2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் ஆதரவு

S.Sekar   / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மனித நேய கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 648,148 அமெரிக்க டொலர்கள் (சுமார் 232 மில்லியன் ரூபாய்) தொகையை வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. Mines Advisory Group (MAG) அமைப்புக்கு இந்தத் தொகை வழங்கப்படும். இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றதுடன், இதில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் MAG இன் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டி மெக்லென்னன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

ஜப்பானிய உதவியினூடாக, MAG இனால் முன்னெடுக்கப்படும் 14 ஆவது கண்ணி வெடி அகற்றும் திட்டமாக அமைந்துள்ளது. முன்னைய 13 திட்டங்களினூடாக 2,965,949 சதுர மீற்றர்களுக்கு அதிகமான பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 15,831 க்கு அதிகமான கண்ணி வெடிகள் மற்றும் இதர வெடி பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 259,464 சதுர மீற்றர் காணி விடுவிக்கப்பட எதிர்பார்க்கப்படுகின்றது. இதனூடாக கண்ணி வெடி பாதிப்புள்ள பகுதிகளை உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு மீளக்குடியேறி வாழக்கூடிய பகுதியாக மாற்றியமைக்கவுள்ளது. இதனூடாக 7424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு வழங்கப்படும்.

இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகளை ஆரம்பித்து, இந்த ஆண்டில் MAG தனது 20 வருட பூர்த்தியை கொண்டாடியிருந்தது. 2002 ஆம் ஆண்டில் இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல், ஜப்பானினால் இந்தப் பணிகளுக்காக பாரியளவில் பங்களிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. மொத்தமாக 43.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை Grant Assistance for Grassroots Human Security Project (GGP) திட்டத்தினூடாக வழங்கப்பட்டிருந்தன. கண்ணிவெடி இல்லாத இலங்கையை எய்தும் திட்டத்துக்காக ஆதரவளிக்க ஜப்பான் தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

இந்த மானிய ஒதுக்கீடு தொடர்பில் கிறிஸ்டி மெக்லென்னன் கருத்துத் தெரிவிக்கையில்,;

இலங்கையிலும், சர்வதேச நாடுகளிலும் கண்ணி வெடி அகற்றும் செயற்திட்டங்களுக்கு மனிதநேய அடிப்படையில் நன்கொடை உதவிகளை வழங்கி வரும், ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து இந்த மானியத் தொகையை பெற்றுக் கொள்வதையிட்டு MAG பெருமை கொள்கின்றது. கடந்த எட்டு வருடங்களில் மாத்திரம், MAG ஸ்ரீ லங்கா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்துக்கிடையிலான பங்காண்மை என்பதனூடாக, 16000 கண்ணி வெடிகள் அகற்றப்பட்டும், செயலிழக்கச் செய்யப்பட்டுமுள்ளன. இதனூடாக, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் பலருக்கு தமது சொந்தப் பகுதிகளில் மீளக் குடியேறி வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கு முடிந்துள்ளது. ஜப்பானிய நாட்டு மக்களிடமிருந்தான நிதியளிப்பினூடாக உயிர்களை பாதுகாப்பதற்கு மாத்திரம் பங்களிப்பு வழங்கப்படாமல், நாட்டில் கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலங்களைக் கட்டியெழுப்புவதற்கும் பங்களிப்பு வழங்கப்படுகின்றன. இந்தத் தொடர்ச்சியாக ஜப்பானிய ஆதரவினூடாக, இலங்கையில் இறுதிக் கட்டத்திலுள்ள கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க MAG எதிர்பார்ப்பதுடன், கண்ணி வெடி இல்லாத இலங்கையைக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .