2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்தில் வித்தியாசமான பிரசார காட்சிகள்

Thipaan   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பயணங்கள் முடிவதில்லை' என்ற திரைப்படத்தை தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால், தேர்தல் காலம் முடிந்து விட்டால் கிளம்பும் 'பயணங்களும் முடிவதில்லை'. புதிய கட்சி ஆரம்பமானது. ஜி.கே.வாசன், கிராம மக்களிடம் ஆலோசனை என்ற 'பயணத்தை' ஆரம்பித்தார். காங்கிரஸிலிருந்து விலகியதும் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் பயணமாக இது அமைந்தது.

அடுத்து, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 'நமக்கு நாமே' பயணத்தை மூன்று கட்டங்களாகத் தொடங்கியுள்ளார். முதல் கட்டம் ஒக்டோபர் 2ஆம் திகதியுடன் திருச்சியில் முடிகிறது. அடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்டப் பயணங்கள் ஆரம்பமாகிறது. மூன்றாவதாக வைகோ, ஒக்டோபர் 3ஆம் திகதியிலிருந்து 'மறுமலர்ச்சி வேன் பிரசாரம்' தொடங்குகிறார். பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பிரசாரம் ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பயணத்துக்குப் போட்டிப் பிரசாரம்.

இது போதாது என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் டொக்டர் அன்புமணியும் தனது வரைவு தேர்தல் அறிக்கையின் மீது கருத்துக் கேட்டு பிரசாரம் போகப் போகிறார். இப்படி பலரும் தேர்தலை முன் வைத்து பிரசாரக் களத்தில்- பயணமாகவோ, பிரசார வேன் பயணமாகவோ தொடங்கியிருந்தாலும், இந்தமுறை தமிழக பிரசார யுக்தியே மாறிப் போயிருக்கிறது.

திராவிடக் கட்சிகள் பொதுவாக திராவிடக் கொள்கைகள், தமிழ் மொழிப் பிரச்சினைகள், ஆட்சியின் இன்னல்கள் என்று பிரசாரம் செய்து வந்திருக்கிறார்கள். இந்த பிரசாரம் 'தி.மு.க வேண்டாம்' என்று அ.தி.மு.க.வும், 'அ.தி.மு.க வேண்டாம்' என்று தி.மு.க.வும் பிரசாரம் செய்யும் விதத்தில் அமைந்திருக்கும். ஆனால், தற்போது அந்த நிலை மாறி, தி.மு.க.வின் பிரசாரத்தில் முற்றிலும் 'மாநிலத்துக்கு ஒரு மாற்றம் வேண்டும்', 'மாநிலத்துக்கு முன்னேற்றம் வேண்டும்', 'மாநிலத்துக்கு வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகம் வேண்டும்' என்ற ரீதியில் பிரசாரம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. 11 எல்.ஈ.டி வாகனங்களில் பிரசாரம், நீளக்காற்சட்டை சேர்ட்டில் ஸ்டாலின், கரை வேஷ்டியே இல்லாத தி.மு.க.வினர் என்று அக்கட்சியின் பிரசாரமே வித்தியாசப்பட்டு நிற்கிறது.

'மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் கலந்துரையாடல்', 'மாணவர்களுடன் கலந்துரையாடல்', 'முக்கிய செல்வாக்குப் படைத்தவர்களுடன் கலந்துரையாடல்', 'டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பது' என்று இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர பிரசாரத்தை ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். அதுவும் அவர் செய்யும் கலந்துரையாடல்கள் 'வட்ட மேசை மாநாடு' போல் அரங்கம் அமைக்கப்பட்டு அங்கே நடைபெறுகிறது. காங்கிரஸ் ஆட்சி 1967இல் தமிழகத்தை விட்டுப் போனதிலிருந்து இப்போதுதான் முதல் முறையாக வளர்ச்சி, முன்னேற்றம், வெளிப்படையான நிர்வாகம் போன்ற அகில இந்திய பிரசாரக் குரல்கள் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் எதிரொலிக்கின்றன.

இதே பாணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அன்புமணியும் பிரசாரம் செய்கிறார். அவரோ, 'தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் வேண்டாம்' என்று பிரசாரம் முன்னெடுத்துச் செல்லுகிறார். ஸ்டாலினுடைய பிரசாரம் இந்திய பிரதமராக வந்த 'மோடி ஸ்டைல்' பிரசாரம் என்றால், அன்புமணியின் பிரசாரம் 'அமெரிக்க ஜனாதிபதியாக வந்த ஒபாமா ஸ்டைல் பிரசாரம்'ஆக இருக்கிறது. இதுவரை மூன்று வித்தியாசமான போஸ்டர்களை அடித்து தமிழகம் முழுவதும் ஒட்டி விட்டார் அன்புமணி.

முதலில் 'மாற்றம், முன்னேற்றம்' என்று ஒரு போஸ்டர் போட்டார். பின்னர் 'மதுவிலக்கு முதல் கையெழுத்து' என்று ஒரு போஸ்டர் போட்டார். இப்போது '50 ஆண்டு கால ஊழலுக்கு முடிவு கட்டுவோம்' என்று போஸ்டர் போட்டிருக்கிறார்.

முதல் முறையாக வரைவு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மக்கள் கருத்தை கேட்டிருக்கிறார். பிரசாரம் வித்தியாசமாக இருந்தாலும், ஆட்சியைக் கைப்பற்ற வாக்குகள் எங்கிருந்து பாட்டாளி மக்கள் கட்சிக்கு வரும் என்பதுதான் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள மற்றைய கட்சிகள் கேட்கும் கேள்வி.

ஒரு காலத்தில் தி.மு.க. 'தமிழின பிரச்சினைகளைப் பேசும்', அ.தி.மு.க 'பொதுவாக மக்கள் பிரச்சினையைப் பேசும்', பாட்டாளி மக்கள் கட்சி தங்கள் 'வன்னியர் சமுதாயத்துக்கான இட ஒதுக்கீட்டு' பற்றி பேசும். ஆனால், இன்றைக்கு இந்த மூன்று கட்சிகளுமே வித்தியாசமான தேர்தல் களத்துக்கு வந்திருக்கின்றன. அ.தி.மு.க மட்டும் இன்னும் தனது வியூகத்தை வெளிப்படுத்தவில்லை. மற்றைய அனைத்துக் கட்சிகளும் செய்வதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இறுதிக் கட்டத்தில் 'நம் பணியை வைத்துக் கொள்வோம்' என்ற நோக்கில் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

களப் பிரசாரம் மாறுபட்டு நிற்பது போல் தலைவர்களும் மாறுபட்டு நிற்கிறார்கள். தி.மு.க.வின் சார்பில் கலைஞர் கருணாநிதி வீட்டிலேயே இருக்கிறார். 92 வயதில் தீவிர பிரசாரத்துக்கு அவர் செல்ல முடியாது என்றாலும், மு.க.ஸ்டாலின் அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.

இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் டொக்டர் ராமதாஸ் களத்தில் நின்றார். இப்போது அவரது மகன் அன்புமணி ராமதாஸ் களப்பணியில் நிற்கிறார். இப்படி அ.தி.மு.க தவிர அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தின் திசையை மாற்றியிருப்பதற்குக் காரணம் அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை என்று பொதுவாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான்.

சட்டமன்றத்தில் முறையாக மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மக்கள் பிரச்சினை பற்றி விவாதிக்கக் கொடுக்கப்படும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், ஒத்தி வைப்புத் தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்று கம்யூனிஸ்ட் இயக்கங்களே குற்றம் சுமத்தியுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா பதவி விலகி மீண்டும் பதவியேற்பதற்கு முன்பு உள்ள காலகட்டம் 'தமிழகம் நிர்வாகத்தில் சுத்தமாக முடங்கி விட்டது' என்ற சிந்தனை மக்கள் மனதில் எழுந்து விட்டது. முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். 2.42 இலட்சம் கோடி முதலீடுகளைக் கவரும் அளவுக்கு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், தேர்தலுக்கு இன்னும் ஏழே மாதங்கள் இருக்கும் நிலையில், எப்படி இந்த முதலீடுகள் எல்லாம் தொழிற்சாலைகளாக மாறப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

புதிய தொழிற்சாலைகள் இனி வருவதற்கு வாய்ப்பில்லை. ஏற்கெனவே இருந்த நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகள் மாநிலத்தை விட்டுச் சென்றுவிட்டன. முதலீடுகள் பல வெளிமாநிலங்களுக்குப் போகின்றன. 'இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி' தவிர, மாநில முன்னேற்றத்துக்குரிய வளர்ச்சித் திட்டங்கள் வரவில்லை. உட்கட்டமைப்புத் திட்டங்கள் ஏற்படவில்லை- இப்படி முரட்டுத் தனமான பிரசாரங்களில் எல்லா எதிர்க்கட்சிகளும் இறங்கி விட்டன.

அ.தி.மு.க.வின் எதிர்ப்பு மோகத்தில் யாத்திரைகள், பயணங்கள் நடத்திக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை அப்படியே காற்றில் பறக்க விட்டு விட்டன. ' போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகளும் இடம்பெறும் நீதிமன்றம் மூலம் இலங்கை அரசே விசாரித்துக் கொள்ளலாம்' என்று தீர்மானமே ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறி விட்டது. அதுவும் இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேறியிருக்கிறது.

ஆனாலும் முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியிலும், மாநிலத்தில் தி.மு.க.வும் இருந்த போது 'இலங்கைத் தமிழர் பிரச்சினை'யை உயிர் மூச்சாகப் பிடித்துக் கொண்டு கிளப்பியவர்கள் இன்றைக்கு அமைதியாகி விட்டார்கள். ஒப்புக்கு ஓர் அறிக்கை விட்டு மத்திய அரசைக் கண்டித்து விட்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான பணியில் இறங்கி விட்டார்கள்.

உதாரணமாக அன்றைக்கு மத்திய அரசுக்கு துணை போகிறது என்று ஆட்சியிலிருந்த தி.மு.க.வின் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை, இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க மீது வைகோவோ, கம்யூனிஸ்ட் கட்சிகளோ, பாட்டாளி மக்கள் கட்சியோ, ஏன் காங்கிரஸ் கட்சியோ கூட வைக்க மறுக்கிறது. எல்லாவற்றையும் விட தி.மு.க.வே கூட ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க பற்றி இந்த விடயத்தில் விமர்சிக்கவில்லை. காரணம் வருகின்ற 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி என்ற முடிவு இன்னும் ஆகவில்லை. அதனால், இப்போதைக்கு இலங்கை தமிழர் பிரச்சினையை முன் வைத்து பிரசாரம் செய்து கூட்டணிச் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று கருதுகிறார்கள்.

அதனால் 2009, 2011, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் முன்னிலை வகித்த இலங்கை தமிழர் பிரச்சினைகளையே பின்னுக்குத் தள்ளி விட்டு இப்போது தமிழக தேர்தல் பிரசாரம் 'மாற்றம், முன்னேற்றம், வெளிப்படையான நிர்வாகம்' என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது.

இப்பிரசாரங்களைப் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கும் 'திருவாளர் வாக்காளர்கள்', 'எங்கோ புதிதாக கேட்கும் குரல்களாக இருக்கின்றனவே' என்று யோசிக்கிறார்கள். இவர்கள்தானா இப்படிப் பேசுகிறார்கள் என்று எண்ணுக்கிறார்கள். இதுவரை 'இலவசங்கள்' ஆக்கிரமித்த தேர்தல் அறிக்கைகள் இப்போது வித்தியாசமாக வெளியிடப்படுமோ என்று நினைக்கிறார்கள்.

ஆக மொத்தம், தமிழக தேர்தல் பிரசாரம் வழக்கமான பிரசாரத்திலிருந்து விலகி நிற்கிறது. டெல்லியில் தோன்றிய 'அரவிந்த் கெஜ்ரிவால்' போல் தமிழகத்தில் ஒருவர் வருவாரா, அல்லது மீண்டும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டை' என்ற அளவில் உள்ள தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவுக்குள்ளே தமிழக சட்டமன்றத் தேர்தல் போட்டி முடிந்து விடுமா என்பது 'வாக்காளர்களின் முடிவில்' இருக்கிறது. வாக்காளர்களின் முடிவுக்கு காத்திருக்கின்றன கட்சிகள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X