2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

மலையகத்தில் இரு தினங்களில் 4 பெண்கள் தற்கொலை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் நேற்றும் இன்றும்  வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான்கு பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பெண்கள் தற்கொலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று பெண்களில் இரண்டு பெண்களின் மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த விசாரணைகள் இதுவரை முற்றுப்பெறவில்லை.

பொகவந்தலாவை கியூ  மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்று முன்தினம் இரவு  9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மேற்படி பெண் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டதால் வீட்டுப்பகுதியிலிருந்து புகை கிளம்பி வருவதை அவதானித்த தோட்ட மக்கள்  குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அவதானித்தபோது அந்தப் பெண் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால்  பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையிலிருந்து குறிப்பிட்ட பெண்ணின் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்திய அதிகாரி ஜெயசூரிய தெரிவித்தார்.

இதேவேளை பொகவந்தலாவை ஜெபல்டன் டி.பி தோட்டப் பிரிவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் நேற்றுக் காலை நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர் .

இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 3 மணியளவில் பொகவந்தலாவை குயினாத் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதியொருவர் கழுத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

இவரின் மரணத்திலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். இந்த மூன்று மரண சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் பொகவந்தலாவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் புசல்லாவை சவுக்கமலைத் தோட்டத்தைச் சேர்ந்த புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் தரம் 11இல் கல்வி கற்கின்ற 16 வயது மாணவி ஒருவர் இன்று நண்பகல் வேளையில் கழுத்தில் சுறுக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புசல்லாவைப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--