2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே...

Freelancer   / 2022 மே 20 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

பிரதேச சபையின் அமர்வு நேற்று தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

இறுதி யுத்தம் என்ற பெயரில் அரசாங்கம் திட்டமிட்ட இனப்படுகொலையை அரங்கேற்றியது என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன என உறுப்பினர் பொன்ராசா தெரிவித்தார். 

மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஒரு இனப்படுகொலையாளி எனவும் நவாலி சென்.பீற்றர் தேவாலயம், செம்மணிப் படுகொலை உள்ளிட்ட பல படுகொலைகள் அவரது காலத்திலேயே இடம்பெற்றவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று, கொல்லப்பட்ட உறவுகளுக்காக தீபமேற்றி அஞ்சலி செலுத்திய சந்திரிகா அப்படத்தை தமது முகப்புத்தகத்தில் தரவேற்றி முப்பது வருட காலம் இடம்பெற்றது இனப்படுகொலை என பதிவிட்டிருக்கிறார் எனவும் கூறினார்.

உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், போன்ற இரசாயன ஆயுதங்களை தமிழ் மக்கள் மீது வீசி கொடூரமாக அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என உறுப்பினர் ஜெயந்தன் தெரிவித்தார். 

தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை கனேடிய நாடாளுமன்றமே ஏற்று தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக்காட்டிய அவர், சர்வதேசம் இன்று தமிழர் பக்கம் தமது பார்வையைத் திருப்பியிருக்கின்றது எனவும் கூறினார். 

இத்தீர்மானத்தை முன்வைத்து சபை உறுப்பினர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .