2025 ஜூலை 26, சனிக்கிழமை

‘வயல் நிலத்தை பகிராவிட்டால் போராட்டம் வெடிக்கும்’

Yuganthini   / 2017 ஜூலை 30 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

“கிளிநொச்சி - பூநகரி - ஜெயபுரம் கிராமத்துக்கான 548 ஏக்கர் வயல் நிலம் முழுமையாகப் பகிர்ந்தளிக்காவிட்டால், பூநகரி பிரதேச செயலகத்தை முடக்கும் வகையில் போராட்டத்தை முன்னெடுப்போம்” என, ஜெயபுரம் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“1983ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக, அக்கராயன் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டோம்.

“அப்பாடசாலையில் இருந்து, 15 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஜெயபுரம் கிராமத்துக்கு நடந்து வந்து, பற்றைகளைத் துப்பரவாக்கிக் குடியேற்றத்தை உருவாக்கினோம்.

“குடியேற்ற உருவாக்கத்தின் போது, தேவன்குளத்தின் கீழான 548 ஏக்கர் வயல் காணி பகிர்ந்தளிக்கப்படும் வரை, நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனக் கூறியே குடியமர்த்தப்பட்டோம். ஆனால், இதுவரை, அரச நிவாரணமும் இல்லை, வயல் நிலமும் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

“வயல் நிலங்களைப் பகிர்ந்தளியுங்கள் என, ஜனாதிபதி வரைக்கும் கடிதங்கள் அனுப்பியும், இதுவரை பதில் இல்லை. இறுதியாக நடைபெற்ற பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், வயல் நிலத்தைப் பகிர்ந்தளிக்குமாறு வேண்டினோம்.

“தனிநபர் ஒருவர், எமது வயல் நிலத்தில், 30 ஏக்கர் வரை துப்பரவு செய்து பயிர்ச் செய்கை செய்துவருகிறர். அவருக்கு மிதிவெடி ஆபத்து இல்லை. ஆனால், எங்களுக்கு மட்டும் மிதிவெடிகளைக் காரணங்காட்டுவது, எங்களை ஏமாற்றும் செயலாகும்.

“எனவே, எமக்கான வயல் நிலம் பகிர்ந்தளிக்காவிட்டால், பூநகரி பிரதேச செயலகத்தை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X