2025 ஜூலை 26, சனிக்கிழமை

தமிழர் விடுதலை கூட்டணியின் மக்கள் குறைகேள் சந்திப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழர் விடுதலை கூட்டணியின் வன்னித் தொகுதி உறுப்பினர்கள் மக்கள் குறைகேள் சந்திப்பினை நேற்று (08) வவுனியா கன்னாட்டி கிராமத்தில் மேற்கொண்டனர்.

இதன்போது மதகுருமார், கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் கிராமத்தின் தேவைகள் மற்றும் குறைகளை கலந்துரையாடியதோடு கிராமங்களின் பல பாகங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கின் வசந்தம் இருந்தும் கூட மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள், அம்மக்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மீள்குடியேறியும் அடிப்படை வசதியின்றி வாழும் நிலை போன்றன குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டன.

45 குடும்பங்களுக்கு கட்டாய உடனடி தேவையாக மலசலகூடங்கள், 50 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் 23 குடும்பங்களுக்கு மாத்திரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளமை, வனவிலங்குகளினால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறமை, இதற்கு மின்சாரம் இன்மையும் ஒரு காரணமாகின்றமை, காலபோகம் செய்தும் கூட அறுவடை செய்யமுடியாமல் உள்ளமை போன்ற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் இதன்போது விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை விவசாய மானியம் பெறமுடியாமல் உள்ளமை, கிணறுகளில் உள்ள வெடிபொருட்கள் பூரணமாக அகற்றப்படாமை, மழை வெயிலுக்கு ஒதுங்கக்கூடிய பஸ்தரிப்பிடங்கள் அற்ற நிலைமை, அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றத்தால் மக்களின் பூர்வீக காணிகள் பறிபோகின்றமை, காணிப் பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்த்து வைக்கப்படாமை குறித்தும் பொது மக்களால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி தொகுதி உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த வன்னி தொகுதி தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இராஜ. குகனேஸ்வரன், 'மேற்படி குறைகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்ய தம்மாலான முயற்சிகளை செய்வதோடு, போரினால் வாழ்விழந்த வன்னி மக்களின் வாழ்வில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இம்மக்களின் குறைகளையும் தேவைகளையும் எடுத்துக்கூறுவதாகவும்' தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X