுநர் இணைப்பு திட்டத்தையும் அறிமுகம் செய்ய Intrepid திட்டமிட்டுள்ளது. Intrepid கொழும்பின் எதிர்கால தலைவர்கள் நிகழ்ச்சித் திட்டத்தில் 15 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டு, ஆறு மாத காலப்பகுதிக்கு பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவர்.

நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், Intrepid அவுஸ்திரேலியாலைத் தளமாகக் கொண்ட பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் தோர்ன்டன் மற்றும் அவரின் பிரதான நிர்வாக அணியினர் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன், உள்நாட்டு அணியினருடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பிலுள்ள சிரேஷ்ட தலைமைத்துவ அணியினரில், பிரதம தொழில்நுட்ப அதிகாரி அனு கருணாதிலக மற்றும் ஆசிய முகாமைத்துவ பணிப்பாளர் நடாலி கிட் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

தோர்ன்டன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது அணியின் வளர்ச்சியையும் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதையிட்டும், பெண்களுக்கு பணியாற்றுவதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாக அமைந்திருப்பதையிட்டும் Intrepid மிகவும் பெருமை கொள்கின்றது.” என்றார்.

Intrepid இன் இலங்கைக்கான பொது முகாமையாளர் பூர்ணிகா தெல்பசித்ரா குறிப்பிடுகையில், தொற்றுப் பரவல் மற்றும் அரசியல் நெருக்கடி நிலைகளிலிருந்து சர்வதேச சுற்றுலா மீண்டும் படிப்படியாக தலைதூக்க ஆரம்பித்துள்ள முக்கியமான தருணத்தில் நிர்வாக அணியினரின் விஜயம் அமைந்துள்ளது. “மக்களை ஒன்று திரட்டுவது மற்றும் மாறுபட்ட கலாசாரங்களை பகிர்வது என்பதில் Intrepid கவனம் செலுத்துகின்றது. எனவே, எமது சிரேஷ்ட தலைமைத்துவ அணியினரை இங்கு வரவேற்பதில் நான் பெருமை கொள்கின்றேன்.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “எம்மால் வழங்கக்கூடிய சேவைகள் பற்றியும், இலங்கையையும் சர்வதேச ரீதியில் வெளிப்படுத்துவதையிட்டு எமது அணியினர் மகிழ்ச்சியடைகின்றனர்.  Intrepid ஐச் சேர்ந்த அனைவரும், சுற்றுலாப் பயணிகள் எமது அழகிய தேசத்துக்கு மீண்டும் வருகை தருவதை காண ஆவலுடன் உள்ளோம். அதனூடாக எம்மால் மேலும் பல சமூகங்களுக்கு ஆதரவளிக்க முடியும் என்பதுடன், அதிகளவு சுற்றுலா தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

காலநிலை அவதானத்துடனான பிரயாணத் தெரிவுகளை வழங்குவதில் Intrepid முன்னோடியாகத் திகழ்வதுடன், இலத்திரனியல் வாகனங்களைப் பயன்படுத்துவதில் இலங்கையில் புத்தாக்கமான மாற்றத்தை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கின்றது. நிறுவனம் விமானநிலைய மாற்றங்களுக்காக EVவாகனங்களை அடிக்கடி பயன்படுத்துவதுடன், 2022 ஆம் ஆண்டில் இரு முழுமையான மின்வலுவூட்டப்பட்ட சுற்றுப் பயணங்களை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.

மேலும், இலங்கையர்கள் மத்தியில் பிளாஸ்ரிக் பாவனையை குறைக்கும் மாற்றத்தை ஏற்படுத்தவும், உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களுக்கு பிளாஸ்ரிக் மாற்றீட்டு தயாரிப்புகளை உருவாக்க ஆதரவளிக்கும் வகையிலும் Intrepid Foundation இனால் Zero Plastic கைகோர்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் Intrepid இன் வளர்ச்சி என்பதில் தொழில்நுட்பம் மற்றும் இதர ஆதரவு நிலைகளினூடாக பெருமளவில் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், உலகின் மாபெரும் சாகச பிரயாண சேவை வழங்குநர் எனும் வகையில், இலங்கையின் சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதில் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், சர்வதேச சந்தைப்படுத்தல் திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வதும் இதில் அடங்கியுள்ளது.

இலங்கையை பொறுத்தமட்டில் சுற்றுலாத் துறை என்பது பிரதான பொருளாதார செயற்காட்டியாக அமைந்துள்ளது. முன்னர், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 12 சதவீத பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், அந்நியச் செலாவணி வருமானத்தில் மூன்றாவது மாபெரும் பங்களிப்பையும் வழங்கியிருந்தது.

Intrepid இனால், இலங்கையில் 12 மாறுபட்ட சுற்றுப் பயணிகள் வழங்கப்படுவதுடன், 2019 ஆம் ஆண்டில் 3500 வாடிக்கையாளர்களை இலங்கைக்கு வரவேற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .