2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உயிலங்குளம் ஐம்பது வீட்டுத்திட்டத்தில் அடிப்படை வசதியில்லை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்ரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய், உயிலங்குளம் ஐம்பது வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்கள், போதிய அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள உயிலங்குளம் கிராமத்தில், இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஐம்பது வீட்டுத்திட்டத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணிகளற்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர் என 50 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில், தாங்கள் இங்கு குடியேறி நான்கு வருடங்களாகியும் இன்று வரை தமக்கு மின்சார இணைப்புக்கள் வழங்கப்படவில்லை எனவும் தமக்கான மின் இணைப்பை விரைவாக ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைவிட, தினமும் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் பிரதான வீதி முதல், குடியிருப்பு வீதிகள் வரை எந்த வீதிகளும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதுடன் தண்ணீர்வசதி, முன்பள்ளி வசதிகள், பாடசாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்மையால்; 28 குடும்பங்கள் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக துணுக்காய் பிரதேச செயலக அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, 'தற்போது குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய வசதிகளும் படிப்படியாக செய்துகொடுக்கப்படவுள்ளன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .