2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஜப்பான் மற்றும் இலங்கை இராஜதந்திர உறவுகளின் 70 வருட பூர்த்தி

S.Sekar   / 2023 ஜனவரி 13 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் ஜப்பானிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையில் அண்மையில், ஜப்பானிய தூதரகத்தினால் விசேட வைபவ நிகழ்வொன்று இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகொஷியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்து கொண்டார்.

இரு நாடுகளுக்குமிடையிலான உயர் மட்ட ராஜதந்திரிகளின் விஜயங்கள், ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மானிய உதவிகள், இலங்கையின் தனியார் துறையில் ஜப்பானிய தனியார் முதலீடுகள், இலங்கையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஜப்பானிய மொழிக் கல்வி மற்றும் ஜப்பானின் அரச மாளிகையை அலங்கரிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டமை மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் வாழ்த்துகள் போன்ற பல விடயங்களை தூதுவர் மிசுகொஷி நினைவுகூர்ந்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையேயான உறவுகள் வலுவடைவதில் பாரிய பங்களிப்பு வழங்கியிருந்த பல்வேறு சம்பவங்களைப் பற்றியும் அவர் கவனம் செலுத்தியிருந்தார். இவற்றில் ஜுலை மாதத்தில் டனபடா தினம், நட்புறவு நடை பவனி மற்றும் செப்டெம்பர் மாத சான் பிரான்சிஸ்கோ சமாதான பேரவை மாநாடு, டிசம்பர் மாதத்தில் பொன்-ஒடொரி கொண்டாட்டம் போன்றன அடங்கியிருந்தன. இரு நாடுகளுக்குமிடையே வெற்றிகரமாக 70 வருடங்கள் நட்புறவைப் பேணுவதில் பங்களிப்பு வழங்கியிருந்தமைக்காக இலங்கை அரசாங்கம், இலங்கையின் உத்தியோகபூர்வ பங்காளர்களான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனம், ஜப்பானுடன் தொடர்புடைய நிறுவனங்கள், மற்றும் ஸ்தாபனங்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிடுகையில், இரு நாடுகளுக்குமிடையே ஆழமான நட்பு மற்றும் பந்தம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பது பற்றியும், ஜப்பான் மற்றும் இலங்கை மக்களின் புரிந்துணர்வின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஜப்பானிய அரசாங்கத்தின் பங்களிப்புகள், ஜப்பானிய தனியார் துறையின் முதலீடுகள் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான அரச, கல்விசார், விஞ்ஞான மற்றம் தொழில்நுட்பம், ஆய்வுக் கைகோர்ப்புகள், பாதுகாப்பு மற்றும் கலாசாரம், சமயம் மற்றும் நட்புறவு தொடர்பான பல்வேறு கைகோர்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில், 70 வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையில், வெகுசன ஊடக அமைச்சு மற்றும் தபால் திணைக்களம் ஆகியன இணைந்து தபால் தலை முத்திரையும் வெளியிட்டிருந்தன. இந்த முத்திரை மற்றும் அஞ்சலுறை ஆகியவற்றை ஹசினி தினேஷிகா மற்றும் ரஷ்மி தெவ்மினி ஆகியோர் வடிவமைத்திருந்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட போட்டியிலிருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X