2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

அனர்த்த நிவாரணம் என்னும் ஏமாற்றம்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஜூன் 11 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 26 ஆம் திகதி அரசாங்கம் களனி கங்கை, களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வள கங்கை ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்ததினால் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினாலும் பல மாவட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளினாலும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காகவும் உதவுமாறு, சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.  

 

ஆனால், அன்றே அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு, சுகபோக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக திறைசேரியிடமிருந்து 369 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம், நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றையும் சமர்ப்பித்தது. 

இந்த வருடத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு சுகபோக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்த முதலாவது முறை இதுவல்ல. கடந்த மார்ச் மாதம் முதல், இந்த நோக்கத்துக்காக அரசாங்கம் 120 கோடி (1,200 மில்லியன்) ரூபாய் ஒதுக்கியுள்ளது.   

எனினும், தொடர்ச்சியாக ஊடகங்கள் மூலம், அது தொடர்பாக எழுந்த எதிர்ப்பின் காரணமாக, குறிப்பாக இயற்கை அனர்த்தத்தைப் புறக்கணித்துவிட்டு, இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டைச் சமர்ப்பித்தமையை ஊடகங்கள் அம்பலப்படுத்தியதன் காரணமாகவும் அரசாங்கம் அசௌகரியத்துக்குள்ளாகியது. 

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வருடம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு வாகனம் இறக்குமதி செய்வதை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அந்த இடைநிறுத்தம் இந்த வருடத்துக்காக மட்டுமே.  

மழை காரணமாக, மேற்படி ஆறுகள் பெருக்கெடுத்ததினால் ஏற்பட்ட வெள்ளமும் களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளும் அண்மைக் காலத்தில் இடம் பெற்ற பாரிய அனர்த்தங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. 

ஏனெனில், இந்த அனர்த்தத்தால் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, இருநூறுக்கு மேற்பட்டோரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சுமார் 90 பேர் காணாமற்போயுள்ளனர். அனர்த்தம் ஏற்பட்டு, சுமார் இரண்டு வாரங்கள் சென்றுள்ளதால் காணாமற்போனோரும் உயிரிழந்திருக்கலாம் என்று ஊகிக்க வேண்டியுள்ளது.  

கடந்த வருடம் களனிப் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தைப் போலன்றி, இம்முறை இரத்தினபுரிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம், மிக விரைவில் பல பகுதிகளையும் மூழ்கடித்தது. 

எனவே, மக்களுக்குத் தமது பொருட்களைப் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்து அகற்றிக் கொள்ளவோ, தாம் அந்த வீடுகளில் இருந்து வெளியேறவோ கிடைத்த கால அவகாசம் மிகக் குறைவாகும். எனவேதான், இந்த அனர்த்தத்தினால் இவ்வளவு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டு இருக்க வேண்டும்.   

வழமையைப்போல், இம்முறையும் சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உடனடியாக முன்வந்தது. இந்திய அரசாங்கம் அந்த விடயத்தில், ஏனைய நாடுகளை விட முந்திக் கொண்டது. இந்தியா, மே 27 ஆம் திகதியே இரண்டு கப்பல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களை அனுப்பியது.   

தமது நாட்டில், இராணுவ ஆட்சி இருந்தாலும் சிவில் ஆட்சி இருந்தாலும், இலங்கையில் புலிகள் அமைப்புக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே போர் நடைபெற்ற காலத்தில் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்துக்கு உதவி வந்திருந்ததும், இலங்கையின் நீண்டகால நண்பனாகக் கருதப்படும் பாகிஸ்தான், கடந்த 30 ஆம் திகதி, நிவாரணப் பொருட்களுடன் கப்பலொன்றை அனுப்பியிருந்தது.

அன்றே, இந்தியா தனது மூன்றாவது நிவாரணக் கப்பலை அனுப்பியிருந்தது. அரபு நாடுகள்,ஈரான், இஸ் ரேல், சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் பணத்தாலும் பொருள்களாலும் இலங்கை அரசாங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு உதவின.  

ஆனால், வெளிநாட்டு உதவிகள் விடயத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடந்த வருடமும் களனி கங்கை பெருக்கெடுத்து, களனிப் பள்ளத்தாக்கில் அவிசாவளை முதல் முகத்துவாரம் வரை, ஆற்றின் இரு மருங்கிலும் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போதும், மாவனெல்லைப் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்ட போதும், இதேபோல் வெளிநாடுகள் தமது தாராளத்தன்மையை வெளிக்காட்டின. 

அந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, வெளிநாடுகள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள், விமானங்களில் இருந்து இறக்கப்படுவதை தொலைக்காட்சி மூலம் மக்கள் காணக்கூடியதாக இருந்தது.  

ஆனால், இந்த வெளிநாட்டு நிவாரணப் பொருட்களில் எந்தளவு, பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டியுள்ளது. 

ஏனென்றால், கப்பல்களில் இருந்தும் விமானங்களில் இருந்தும் நிவாரணப் பொருள்கள் இறக்கப்படுவதை மக்கள் தொலைக்காட்சியில் கண்டார்களே தவிர, அப்பொருள்கள் மக்களிடையே பகர்ந்தளிக்கப்படுவதை ஊடகங்கள் அறிவிக்கவில்லை. நாம் அறிந்த எந்தவொரு இடத்திலும், அப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டதாகத் தெரியவும் இல்லை.  

மக்கள் மத்தியில் இந்த விடயம் தொடர்பாக இருக்கும் சந்தேகத்தைப் பாவித்து, எதிர்க்கட்சியினர் மக்களிடையே பல்வேறு வதந்திகளைப் பரப்பி வருவதையும் காண்கிறோம். வெளிநாட்டு உதவிகளைப் பெறும் நோக்கில், அரசாங்கமே நீரேந்து பகுதிகளில், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறந்து, அனர்த்தங்களை உருவாக்குகிறது என்பது அவ்வாறானதோர் வதந்தியாகும்.   

இலங்கையில் நீண்ட காலமாக வெள்ளமும் மண்சரிவுகளும் இடம்பெற்று வருகின்றன. இலங்கையின் புவியியல் நிலைமை காரணமாகவும் ஆங்கிலேயர் காலத்தில் மலைநாட்டுக் கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காகவும் வர்த்தக பயிர்ச் செய்கைக்காகவும் மலைநாட்டின் காட்டு வளம் பெருமளவில் அழிக்கப்பட்டது. இதன் காரணத்தினாலேயே இத்தகைய அழிவுகள் பிரதானமாக ஏற்படுகின்றன. 

1920 ஆம் ஆண்டுகளிலேயே, அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளுடன் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  
ஈரவலயத்தில் இந்த அனர்த்தங்களை ஏற்படுத்தும் மழைக் கால மேலதிக தண்ணீரை, அதேகாலத்தில் வரட்சியினால் பாதிக்கப்படும் வரண்ட பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லும் பாரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க போன்றோர் 1930 களிலேயே கூறியிருந்தனர். 

வெள்ளமோ அல்லது மண்சரிவோ இலங்கைக்கு புதிய விடயங்கள் அல்ல. எனவே, அனர்த்த தயார் நிலை என்பது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம் அல்ல.  
பிற்காலத்தில், களுகங்கை மற்றும் ஜின்கங்கை போன்ற ஆறுகளில் வெள்ளத் தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டன. களனி ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த பாரிய கற்பாறையொன்று, 1980 களில் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, பிற்காலத்தில் அடிக்கடி பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படுவது ஓரளவுக்குத் தடுக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னரே, அதாவது 29 ஆண்டுகளுக்குப் பின்னரே, கடந்த வருடம் களனிப் பள்ளத்தாக்கில் பாரிய வெள்ளம் ஏற்பட்டது.   

ஆயினும், வருடா வருடம் சிறிய அளவிலாவது வெள்ளம் ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அவ்வாறு இருந்தும் அரசாங்கம் அனர்த்தங்களுக்குத் தயார் நிலையில் இருக்கவில்லை என்பது, கடந்த வருட வெள்ளத்தின் போதும் மண்சரிவின் போதும் தெளிவாகத் தெரிய வந்திருந்தது.  

குறிப்பாக, கடந்த வருட வெள்ள அனர்த்தத்தின்போது, மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் அரசாங்கத்தை விடச் சாதாரண பொதுமக்கள், முன்னணியில் நின்று செயற்பட்டமை சகலரும் அறிந்த உண்மையாகும். சாதாரண மக்கள் எனும்போது, தொண்டர் அமைப்புகள், சமய நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் இப்பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர்.   

கடந்த வருட வெள்ளத்தின்போது, பேருவளை மற்றும் வத்தளை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், கடற்படை வருமுன், வெள்ளத்தால் சூழப்பட்ட மக்களை மீட்கத் தமது படகுகளை அனுப்பியிருந்தனர். 

தொடர்ந்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுத் தமது வீடுகளிலேயே தங்கியிருந்த மக்களுக்கு, ஒரு வார காலமாக இரவு, பகல் உணவளிப்பதில் கடற்படையினர் ஆற்றிய பங்கை நாம் இங்கே குறைவாக மதிப்பிடவில்லை.  
மக்கள், அவ்வாறு கடந்த வருடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் கப்பல்களில் இருந்தும் விமானங்களில் இருந்தும் இறக்கப்படுவதை அவர்கள் தொலைக்காட்சியில் கண்டார்கள். ஆனால், வெள்ளம் வடிந்து சுமார் ஒரு வாரத்துக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு 1,500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியொன்றை அதிகாரிகள் வழங்கினர். 

உண்மையிலேயே, அதில் 1,500 ரூபாய் பெறுமதியான பொருட்கள் இருந்தன என அதிகாரிகள்தான் கூறினர்.   

பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகளுக்கு 10,000 ரூபாய் வழங்குவதாகக் கூறப்பட்டது. அதற்காகப் பாதிக்கப்பட்டவர்கள் படிவமொன்றை நிரப்ப வேண்டியிருந்தது. அத்தோடு, அழிந்த அல்லது சேதமடைந்த பொருள்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காகவென அவற்றின் பெறுமதியையும் கேட்டு மற்றொரு படிவத்தையும் நிரப்பித்தருமாறு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், இரண்டு மாதங்கள் சென்றும் உடனடித் தேவைக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட பணம் வழங்கப்படவில்லை. அதை மக்கள் விடுதலை முன்னணியினர் போஸ்டர் மூலம் அம்பலப்படுத்திய பின், சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர், ‘உடனடித் தேவைகளுக்கான பணம் 10,000 ரூபாய் வழங்கப்பட்டது.  

அந்தந்தப் பகுதியிலுள்ள விகாரைகள், பள்ளிவாசல்கள், கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மூலமும் தனிப்பட்ட முறையில் தனவந்தர்கள் வழங்கிய உதவியாலுமே பாதிக்கப்பட்ட பலர், உயிர் வாழ்ந்தனர். 

ஆயினும், பல தொண்டர் அமைப்புகளும் பிரதான வீதிகள் அருகே வாழ்பவர்களுக்கு மட்டுமே, தமது உதவிகளை வழங்கின. பிரதான வீதிகளுக்கு அப்பால் உள்ளவர்கள் அனேகமாகச் சிறிதளவு உதவிகளையே பெற்றனர்.   

இலத்திரனியல் ஊடகங்கள், நிவாரணப் பொருள்களைச் சேகரிப்பதிலும் விநியோகிப்பதிலும் தமக்கிடையே பெரும் போட்டியில் ஈடுபட்டு இருந்தனர். ‘நாம்தான், இந்த இடத்துக்கு முதன்முதலாக வந்து உதவினோம்’ என்று கூறுவதையே அவர்கள் இலக்காகக் கொண்டு இருந்ததை அவதானிக்க முடிந்தது. 

அவர்களது தொண்டு பாராட்டத்தக்கதாயினும் இந்தப் போட்டியும் தமது உதவிகளுக்காகத் தத்தமது ஊடகங்களில் வழங்கப்பட்ட அசாதாரண விளம்பரமும் நிவாரணப் பணியின் நாகரிகத் தன்மையைப் பற்றிய பல கேள்விகளை எழுப்பின.  

பாதிக்கப்பட்ட மக்களின், சேதமடைந்த பொருள்களுக்கான நட்டஈடாக, 15,000 ரூபாய் வழங்குவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதற்காக ஒரு படிவத்தையும் கிராமசேவகர்கள் விநியோகித்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல்வாதிகள், சில இடங்களில் அடையாளமாகச் சிலருக்கு அந்த நட்டஈட்டை வழங்கினர். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு அந்த நட்டஈட்டுத் தொகை கிடைக்கவில்லை.  
பின்னர், இழந்த சொத்துகளின் பெறுமதியைக் கேட்டு, மேலும் மூன்று படிவங்கள், வருடத்தில் பல சந்தர்ப்பங்களில் விநியோகிக்கப்பட்டன. இறுதியில், ஒரு வருடத்துக்குப்  பின்னர் கடந்த மாதம், ஒரு சிலருக்கு மட்டும் 15,000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தது. 

அதைப் பெற்றவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வெள்ள நிவாரணத்தின் மொத்தப் பெறுமதி 26,550 ரூபாயாகும். மற்றவர்கள் பெற்ற நிவாரண மொத்தத் தொகை 11,200 ரூபாயாகும். இதுதான் அரசாங்கத்தின் வெள்ள நிவாரணமாகும்.  

வெளிநாடுகளில் இருந்து, கப்பல்கள் மூலமும் விமானங்கள் மூலமும் இறக்கப்பட்ட நிவாரணப் பொருள்களைப் பெற்ற எவரையும் களனிப் பள்ளத்தாக்கில் நாம் கண்டதில்லை. இங்குள்ளவர்கள் அங்குள்ளவர்களுக்குக் கிடைத்திருக்கும் என நினைத்தார்கள். அங்குள்ளவர்கள் இங்குள்ளவர்களுக்கு கிடைத்திருக்கும் என நினைத்தார்கள்.  

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து சொத்துகளும் குப்பை மேடாக, அவர்களது வீடுகளின் முன், ஒரு மாதத்துக்கும் மேலாகக் குவிக்கப்பட்டு இருந்தது. ஒரு மாதத்துக்குப் பின்னர்தான் பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகள் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் வாகனங்களைப் பெற்று, அவற்றை அகற்ற வேண்டும் என நினைத்தனர். இதுதான் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X