2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நெல் விவசாயிகளுக்கு பசளைகள், உரங்கள் மற்றும் பயிற்சிகள்

S.Sekar   / 2023 பெப்ரவரி 10 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய விவசாயிகளிற்கு பசளைகள், விதைகள் மற்றும் பயிற்சிகளாக 4 மில்லியன் யூரோக்களை (அண்ணளவாக ரூ. 1.5 பில்லியன்) ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கியுள்ளது. இலங்கையில் உள்ள உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் (FAO) இந்த நிதிகள் பயன்படுத்தப்படும்.

அண்மைய பொருளாதார நெருக்கடி நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளையும், குறிப்பாக 0.5 ஹெக்டேர் வரையிலான நிலங்களில் பயிரிடும் சிறு விவசாயிகளையும் கடுமையாக பாதித்தது. உரங்கள் மற்றும் ஏனைய உள்ளீடுகள் இல்லாததால் கடந்த இரண்டு அறுவடை பருவங்களில் கடுமையான பயிர் விளைச்சல் இன்மையால் இந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களது வருமானம் குறைவதற்கு வழிவகுத்ததுடன், உணவு உட்பட அவர்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கான திறனையும் பாதித்தது.

ஐரோப்பிய ஒன்றிய தூதர், டெனிஸ் சைபி கருத்து தெரிவிக்கையில்: 'இந்த புதிய திட்டத்தை இன்று அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இலங்கை விவசாயத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருவதற்கு FAO உடன் நாங்கள் இணைந்தோம். உரங்கள் மற்றும் விதைகள் போன்ற மிகவும் அத்தியாவசிய உள்ளீடுகளை நாங்கள் ஒன்றாக வழங்குவோம். குறைந்த வளம் கொண்ட நெற்செய்கை முறைகளுக்கு எப்படி மாறுவது என்பது குறித்து விவசாயிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிப்போம். இந்த புதிய ஆதரவு இலங்கையில் மிகவும் நிலையான, நெகிழக்கூடிய மற்றும் உற்பத்திசார்ந்த விவசாயத் துறையின் ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றத்திற்கு பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.' என்றார்.

பொலன்னறுவை, பதுளை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 0.5 ஹெக்டேர் வரையிலான நிலத்தை பயிரிடும் 41,000 சிறு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் உதவும். 2023 பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவத்திற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 கிலோகிராம் எடையுள்ள யூரியா உர மூட்டை வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், அந்த விவசாயிகளுக்கும், அபிவிருத்தி அதிகாரிகளுக்கும் உரத்தை எவ்வாறு திறமையாகப் பயன்படுத்துவது, இரசாயன உரத்திற்கான உண்மையான தேவைகளைக் குறைத்தல், கரிம உரங்களின் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் நீண்ட கால மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை இலக்கு வைத்ததாக திறன் அபிவிருத்தி பயிற்சி வழங்கப்படும். தற்போதைய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு இலங்கையில் விதை நெல் உற்பத்தி முறையை வலுப்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டமானது விவசாயிகளுக்கு தரமான நெல் விதைகளை பயிரிடுவதற்கும், சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை வளர்த்து பதப்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான பண்ணைகளை வலுப்படுத்துவதற்கும் உதவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X