2025 மே 03, சனிக்கிழமை

மார்ச் மாதத்தில் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை (JITF)

S.Sekar   / 2023 பெப்ரவரி 24 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

13ஆவது வர்த்தக சந்தை நிகழ்வு யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியான யாழ்ப்பாணக் கோட்டையை அண்மித்துள்ள முற்றவெளி மைதானத்தில் மார்ச் 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு, யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றத்துடன் (CCIY) இணைந்து, வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் (தனியார்) நிறுவனத்தினால் (LECS) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலாவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை 2002 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்நிகழ்வு ஒரு வருடாந்த வர்த்தகத் தளமாக படிமுறை வளர்ச்சி கண்டுள்ளது. இக்கண்காட்சியில் அமைக்கப்படும் விற்பனையகங்கள் (stall) யாழ் சந்தையின் பெரும் பகுதியை அடைந்துகொள்வதை இந்நிகழ்வு சாத்தியமாக்குகிறது. இக்கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களும், யாழ்ப்பாணத்தையும் வட மாகாணத்தையும் தளமாகக்கொண்டுள்ள நுகர்வோர்களும் தொழில் தரப்பினர்களும் இந்நிகழ்வை பார்வையிட வருகை தருகின்றனர். பொதுவாக, பல்வேறுபட்ட மக்கள்தொகையையும் சார்ந்த ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர். யாழ்ப்பாணக் கோட்டையை அண்மித்ததாக அமைக்கப்படும் கண்காட்சி இடமானது, அங்கு விற்பனையகங்களை அமைக்கின்றவர்கள் தமது பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான உச்சபட்ச சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

'வடக்கின் நுழைவாயில்' (gateway to the North) என அறியப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையானது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் தமது தயாரிப்புக்களை வடக்கு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக மிகவும் எதிர்பார்க்கும் ஒரு தளமாகும். கடந்தகாலங்களில் இக்கண்காட்சியில் பங்குபற்றிய தொழில்முயற்சியாளர்கள் வடக்கில் தமக்கு இருக்கக்கூடிய சாத்தியங்களை நேரடியாகக் கண்டுகொண்டனர் என நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வானது விவசாயம், விருந்தோம்பல், கல்வி, உணவு, இயந்திர உபகரணம், நிர்மாணம், நுகர்வோர், இலத்திரனியல், மின்சக்தி, ஆடைத்தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலைச் சொத்து (Real estate) ஆகிய துறைகளிலுள்ள கைத்தொழில்கள், தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பன்முக வர்த்தக விவகாரம் (multi-trade affair) பற்றியதாகும்.

நீண்டகாலமாக கல்விக்கான காட்சிக்கூடமாகத் திகழ்ந்துவருகின்ற 'கல்வி' எனும் காட்சியரங்கின் நிகழ்வுகளும் பல உயர்கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி இம்முறை, 2023 ஆம் ஆண்டில், இந்நிகழ்வில் இடம்பிடிக்கவுள்ளன. இக்காட்சிக்கூடமானது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் நாடுபூராவுமுள்ள கல்வி நிறுவனங்களுடன் ஈடுபாடு கொள்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை (JITF) என்பது, இலங்கையின் MIECE நிகழ்வுகள் பற்றிய நாட்காட்டியில் காணப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வின்போது இப்பிராந்தியத்துக்குப் பயணிக்கும் அதிக எண்ணிக்கையிலான கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் காரணமாக, மூன்று நாட்களைக்கொண்ட இக்கண்காட்சி, யாழ்ப்பாணத்தில் விருந்தோம்பல் தொழிற்றுறைக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய உந்துசக்தியை வழங்குகின்றது. இக்காலப்பகுதியில் அநேகமான ஹோட்டல்களில் பெரும் எண்ணிக்கையானோர் தங்குகின்றனர் என்பதுடன், நிகழ்வு இடம்பெறும் மூன்று நாட்களில் விருந்தகங்களும் உள்ளூர் வியாபாரிகளும்கூட தமது விற்பனைகளில் அதிகரிப்பைக் காண்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X