Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 13 , மு.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜனகன் முத்துக்குமார்
ஈரானிய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலும் ஈரானின் மிகச் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவருமான குவாசிம் சொலெய்மானி, அமெரிக்க ‘ட்ரோன்’ தாக்குதல் மூலம், கொல்லப்பட்டமைக்கு எதிர் நடவடிக்கையாக, ஈராக்கில் அமைந்திருந்த அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்து, ஈரானிய இராணுவம் ஏவுகணைத் தாக்குதலைச் செய்திருந்தமை ஒரு புறம் இருக்க, மறுபுறம், அதே நாள் (07-01-2019) ஈரானில் உக்ரைன் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 176 பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். அதில், 63 கனேடியர்கள் உள்ளடங்குகின்றனர்.
இது தொடர்பான, பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்திருந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனேடியர்கள் மத்தியில் விபத்து தொடர்பில், பல கேள்விகள் இருக்கின்றன ஆனால், விபத்துக்கான காரணத்தை ஊகிப்பதற்கு இது நேரமல்ல; மாறாக, குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், விபத்துக்கான சகல சாத்தியமான காரணங்களையும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்வது அவசியம்” என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, அவர் ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில், இந்த விபத்து முழுமையாக விசாரிக்கப்படுவதையும் கனேடியர்களின் கேள்விகளுக்கு விடை காணப்படுவதையும் உறுதிசெய்ய, எங்கள் அரசாங்கம், அதன் சர்வதேசப் பங்காளிகளுடன் தொடர்ந்து இணைந்து செயற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய, சில நேரங்களில் புலனாய்வாளர்களுக்கு ஒரு வருடத்துக்கும் மேலாக ஆகலாம் என்பது ஒருபுறமிருக்க, ஈரான் - அமெரிக்க மோதல்கள், குறித்த விபத்துத் தொடர்பாகத் தகவல்களைப் பரிமாறுவதில் உள்ள நிலைமைகளை மிகவும் சிக்கலானதாகி விட்டது.
ஈரானிய அதிகாரிகள் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியை, அமெரிக்கா அல்லது போயிங்குக்குப் பரிசீலனைக்கு ஒப்படைக்கப் போவதில்லை என்று கூறியிருந்தமை, குறித்த விடயம் தொடர்பில், ஒட்டுமொத்தத் தகவல்களையும் பெறப்போவது இலகுவான காரியம் அல்ல என்பதைக் காட்டுகின்றது.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர், இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “குறித்த இந்தச் சம்பவத்தை, அமெரிக்கா தொடர்ந்து பின்பற்றும் என்றும் மேலும் உக்ரேனுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க, அமெரிக்கா தயாராக உள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பான எந்தவொரு விசாரணையிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க, அமெரிக்கா தயாராக உள்ளது” என்றும் தெரிவித்திருந்தார்.
மோசமான விமான விபத்துகள் போரியல் காலங்களில் ஏற்படுவது இதுவே முதல்முறை அல்ல. ஜூலை 2014 இல், உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல் உக்கிரம் பெற்றிருந்தவேளையில், ஆர்-17 என்ற மலேசிய விமானம், உக்ரைன் - ரஷ்ய வான் எல்லைப்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.
2001 ஆம் ஆண்டில், உக்ரேனிய விமானப்படை தற்செயலாக, சைபீரியா ஏர்லைன்ஸ் விமானம் 1812 ஐ ஒரு பயிற்சியின் போது சுட்டு வீழ்த்தியமை, 1988 ஆம் ஆண்டில் ஈரான் விமானம் 655 ஐ அமெரிக்கா சுட்டு வீழ்த்தியமை, 1983 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன், கொரிய ஏர்லைன்ஸ் விமானம் 007 ஐ வீழ்த்தியமை, 1973 இல் இஸ்ரேல் - லிபிய அரபு ஏர்லைன்ஸ் விமானம் 114 ஐ வீழ்த்தியமை என யுத்த காலங்களில் சிவில் விமானங்கள், இராணுவ விமானங்கள் எனப் பெரும்பாலும் கருதி வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான, ஒரு விபத்தாகக் குறித்த உக்ரைன் விமான விபத்து இருக்கச் சந்தர்ப்பம் இருக்கும் என்பது சாத்தியம் ஆகும். எனில், உலக வல்லரசுகள் இராணுவ நடவடிக்கைகளுக்கு, யுத்தத்துக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளுக்குச் செலவழிக்கும் மில்லியன் டொலர்களை, பொதுமக்களின் பாதுகாப்புக்காகச் செலவழிக்க முன்வரவேண்டும்; குறிப்பாகப் பொதுமக்களுக்கு பாதகம் விளைவிக்காத வகையில், சர்வதேச அரசாங்கங்கள் தமது அரசியல் இராணுவ நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காகவும் மூலோபாய நன்மைகளையும் குறிவைத்தும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட அத்தனை யுத்தங்களிலும், இராணுவத்தை காட்டிலும் பொதுமக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே, மனித உரிமைச் சட்டம், மனிதாபிமானச் சட்டம், இராணுவ சாசனங்கள் எனப் பல சர்வதேசச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன.
இருந்தபோதும், இன்னமும் மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதைத் தடுக்கத் திராணியற்றே சர்வதேச நாடுகள் இருக்கின்றன.
இனியும், இவ்வாறு ஒரு மிலேச்சத்தனமான அரசியல் இராணுவ காரணங்களின் மத்தியில், பொதுமக்கள் கொல்லப்படாது பாதுகாத்தலுக்குச் சர்வதேசம் சட்டங்களைத் தாண்டி, மனப்பூர்வமாக முன்வருதலே இவ்வாரம் இறந்த அந்த 176 பொதுமக்களுக்கும் நாம் எல்லோரும் செய்யும் இறுதி வணக்கங்களாகவும் மரியாதையாகவும் இருக்கும்.
37 minute ago
47 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
55 minute ago
1 hours ago