2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

செலான் வங்கி உயர் இலாபத்தைப் பதிவு

S.Sekar   / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, 2022 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த ஒன்பது மாதங்களில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ. 2,505 மில்லியனை பதிவு செய்துள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து இதுவரை எதிர்கொண்டிராத மிக 'மோசமான நெருக்கடிச் சூழல்' என வர்ணிக்கப்பட்ட தளம்பலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட செலான் வங்கி மேற்படி இலாபத்தை பெற்றுக் கொண்டுள்ளது. எனவே, இதனை மிகவும் பாராட்டத்தக்க ஒரு நிதிப் பெறுபேறாக நிதித்துறை ஆய்வாளர்கள் நோக்குகின்றனர்.

வங்கியின் தேறிய வட்டி வருமானம் ரூ. 17,068 மில்லியனில் இருந்து, 2022 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த 9 மாதங்களில் ரூ. 27,960 மில்லியனாக ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில் 63.82% இனால் அதிகரித்துள்ளது. தரகு கட்டணத்தை அடிப்படையாகக் கொண்ட வருமானமானது ரூ. 3,270 மில்லியனில் இருந்து ரூ. 4,520 மில்லியனாக இந்த 9 மாத காலப்பகுதியில் 38.22% இனால் அதிகரித்துள்ளது. வர்த்தக நிதி மற்றும் அட்டைகளுடன் தொடர்புபட்ட வருமானமே கட்டண வருமானம் அதிகரிப்பதற்கு பிரதான காரணிகளாக அமைந்துள்ளது.

வணிக நடவடிக்கைகளில் இருந்தான தேறிய வருவாய், நிதிச் சொத்துக்களின் நியாயப் பெறுமான மறுசீராக்கங்களில் இருந்தான தேறிய வருவாய், வெளிநாட்டு நாணயமாற்று பரிவர்த்தனையில் இருந்தான தேறிய வருவாய் மற்றும் ஏனைய தேறிய தொழிற்பாட்டு வருமானம் ஆகியவை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 37.13% அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த வருடத்தில் ரூ. 1,979 மில்லியனாக பதிவு செய்யப்பட்ட இவ் வருமானம், 2022 இன் 9 மாதங்களில் ரூ. 2,715 மில்லியனாக குறிப்பிடத்தக்களவுக்கு அதிகரித்துள்ளது தேறிய அந்நியச் செலாவணி மறுமதிப்பீட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற வருவாயே இதற்கு பிரதானமான பங்களிப்பை வழங்கியது.

கடந்த வருடத்தில் ரூ. 10,036 மில்லியனாக காணப்பட்ட மொத்த செலவினங்கள் 2022 இல் ரூ. 11,015 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய பரிசீலனைக்கு எடுத்தக் கொள்ளப்பட்ட 9 மாத காலப்பகுதியில் வங்கியின் மொத்தச் செலவினம் 9.75% அதிகரிப்பை பதிவு செய்திருக்கின்றது. ஆளணிசார் செலவுகள் ரூ. 530 மில்லியனால் அதிகரித்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைவாக ஊழியர்களுக்கான வெகுமதிகளை வழங்கியமை இவ்வதிகரிப்புக்கு பிரதான காரணியாகும்.

நாட்டில் நிலவிய உயர் பணவீக்கம் மற்றும் உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை போன்ற காரணங்களால் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் விளைவாக, வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு செலவினங்களும், தேய்மானம் மற்றும் பெறுமதி குறைப்பு செலவினங்களும் 10.39% இனால் அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும், பல்வேறு கிரயக் கட்டுப்பாட்டு முன்னெடுப்புகளை மேற்கொள்வதன் மூலம் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை வங்கி தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் மொத்த மதிப்பிறக்க கட்டணமாக பதிவு செய்யப்பட்ட ரூ. 6.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டின் 9 மாத காலப் பகுதியில் இதனது பெறுமதி ரூ. 18.8 பில்லியன் என வங்கி கணிப்பீடு செய்துள்ளது. இது 199.09% அதிகரிப்பாகும்.

இந்நிலையில், உலகளவிலும் உள்நாட்டிலும் உருவாகி வருகின்ற பொருளாதார சவால்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புபட்ட கடன்சார் இடர்நேர்வு தன்மை ஆகியவற்றுக்கு முகம் கொடுக்கும் நோக்கில், செலான் வங்கியானது மதிப்பிறக்க ஒதுக்க ஏற்பாட்டை அதிகரித்துள்ளது.

மீளாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 9 மாத காலப்பகுதியில் தேறிய கடன்கள் மற்றும் முற்பணங்களாக ரூ. 453,730 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம், 2.66% சிறியதொரு அதிகரிப்பை செலான் வங்கி பதிவு செய்திருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .