2025 ஜூலை 09, புதன்கிழமை

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கை பிரஜைக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 மே 09 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு சென்று, மீண்டும் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்த மன்னார்,  தலைமன்னாரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அலெக்ராஜா ஆசிர்வாதம் வியாழக்கிழமை (07) உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற தலைமன்னாரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் அவரது சொந்த இடமான தலைமன்னார் பியர் பகுதிக்கு பாக்கு நீரிணை வழியாக  இந்திய மீனவர்களின் உதவியுடன் வந்துள்ளார்.

தலைமன்னார் பியரைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இந்திய படகு ஒன்றில் வந்துள்ளார்.

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலுள்ள தீடை என அழைக்கப்படும் மண் திட்டியில், இந்திய மீனவர்களினால் விடப்பட்டு சென்ற இவரை, தலைமன்னார் பகுதி மீனவர்கள் மீட்டு கடலில் றோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்கு திரும்பியவரையும் காப்பாற்றிய 3  மீனவர்களையும் கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து நான்கு பேரையும் பொலிஸார் மன்னார் நீதிமன்றில் வியாழக்கிழமை (07) ஆஜர்படுத்தினர்.

குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி  அலெக்ஸ்ராஜா ஆசீர்வாதம,; சட்டவிரோதமாக நாடு திரும்பிய குடும்பஸ்தரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

மற்றைய 3 மீனவர்கள் பிணையில் செல்ல அனுமதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .