2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நல்லெண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

புதிய அரசு, நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

வவனியாவில் வட மாகாண சுகாதார அமைச்சின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தமிழ் மக்களின் தேசிய ரீதியிலான பிரச்சனைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது, காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருகின்ற  அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.

கடந்த காலங்களில் அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பவற்றினூடாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளுமின்றி  2  முதல்  20  வருடங்களுக்கும் மேலாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது, தடுத்து வைத்திருக்கும்  செயற்பாடானது மனிதநேயமற்ற  செயலாகும். அத்துடன், நல்லாட்சிக்கான அரசாங்கம்  என்ற கருத்திற்கு முற்றிலும் முரணானதாகும்.

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள், உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முன்னைய அரசாங்கங்கள்  இவ்விடயத்தை கவனிக்காது விட்டது  போல, இவ் அரசாங்கமும் பாரா முகமாக இருக்காமல் கரிசனையுடன் நடந்துகொள்ள வேண்டும். நாடு முழுவதிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் 200 இற்கும் அதிகமான தமிழ் அரசியற் கைதிகளின் கோரிக்கையினை கவனத்தில் கொண்டு சாதகமான தீர்வை வழங்க வேண்டியது இவ் அரசாங்கத்தின் அவசியமான பொறுப்பாகும்.


மேலும், அரசியற் கைதிகளின் விடுதலையினை இனவாத மற்றும் பழிவாங்கல் ரீதியில் பார்க்காது தமிழ் அரசியல் கைதிகளினுடைய குடும்பங்களின் பொருளாதார நிலை, அவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற சமூக ரீதியிலான பிரச்சனைகள்  போன்றவற்றை கருத்திற் கொண்டு இவர்களினுடைய விடுதலையை துரிதப்படுத்த வேண்டும்.

முன்னைய அரசாங்கம் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து  அவர்களை விடுதலை செய்தது. இன்று அவர்கள்  தத்தமது  குடும்பங்களுடன் சேர்ந்து பல்வேறு வகையான தொழில் முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர். எனவே, ஜனவரி  8ஆம் திகதியின் பின் அமைக்கப்பட்ட இவ் புதிய அரசாங்கமும்;  அரசியற் கைதிகளின்  விடுதலையினை நல்லெண்ணத்தின் அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டியது கட்டாயமானதாகும்.

மேலும், பல்வேறுபட்ட பொருளாதார இடர்பாட்டிற்குள் வாழ்கின்ற தமிழ் அரசியற்கைதிகளின் குடும்பங்களுக்கு, அவர்களின் விடுதலையின் மூலம் பல்வேறுபட்ட பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்பது உறுதியாகும்.

தமி; அரசியற்கைதிகள் என்று எவருமே இல்லை. குற்றம் புரிந்தவர்களே  சிறைகளில் இருப்பதாக  அண்மையில் நீதியமைச்சர் வெளியிட்ட கருத்தானது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒவ்வாத கருத்தாகும்.  எனவே, தேவையற்ற கருத்துக்களை விடுத்து தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலையினை துரிதப்படுத்த  வேண்டியது இவ் அரசாங்கத்தினது பொறுப்பாகும்.

இதேவேளை, இவ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் நீதி அமைச்சருக்கும் எடுத்துக்கூறியுள்ளோம். இது குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .