
-எஸ்.ஜெகநாதன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று (06) நடைபெற்றது.
தமது கட்சிக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, மண்டேலாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அக்கட்சியினால் ஓர் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'உலகின் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர்களின் வரிசையில் விடுதலைக்கான சர்வதேச குறியீடாகத் திகழ்ந்த நெல்சன் மண்டேலா அவர்களின் ஆத்மா அமைதி பெற்றமை அறிந்து எண்ணங்களாலும் உணர்வுகளாலும் ஒன்றித்து நிற்கின்ற ஈழதேசத்தவர்கள் தமது கவலைகளையும் அஞ்சலிகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர்கள் வையகம் உள்ளவரை மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார்கள். நெல்சன் மண்டேலாவும் அத்தகைய ஓர் இலட்சியப் போராளி. இரும்பை ஒத்த உறுதியுடன் கறுப்பின மக்களின் விடுதலைக்காய் போராடிய ஒரு நெருப்பு மனிதன்.
வெள்ளை இனத்தவர்கள் இட்ட இரும்பு தடைகளை உடைத்தெறிந்த விடுதலைப் பறவை. தன்னினத்திற்காய் சிறைகளில் தவம் இருந்த சத்திய மனிதன் அவர். தன்னையே தியாகம் செய்து விடுதலையைச் செதுக்கிய சிற்பி.