2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீனவர்களின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த FAO உதவி

S.Sekar   / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை, நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, புத்தளம், சிலாபம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் வறுமை நிலையிலுள்ள மீனவர்களின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் (FAO) Clhf GBP 880,000 (USD 1,043,395) உதவித் தொகையை ஐக்கிய இராச்சியம் வழங்குகின்றது.

இந்த வாரத்தில் கொண்டாடப்படும் உலக மீன்பிடி தினத்தை முன்னிட்டு, இந்த உதவி பற்றிய அறிவித்தலை வெளியிட்டுள்ள இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன் OBE, “இலங்கையில் மீன்பிடித் துறையானது தற்சமயம் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளது என்பதை நாம் அறிவோம். இத் தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தாம் எதிர்நோக்கும் சவால்களுள் சிலவற்றைச் சமாளிப்பதற்கு உதவும் வகையில் ஐக்கிய இராச்சியம் £880,000 என்ற தொகையை வழங்குகின்றது. குடும்பங்களுக்குத் தேவையான போஷhக்கு உணவுகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருள்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை அதிகரிப்பதிலேயே இந்த உதவி முக்கிய கவனம் செலுத்தும்.' என்று தெரிவித்தார். 

இயந்திரம் பொருத்தப்படாத பாரம்பரிய படகுகளைப் பயன்படுத்தி சிறிய அளவிலான மீன்பிடியில் ஈடுபட்டுள்ள 5,000க்கு மேற்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்குவதற்காகவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்தப் பங்களிப்பை FAO பயன்படுத்த இருக்கின்றது. பாரம்பரியமாக, இந்த மீனவர்களே மீனவர் சமூகத்திலுள்ள மிகவும் வறிய பிரிவினராகக் கருதப்படுகின்றனர். உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு மீனவருக்கும் மாதமொன்றிற்கு 47 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்கு உதவி வழங்கப்படும். இது நிபந்தனையற்ற ஒரு பணப் பரிமாற்றமாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது உடனடி உணவு மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற இப் பண உதவியைப் பயன்படத்த முடியும்.

இந்த முன்முயற்சி பற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கை மற்றும் மாலைதீவுக்கான FAO பிரதிநிதி விம்லேந்திர ஷரன், 'சிறிய அளவில் மீன்பிடிப்பவர்கள் இந்த ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். வாராந்த மீன்பிடி தினங்கள் குறைந்துள்ளன, பிடிக்கப்படும் மீன்களின் தொகை குறைந்துள்ளது, கிராமப்புற மக்களின் கொள்வனவுச் சக்தி குறைந்திருப்பதால் மீன்களுக்கான கிராக்கியும் குறைந்துள்ளது. இவை அனைத்தும் கணிசமான அளவில் மீனவர்களைப் பாதித்துள்ளது. இந்த நெருக்கடி காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு FAO என்ற முறையில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். மீனவ சமூகத்திற்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.' என்று கூறினார்.

FAO அமைப்பு, அதன் பங்காளிகளுடன் இணைந்து, இலங்கையில் நகர்ப்புறங்கள் உள்ளடங்கலாக மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயத்தை ஊக்குவிப்பதுடன் எளிதில் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் மற்றும் மீனவர்களின் அவசர உணவுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் செயற்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X