2025 ஜூலை 09, புதன்கிழமை

'பேயாடி கூழாங்குளம் காணிப்பிரச்சினைக்கு முடிவு எடுக்கப்படும்'

Gavitha   / 2015 மே 10 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, பேயாடி கூழாங்குளம் காணிப்பிரச்சனை குறித்து வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் பேயாடி கூழாங்குளம் காணிப்பிரச்சனை தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் திருமறைக் கலாமன்றத்தினருடன் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.

வவுனியா, நொச்சிமோட்டை, பேயாடி கூழாங்குளம் ஆகிய பகுதியில் உள்ள பொதுத்தேவைக்கான நிலத்தை வவுனியா பிரதேச செயலாளர் திருமறைக்கலாமன்றம் என்ற அமைப்புக்கு வழங்கியுள்ளதாகவும் அதனை மீட்டுத்தருமாறு கோரியும் பேயாடி கூழாங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அண்மையில் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த காணியில் கட்டட நிர்மாணத்துக்கான ஆரம்ப வேலைகளைச் செய்ய, அப்பகுதி மக்கள் தடையாக இருப்பதாக தெரிவித்து, திருமறைக் கலாமன்றத்தினரால் பொலிஸ் நிலையத்தில் மக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. இதனால் இரு பகுதியினருக்கும் இடையில் முரண்பாடான நிலமை காணப்பட்டது.

இதனையடுத்து இரு பகுதியினரும் இது தொடர்பில் வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் கவனத்துக்கு  கொண்டு வந்ததையடுத்து, இரு பகுதியினரையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்று அமைச்சின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.  

இதன்போது கருத்துத் தெரிவித்த திருமறை கலாமன்றத்தினர்,

குறித்த காணி தமக்கு பல மாதங்களுக்கு முன்னரே பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாம் அதில் முன்பள்ளி மற்றும் கலா மன்றம் ஆகியவற்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். காணியை வழங்கிய போது, அப்பகுதி மக்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை எனவும் தற்போது அடிக்கல் நாட்டுவதற்கு திகதி குறிப்பிட்ட பின்னரே மக்கள் காணிகளை தருவதற்கு மறுப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் கலைகளை அழியவிடாது பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவதாகவும் தமக்கு ஒதுக்கப்பட்ட காணியை தமது தேவைக்கேற்ப தந்துவிட்டு மிகுதியை அப்பகுதி மக்களின் பொது தேவைக்கு எடுக்குமாறும் கோரினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள்,

தமது கிராமத்தின் ஒரு பகுதி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பாடசாலை கூட தற்போது வேறு ஒரு கிராமத்தில் இயங்குகிறது. தமது கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம், முன்பள்ளி மற்றும் பொது கட்டடங்களைக் கட்டுவதற்கு வேறு காணி இல்லை.

இக்காணியை திருமறைக் கலாமன்றத்துக்கு வழங்கினால் தமது பொதுத் தேவைகளுக்கான கட்டடங்களை எங்கு அமைப்பது. திருமறைக் கலாமன்றத்துக்கு வேறு இடத்தில் காணி வழங்க முடியும். ஆனால் எமது கிராமத்தை வேறு இடத்தில் உருவாக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியதுடன், இக்காணியை பிரதேச செயலாளர் திருமறைக் கலாமன்றத்துக்கு வழங்கியது தமக்கு தெரியாது எனவும் இரு பகுதியினரும் தமக்கு இது தொடர்பில் தெரிவிக்கவில்லை எனவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தமது பழமையான கிராமத்துக்கான இந்தக் காணியை தமது கிராமத்துக்கு வழங்காது விடின், தற்கொலை செய்வோம் எனவும் கூறினர். இது தவிர, அப்பகுதி கிராம அலுவலர் சில காணிகளை பிடித்து வேலி போட்டு வைத்துள்ளார்.

அதனை விற்பனை செய்யவும் முயற்சிகள் இடம்பெறுகிறது. அதனையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு அமைச்சரிடம் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .