2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

போராடுவதன் மூலமே உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுக்க முடியும்

Niroshini   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

“சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக வீதியில் இறங்கி சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் தயாராக வேண்டும்” என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“எமது ஊரின் அபிலாஷையை அரசியல் தலைமைகளுக்கு தெளிவுபடுத்த பல ஆண்டுகள் சென்றது. 2006ஆம் ஆண்டு தொடக்கம் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்ததன் மூலமே அரசியல் தலைமைகள் எமது கோரிக்கையினை ஏற்று  அவ்வப்போது வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வந்தது. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தொடக்கம் பிரதமர் வரை வாக்குறுதி வழங்கினார்கள். கடந்த 2015ஆம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தில் இதுவே பேசு பொருளாக இருந்ததுடன், வாக்கு வேட்டைக்கான மூலதனமாகவும் பயன்படுத்தப்பட்டது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி உள்ளூராட்சி அமைச்சர் எமது மண்ணுக்கு நேரடியாகவே வந்து நள்ளிரவு வேளையில் மக்கள் வெள்ளத்தின் முன் பகிரங்கமாக வாக்களித்தார்.

விரைவில் பொலன்னறுவை மாநகர சபை உருவாகும்போது சாய்ந்தமருத்துக்கான உள்ளூராட்சி மன்றமும் ஏற்படுத்தப்படும் எனும் பாங்கில் நம்பிக்கை தரும் விதத்தில் அவர் உறுதியளித்திருந்தார். ஆனால் இம்மாதம் 19ஆம் திகதி அதி விஷேட வர்த்தமானி மூலம் பொலன்னறுவை மாநகர சபை, பொலன்னறுவை பிரதேச சபை என்பன ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எமது நம்பிக்கை வீணடிக்கப்பட்டு, எமது ஊரின் அபிலாஷை கேள்விக்குறியாக மாறுகின்ற நிலைவரம் தென்படுகின்றது.

அடுத்த ஒரு சில மாதங்களில் உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரகடனம் செய்யப்படவிருப்பதனால் இனியும் தாமதிக்காமல் நாட்டினதும் எமது கட்சிகளினதும் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் அனைவரும் வீறுகொண்டெழுந்து- எமது சக்தியை வெளிப்படுத்தும் வகையில்- வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாக எமக்கு தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--