Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத், ரொமேஸ் மதுசங்க
புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய சிறு வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டமூலம் இவ்வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கான எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையிலேயே ஆட்சி மாற்றத்துக்கான குரல் வலுப்பெற்றது. அதன்பிரகாரம் தமிழ், முஸ்லிம் மக்களின் பூரண ஆதரவுடன் புதிய ஆட்சி மாற்றம் உருவாகியது.
குறிப்பாக இனப்பிரச்சினைக்கான பொறிமுறையொன்றை கூட தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாமல் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை இன்றி ஆதரித்து வெற்றிபெறச் செய்திருந்தது.
ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் நல்லாட்சியை மையப்படுத்தி தேசிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது, வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களிடம் நேரடியாக குறிப்பிட்டோம்.
முக்கியமாக வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியோர் மாற்றப்பட்டு வடக்கு மக்களின் நன்மதிப்பை அரசாங்கம் பெற்றிருந்தபோதும் அதனைத் தொடர்ந்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடிகளின்றி முன்னெடுப்பதற்கான சில நடவடிக்கைகளை உடன் செயற்படுத்துமாறு நாம் கோரினோம்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக ரீதியாக தமிழ் அதிகாரிகளை நியமிக்கும் படியும், மாவட்ட அபிவிருத்திக்குழு தொடர்பாகவும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்படுவதுடன் இடமாற்றங்கள் அமையவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் இவ்விடயங்கள் தொடர்பாக நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் விரிவாக கூறப்பட்டபோதும் அவ்விடயங்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். கடந்த 9ஆம் திகதி பிரதமர் மற்றும் பொது நிருவாக அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இவ்விடயங்கள் தொடர்பாக மேலும் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் தற்போது 100 நாட்கள் வேலைத்திட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. எனினும் நாம் முன்வைத்த சிறு கோரிக்கைகள் தொடர்பில் ஒன்றைத்தானும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நியமித்துள்ள நிலைமையே காணப்படுகின்றது.
வடமாகாணத்துக்கு மட்டுமே இலங்கை போக்குவரத்துசபை தலைவர் பதவி காணப்பட்ட நிலையில் தற்போது வன்னி அமைச்சர் ஒருவரின் சுயநலத்துக்காக வடக்கு மாகாணம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டு அமைச்சருக்கு சார்பான ஒருவருக்கு பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சருக்காக வடக்கு மாகாணம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டமை மிகவும் பாரதூரமான விடயமாகும். மேலும் வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் உள்ள தமிழ் செயலாளரை மாற்றி தனக்கு சார்பான ஒருவரை நியமிப்பதற்காக, அதே வன்னி அமைச்சர் ஒருவரின் துணையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி நல்லாட்சியிலும் பதவி இடமாற்றம் மற்றும் நியமனங்களின் பின்னணியில் சுயஇலாப அரசியலை மையப்படுத்திய செயற்பாடுகளே காணப்படுகின்றன. இதனை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் காணி அபகரிப்பு, உயர் பாதுகாப்பு வலயம், காணாமல்போனோர் விடயம், அரசியல் கைதிகள் விடுதலை, விதவைப் பெண்களின் வாழ்வாதாரம் போன்ற அடுக்கடுக்காக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளுக்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் கடந்த 100 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படாத நிலையில் 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தை எதிர்வரும் வாரம் நிறைவேற்றியே தீரவேண்டும் என ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள்.
வடக்கு கிழக்கு அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களாக முதலமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்ட குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றுவரையில் பாராமுகமே காணப்படுகின்றது.
எனவே சிறுவாக்குறுதிகளை கூட நிறைவேற்றாத நிலையில் அதனை எவ்வாறு எம்மால் ஏற்று ஆதரவாக வாக்களிக்க முடியும் என்பது கேள்விக்குறியாகவுள்ளது. ஆகவே அத்திருத்தச்சட்டத்துக்கு வாக்களிப்பது குறித்து முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என கூட்டமைப்பின் தலைமையை கேட்டுக்கொள்கின்றோம்.
விட்டுக்கொடுப்புகளின் ஊடாக சரியான தருணங்களை தவற விட்ட பல கசப்பான அனுபங்கள் எமக்கு உண்டு. மீண்டும் அவ்வாறானதொரு ஏமாற்றுச் செயற்பாட்டுக்கு நாம் இரையாகாது தீர்க்கமான முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
தற்போது 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தைத் தொடர்ந்து 20ஆவது திருத்தமாக தேர்தல் சீர்திருத்தத்தையும் மேற்கொள்வதற்கு பெரும்பான்மையின இரு பிரதான கட்சிகளும் முனைப்பாக உள்ளன.
குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனத்தின் துணையாலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற்றது என்பதை ஜீரணிக்க முடியாத பெரும்பான்மை சக்திகள், எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஆகவே அதற்காகவே சிறுபான்மை பிரதிநிதித்துவங்களில் குறைப்பை ஏற்படுத்தும் வகையிலான தேர்தல் முறைமை மாற்றத்தை முன்மொழிந்துள்ளனர். இதனை ஒருபோதும் அனுமதிக்ககூடாது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் வாழ் தமிழ்மொழி பேசும் மக்களின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்ககூடாது.
தேர்தலொன்று அறிவிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படும் நிலையில், எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிராகரிக்கப்பட்டவையாகவே இருக்கையில் தேர்தலை வெற்றி கொள்வதற்கான சகல வியூகங்களையும் கொண்ட செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருப்பதால், நாம் மேற்கண்டவாறு பரிசீலனை செய்யும் நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்' என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025