Yuganthini / 2017 ஜூலை 23 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்
“எதிர்வரும் தேர்தல்களில், திருகோணமலை மாவட்டத்தை, ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றுவதை யாராலும் தடுக்க முடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், இன்று (23) தெரிவித்தார்.
கிண்ணியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,
“கடந்த வாரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது, எதிர்வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விரிவாகக் கலந்துரையாடினேன். இதன்போது, கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில், எமது மாவட்டத்தில் காணப்படும் சவால்கள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக முறியடித்து, எனது தந்தை காலத்தில் காணப்பட்டது போன்று, திருகோணமலையை ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக மாற்றுவது தொடர்பாகவும், பிரதமருடன் விரிவாகக் கலந்துரையாடினேன்.
“இங்கு நல்லாட்சியைக் கொண்டு வருவதற்கு ஐ.தே.க ஆதரவாளர்கள் மட்டுமே பாடுபட்டோம். ஆனால், நல்லாட்சி ஏற்பட்ட பின்னர் அதன் பயனை, முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
“கடந்த 2 தேர்தல்களிலும், நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவரே இங்கு பிரதியமைச்சராக உள்ளார். தேர்தலுக்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன் வந்தவர்களும் நல்லாட்சியை ஆதரித்து ஒரு கூட்டம் நடத்தாதவர்களும், இன்று இங்கு அதிகாரத்தில் உள்ளனர்.
“மேலும், எமது போட்டிக் கட்சிகளில், பிரதேசத்துக்கு ஒரு உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் ஐ.தே.கவின் ஒரேயொரு தமிழ் பேசும் உறுப்பினராக, நான் மட்டுமே உள்ளேன். இந்த உறுப்பினர் அனைவரையும் தாண்டி, எமது செயற்பாடுகளை கிழக்கு மாகாணம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
“எமது மாவட்டத்தில் இன முறுகலைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகள் அரங்கேறி வருவதை நாம் அறிவோம். இவ்வாறான செயற்பாடுகளால், மக்களுக்குச் சேர வேண்டிய அபிவிருத்திப் பணிகள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இந்த விடயங்கள் தொடர்பாக, பிரதமரைத் தெளிவூட்டியுள்ளேன். அவரின் வழிகாட்டலில், எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சி, இந்த மாவட்டத்தில் வெற்றி பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
“திருகோணமலையை பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற, ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு தேவையில்லை. நாம் தனித்தே திருகோணமலையைக் கைப்பற்றலாம்” என்றார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago