Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

தித்வா புயல் காரணமாக இலங்கையில் பாரிய மனிதநேய மற்றும் பொருளாதார அதிர்ச்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் மதிப்பின் பிரகாரம் நேரடி சேதங்களின் மதிப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (மொத்த தேசிய உற்பத்தியின் சுமார் 4%). இந்நிலையில் அவசர பொது நடவடிக்கைகள் அத்தியாவசியமானவையாகும். அவசர தங்குமிடங்கள், விவசாய மறுசீரமைப்புகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடும், அந்நியச் செலாவணியும் அவசியமாவதுடன், இலங்கையின் பெரும்பொருளாதார சூழ்நிலை நெருக்கடியாக காணப்படும் சூழலில், இந்த நிலை மேலும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. நிஷான் டி மெல், சர்வதேச நாணய நிதியத்தின் துரித நிதிவசதியளிப்பு திட்டத்தில் தங்கியிருப்பதற்கு எதிரான கருத்தை முன்வைத்திருந்தார். மாறாக, புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து நிதி பெறல் மற்றும் புதிய சர்வதேச இறையாண்மை பிணைமுறிகளை வழங்கல் போன்ற மாற்று முறைமைகளை பின்பற்றுவதுடன், உள்நாட்டு நிதிக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தித்வா புயலினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிதிசார் சவால்களின் அளவில் கலாநிதி. டி மெல் அவர்களின் இந்த கருத்து சரியானதாக அமைந்திருந்தாலும், ஏற்கனவே இலங்கையை உறுதியற்ற நிலையை நோக்கி தள்ளியிருந்த அதே பாதையில் மேலும் கொண்டு செல்லும் வகையில் அவரின் முன்மொழிவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச பொதுக் கடன்களை வணிகமயமாக்கல் என்பதால் ஏற்கனவே நாடு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், நாட்டின் தங்கியிருப்பு நிலையை மேலும் அதிகரிக்கச் செய்து, நிதிச் சந்தைகளுக்கு நாட்டை மேலும் மோசமான நிலையில் தோற்றப்படுத்துவதாகவும் அமைந்துவிடலாம்.
இடர் மதிப்பீட்டில் தவறு மற்றும் வட்டி வீதங்கள்
மிகைக் கட்டணங்கள், நாணய மாற்று விகித மாற்றங்கள் மற்றும் உள்ளூர் நாணயப் பெறுமதியிலான நடைமுறை வட்டி விகிதங்கள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளும்போது, சர்வதேச நாணய நிதியத்தின் துரித நிதி வசதியளிப்பு மிகவும் உயர் செலவுடையது என்பதே கலாநிதி டி மெல்லின் வாதத்தின் முக்கிய அரணாகும். இதிலிருந்து, புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து கடன் பெறுவது அல்லது உள்நாட்டு அமெரிக்க டொலர் முறையிலான நிதி ஆவணங்கள் மூலம் கடன் பெறுவது போன்ற மாற்று வழிகள் மலிவானதாக இருக்கும் என அவர் முடிவுக்கு வருகிறார்.
இருப்பினும், இந்த ஒப்பீடானது ஒரு பிழையான அளவுக்கோலை அடிப்படையாகக் கொண்டது. உள்நாட்டு வர்த்தக வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க டொலர் வைப்புக்களுக்குக் கிடைக்கும் வட்டி வீதங்களுக்கு நிகராக, புலம்பெயர் மக்களிடமிருந்தும் அரசாங்கம் கடன் பெற முடியும் என்று இது மறைமுகமாகக் கருதுகிறது. ஆனால், இடர் என்பதைச் சரியாகக் கவனத்தில் கொள்ளும்போது இந்த எடுகோள் தகர்ந்துபோகிறது. அண்மையில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய, அத்துடன் சர்ச்சைக்குரிய மறுசீரமைப்புக்கு உள்ளாகிய ஓர் அரசாங்கத்திற்கு கடன் வழங்குவது என்பது, தமக்கே உரித்தான இருப்பு நிலைக்குறிப்புகளையும், பாதுகாப்புகளையும் கொண்ட ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கிகளில் வைப்புக்களைக் கொண்டிருப்பது என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விடயமாகும்.
அரசாங்கத்தின் எந்தவொரு புதிய அமெரிக்க டொலர் கடன்களுக்கும் பொருத்தமான வட்டி வீதமானது, புலம்பெயர் சேமிப்பாளர்களுக்கு வழங்கப்படும் வைப்பு விகிதம் என அமையாது. மாறாக, சர்வதேச இறையாண்மைப் பிணைமுறிகளுக்கு இலங்கை வழங்க வேண்டிய வருவாய் விகிதமாகும். தற்போது சந்தையில் சர்வதேச இறையாண்மைப் பிணைமுறி விகிதங்கள் பதிவாகாத நிலையிலும், இத்தகைய வருவாய் விகிதங்கள் கணிசமான ஒரு இடர் முனைப்பணத்தை கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இது சர்வதேச நாணய நிதியத்தின் துரித நிதி வசதியளிப்பின் நடைமுறைச் செலவை விட அதிகமாக அமைய வாய்ப்புள்ளது. அவ்வாறு இல்லை எனக் கூறுவது, கடன் மீளச் செலுத்தத் தவறியதற்கு பின்னரான சூழலில் சந்தைகள் எவ்வாறு இறையாண்மை இடரை மதிப்பிடுகின்றன என்பதை குறைத்து மதிப்பிடுவதாகும் அமையும்.
அந்த வகையில், கலாநிதி டி மெல்லின் செலவுக் கணிப்பீடுகள் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான தெரிவுகளுக்குத் தெளிவைத் தருவதை விட, அவற்றைக் குழப்பமடையச் செய்வதாக அமைந்துள்ளன.
அவசரகால நிதி உதவி முதல் வர்த்தக கடனில் தங்கியிருப்பு வரை
கணிப்பீடுகளை விடவும், கலாநிதி டி மெல்லின் முன்மொழிவுகளின் கட்டமைப்பு ரீதியிலான திசையமைப்பு அதிக கவலைக்குரிய விடயமாக உள்ளது. அவை புலம்பெயர் மக்களிடமிருந்தான கடன் பெறுதல், உள்நாட்டு அமெரிக்க டொலர் பிணைமுறைகள் அல்லது பலதரப்பு நிறுவனங்களின் உத்தரவாதத்துடன் கூடிய ESG - தொடர்புடைய சர்வதேச வெளியீடுகள் என எவ்விதமாக அடையாளப்படுத்தப்பட்டாலும், அவற்றின் அடிப்படைச் செயல்முறை ஒன்றாகவே அமைந்துள்ளது. அதாவது, மேலதிக வர்த்தக அல்லது பகுதி-வர்த்தக ரீதியிலான வெளிநாட்டு செலாவணி கடன்களை உருவாக்குவதாகவே அமைந்துள்ளது.
இது ஒரு நடுநிலையான தெரிவு அல்ல. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிக்கான காரணம், சந்தை அடிப்படையிலான வெளியக கடன் பெறலினால் எழுந்திருந்தது. உருப்படம் 1 இல் காண்பிக்கப்பட்டுள்ளதைப் போல, வர்த்தக வெளிநாட்டு கடனை நோக்கிய இலங்கையின் நகர்வு, குறிப்பாக, சர்வதேச இறையாண்மை பிணைமுறிகளினால், அதன் வெளிநாட்டு கடன்கள் மீதான செலவை அதிகரிக்கச் செய்துள்ளன. சர்வதேச வர்த்தகக் கடன்களை நோக்கிய நகர்வு, தித்வா புயல் போன்ற வெளிப்புற அதிர்ச்சிகளால் இலங்கை மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். ஏனெனில், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களைப் போலன்றி, தனியார் பிணைமுறிதாரர்கள் பொருளாதாரச் சரிவு காலங்களில் கடனைப் புதுப்பிப்பதில்லை அல்லது நெருக்கடி நேரங்களில் அவசரகால பணப்புழக்க உதவியை வழங்குவதில்லை. இதன் விளைவாக, வெளிப்புற அதிர்ச்சியால் ஏற்படும் பணப்புழக்க அழுத்தம், மிக விரைவாக ஒரு கடன் தீர்க்கும் திறன் நெருக்கடியாக மாறுகிறது. இவ்வாறு பார்க்கையில், தித்வா புயலுக்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகளுக்குப் புலம்பெயர் பிணைமுறிகள், உள்நாட்டு அமெரிக்க டொலர் முறையிலான நிதிக் கருவிகள் அல்லது புதிய சர்வதேச இறையாண்மை பிணைமுறிகள் வெளியீடுகள் மூலம் நிதியளிக்க முன்மொழியப்படுவது இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சிக்கல்களை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இத்தகைய நிதிக் கருவிகள் வெவ்வேறு பெயர்களில் அல்லது வெவ்வேறு முதலீட்டாளர் தளங்களைக் கொண்டிருந்தாலும், அவை உருப்படத்தில் காட்டப்பட்டுள்ள அதே வர்த்தக ரீதியான கோட்பாட்டின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. அவை சந்தையினால் தீர்மானிக்கப்படும் வட்டி விகிதங்களிலும், அதிகரித்த நிச்சயமற்ற நிலைகளிலும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுச் செலாவணிப் பொறுப்புகளை மேலும் அதிகரிக்கின்றன. ஒரு காலநிலை பேரிடருக்குப் பதிலளிக்கும் விதமாக வர்த்தக ரீதியிலான வெளிநாட்டுக் கடன்களை விரிவாக்கம் செய்வது, இலங்கையின் கடன் மீளச் செலுத்தத் தவறுதலுக்கு அடிப்படையாக அமைந்த அதே பாதிப்புகளைக் குறைக்காமல், மாறாக மேலும் அந்த நெருக்கடியை அதிகரிக்கச் செய்வதாக அமையும்.
மேலும், கலாநிதி டி மெல் ஆதரித்திருந்த, இலங்கையின் கடன் மீளச் செலுத்த தவறியிருந்தமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பானது, நாட்டின் நிதி மற்றும் பணவியல் இறையாண்மையை ஒரு வரையறைக்குள் உட்படுத்தியுள்ளதுடன், புதிய வர்த்தகப் பொறுப்புகள் குறித்து நாடு அதிக உணர்திறனுடன் இருக்க வேண்டிய ஒரு சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
அதனடிப்படையில், புலம்பெயர் மக்களிடமிருந்து கடன் பெறுவதற்கும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து கடன் பெறுவதற்கும் இடையிலான வேறுபாடு என்பது பெரும்பாலும் முக்கியத்துவமற்ற ஒன்றாகும். இவை இரண்டுமே நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுச் செலாவணிப் பொறுப்புகளை அதிகரிப்பதுடன், உற்பத்தித்திறன் மிக்க முதலீடுகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நிதிச் சந்தைகளை மட்டுமே மையமாகக் கொண்ட ஓர் அபிவிருத்தி மூலோபாயத்தை மீண்டும் வலுப்படுத்துகின்றன.
வெளிநாட்டுக் கடன் சுமைகளை வெறுமனே 'மீளப் பொதியிடுவது' என்பதற்கு பதிலாக, அவற்றை உண்மையிலேயே குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து கலாநிதி டி மெல்லின் ஆய்வில் எவ்வித தீவிரமான ஈடுபாடும் காட்டப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக, ஒரு காலநிலை பேரிடரைத் தொடர்ந்து (121 நிபுணர்கள் குழு முன்மொழிந்ததைப் போல) வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் இதில் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், வர்த்தகக் கடன் பொறுப்புகளை மேலும் ஆழமாக நிலைநிறுத்தாமல், மோசமடைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடிக்கு இவை நேரடியான தீர்வை வழங்கும்
நிதியளிப்புத் தெளிவற்ற நிதிசார் நெகிழ்வுத்தன்மை
விதிவிலக்கான சூழ்நிலைகள் அரசாங்கத்தின் அதிகப்படியான செலவினங்களை நியாயப்படுத்துகின்றன எனத் தெரிவித்து, பொது நிதி முகாமைத்துவக் கட்டமைப்பினால் விதிக்கப்பட்டுள்ள செலவின எல்லைகளைத் தளர்த்துமாறும் கலாநிதி டி மெல் கோருகிறார். கொள்கை ரீதியாக, இது ஒரு நியாயப்படுத்தக்கூடிய நிலைப்பாடாகும். பேரிடர் கால நடவடிக்கைகளானது, அமைதிக்கால நிதி விதிகளுக்கு இயந்திரத்தனமாகக் கட்டுப்பட்டிருக்க முடியாது.
ஆயினும், இதிலும், அதன் பின்விளைவுகளை எதிர்கொள்வதிலிருந்து பின்வாங்குவதாக இந்த முன்மொழிவு அமைந்துள்ளது. முதலாவதாக, உத்தேசிக்கப்பட்டுள்ள மேலதிக செலவினங்களின் அளவுக்கான நியாயப்பாடுகள் மிகக் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன (சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர). முக்கியமாக, இந்த அதிகரித்த செலவினங்களுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படும் என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை. புதிய மத்திய வங்கிச் சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள பணவியல் மற்றும் நிதிசார் கட்டுப்பாடுகள் குறித்து மௌனம் காப்பதன் மூலம், இந்த முன்மொழிவானது அதிகரித்த பற்றாக்குறை நிதி வழங்கல் உள்நாட்டு வர்த்தக மூலங்களிலிருந்தே பெறப்படும் என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறது. இது அரசாங்கத்தின் ஏற்கனவே பாரிய அளவில் உள்ள உள்ளூர் நாணயக் கடன் சுமையை மேலும் அதிகரிப்பதுடன், நடைமுறை வட்டி விகிதங்களை உயர்ந்த மட்டத்திலேயே வைத்திருக்கும் (உருப்படம் 2 ஐப் பார்க்கவும்). சலுகை அடிப்படையிலான நிதியளிப்பு அல்லது கடன் நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், கூடுதல் நிதிசார் நெகிழ்வுத்தன்மை என்பது பேரிடர் தொடர்பான செலவினங்களை நிரந்தரமான உயர் கடன்-வட்டி சுமைகளுக்குள் சிக்க வைத்துவிடும். இது இலங்கையை நிலையற்ற உலகளாவிய சந்தைகளுக்கும், உள்நாட்டில் அதிக செலவுடைய சந்தை-சார்ந்த கடன் பொறியினுளும் தள்ளிவிடும்.
எச்சரிக்கையுடனான முடிவுரை
தித்வா புயலுக்கான இலங்கையின் துலங்கல், அவசரத் தேவையையும், நிதானத்தையும் சமநிலைப்படுத்துவதாக அமைய வேண்டும். அவசர கொள்கை உருவாக்கத்திற்கு எதிராக எச்சரிப்பதில் கலாநிதி நிஷான் டி மெல் சரியாக இருக்கலாம். ஆனால், அவரது சொந்தப் பரிந்துரைகளே இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிய அதே காரணிகளை மீண்டும் உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன. அவை வர்த்தக ரீதியான கடன் பெறுதலில் தங்கியிருத்தல், நிலையற்ற மூலதனச் சந்தைகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகுதல் மற்றும் கடன் சார்ந்த பொருளாதாரச் சீர்செயல்களை இயல்பாக்குதல் ஆகியவையாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் அவசர நிதிவசதியளிப்பு என்பதும் செலவுகள் இல்லாமல் இல்லை. அதனை எவ்விதமான விமர்சனங்களுமின்றி ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதனை புலம்பெயர் உறுதிப்பாடு அல்லது ESG - தொடர்புடைய சர்வதேச வெளியீடு எனும் நாமங்களில் அமைந்த புதிய வணிக அல்லது சந்தை அடிப்படையிலான கடன்களினூடாக மாற்றீடு செய்வது என்பது, இலங்கையின் சிக்கல் நிலையை தீர்க்காது.
காலநிலை பேரிடர்கள் மற்றும் எதிர்பாராத அதிர்ச்சிகளால் சர்வதேச உதவிகள் கோரப்படும் சந்தர்ப்பங்களை கவனத்தில் கொண்டு, உண்மையில் அவதானத்துடனான வழிமுறையினால் கடன் நிவாரணம், தற்காலிக கடன் மீளச் செலுத்தல் நிறுத்தி வைப்புகள் மற்றும் இயலுமானவரை கடன்-சாராத நிதிவசதிகளை உருவாக்கல் போன்றவற்றுக்கு முன்னுரிமையளிக்கப்படும். இவ்வாறானதொரு நிலைமாற்றம் இருக்காவிடின், தித்வா புயல் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியும், கடந்த கால இடர்களிலிருந்து விடுபட்ட காலமாக அமைந்திருக்காது. மாறாக, இலங்கையால் தாங்கிக் கொள்ள முடியாத கடன் வர்த்தகமயமாக்கலுக்கு மேலும் வழிநடத்தி, மீண்டும் நெருக்கடிகளுக்குள் கொண்டு செல்வதாகவே அமையும்.

ஆக்கத்தை எழுதியவர்கள் -
(ஹோவார்ட் நிக்கலஸ், நெதர்லாந்தின் சமூக கற்கைகள் நிறுவகத்தின் பொருளியல் கற்கைகள் தொடர்பான ஓய்வு பெற்ற இணை பேராசிரியர். ஷிரான் இலன்பெரும, சமூக கற்கைகள் நிறுவகத்தின் ட்ரைகொன்டினென்டலில் பகுப்பாய்வாளர். பிரம் நிக்கலஸ், ஆய்வு மற்றும் பயிற்சிகளில் ஈடுபடும் ETIS லங்காவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி.)
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago