2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

வலிந்து வைக்கப்படும் முற்றுப்புள்ளிகள்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 17 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மப்றூக்

தற்கொலை செய்துகொள்கின்றவர்கள் கோழைகள் என்ற எண்ணம் பெரும்பாலானோரிடம் உள்ளது. அப்படியென்றால், ஆண்களே மிக மோசமான கோழைகள் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. 2013ஆம் ஆண்டில் இலங்கையில் 3,461 பேர் தற்கொலை செய்துகொண்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இவர்களில் 80 சதவீதமானவர்கள் ஆண்களாவர்.

உலகளவிலும் இதுவே நிலைவரம். உலகம் முழுவதும் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களை விடவும் ஆண்களின் தொகை மூன்று மடங்குகள் அதிகளவானதாகும்.

தற்கொலை செய்துகொள்கின்றவர்கள் பலவீனமானவர்கள், வாழ்வை எதிர்கொள்ளத் தெரியாதவர்கள் என்ற வாதம் மிக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, அந்த வாதம் தவறானது என்றும் தற்கொலை செய்துகொள்ளும் தருணத்தில் ஒருவருடைய மன நிலையின் விசித்திரம் பற்றித் தெரியாதவர்களே மேற்சொன்ன வாதங்களை முன்வைப்பதாகவும் ஒரு பிரதிவாதமும் உள்ளது.

தற்கொலை செய்துகொள்கின்றவர்களுக்கு அந்தக் கணத்தில் மரணம் மட்டுமே தீர்வாகத் தெரிகிறது. மரணத்தைத் தவிர வேறு வழிகளில்லை என்று அவர்கள் அந்தக் கணப்பொழுதில் நம்புகின்றார்கள்.

'தற்கொலை செய்துகொள்ளும் உணர்வின் தீவிரத்தினை சாதாரணமாக மதிப்பிட்டு விடக்கூடாது. அந்த உணர்வு - உண்மையானவை, தீவிரமானவை, உடனடியானவை' என்கின்றனர் உளவியலாளர்கள்.

வரலாற்றின் ஆதியிலிருந்து தற்கொலை செய்துகொள்கின்றமை வழக்கத்திலிருந்து வருகிறது. தற்கொலையானது, சில காலகட்டங்களில் தண்டனை முறையாகவும் இருந்துள்ளது. கிறிஸ்துவுக்கு முன்னர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்யியலாளர் சோக்ரடீஸை குற்றவாளியாகக் கண்ட அப்போதைய நீதிமன்றம், அவரை தற்கொலை செய்துகொள்ளுமாறு உத்தரவிட்டமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் என்பவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, தமிழ் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினையும் அதனால் உருவான மன அழுத்தமும் அவருடைய தற்கொலைக்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

தற்கொலை செய்துகொள்வதற்கான பிரதான காரணம் மன அழுத்தமாகும். தற்கொலை உணர்வு திடீரென எழுவதல்ல. அந்த உணர்வு உள்ளுக்குள் புகையத் தொடங்கும்போதே, அதற்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுவிடலாம். ஆனால், அவற்றினை அலட்சியம் செய்யும்போது, ஒரு கட்டத்தில் புகைந்து கொண்டிருக்கும் அந்த உணர்வு தீப்பிடித்துக்கொள்ளும் - தற்கொலை நிகழும்.

எமது மூளையில் சுரக்கும் 'செரடோனின்' என்ற இரசாயனப்பொருள் குறைவாக சுரக்கும்போது மன இறுக்கம் மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. 'செரடோனின்' சுரப்பதைத் தூண்டிவிடும் மருந்துகளைக் கொடுப்பதால் தற்கொலை எண்ணத்தினைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை தற்போதைய காலகட்டத்தில் மிக அதிகமாக உள்ளது. அதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அண்மையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு வைத்தியசாலையில் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த வைத்தியர், குறித்த பெண் உளரீதியான பாதிப்புக்குள்ளாகி இருப்பதை அறிந்து கொண்டார். அந்தப் பெண் இள வயதுடையவர். அவரின் கணவர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார். கணவரின் நீண்டகாலப் பிரிவே, அந்தப் பெண்ணுக்கு உளரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்குப் பிரதான காரணமாக இருப்பதைப் புரிந்துகொண்ட வைத்தியர், அவரை உளவியல் வைத்தியர் ஒருவரை நாடுமாறு சிபாரிசு செய்தார். ஆனால், குறித்த பெண், தான் உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி இருப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். உளரீதியான சிகிச்சையினைப் பெற்றுக்கொள்வதென்பதை அவமானகரமானதொரு விடயமாக அந்தப் பெண் எண்ணியதால், சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளாமலேயே வீடு திரும்பி விட்டார்.

உளவியல் நோய் குறித்த தெளிவும் விழிப்புணர்ச்சியும் இல்லாமை எமது சமூகத்திலுள்ள மிகப்பெரும் பிரச்சினைகளில் ஒன்றாகும். ஏனைய நோய்களைப் போலவே உளவியல் பிரச்சினையும் ஒரு நோய் என்பதைப் புரிந்துகொள்கின்ற பக்குவம், படித்தவர்கள் மட்டத்தில் கூட இன்னும் ஏற்படவில்லை. அதனால், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளவர்கள், அதற்குரிய சிகிச்;சையினைப் பெறுவதற்கு வெட்கப்படுகின்றார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களில் பெரும்பாலானவர்களும் அவ்வாறுதான் யோசிக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையினையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

தற்கொலை உணர்வினால் பாதிக்கப்படும் ஒருவர், பல்வேறு அறிகுறிகளை வெளிக்காட்டத் தொடங்குவார். எதிலும் பிடிப்பில்லாதிருத்தல், கவலையற்று நடந்துகொள்தல் போன்றவற்றினை குறித்த நபரில் நாம் அவதானிக்க முடியும். மேலும், உறவுகளைச் சந்திப்பதோடு, தன்னிடமிருக்கும் பெறுமதி வாய்ந்த பொருட்களையெல்லாம் அவர் ஒப்படைக்கத் தொடங்குவார். அடிக்கடி எரிச்சலடைதல், வழக்கமான வேலைகளில் நாட்டமின்மை, திடீரென அழுகை, கோபம், துக்கம் ஆகிய உணர்வுகளுக்கு ஆட்படுதல் போன்றவையும் தற்கொலை உணர்வின் அறிகுறிகளாகும். ஆயினும், இவ்வாறான அறிகுறிகளை வெளிப்படுத்தும் எல்லோரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று கூறிவிட முடியாது.
தற்கொலை உணர்வினை ஒருவர் வெளிக்காட்டும்போது, அவருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் அல்லது உளவியல் மருத்துவத்தினை உடனடியாகப் பெற்றுக்கொடுத்தல் அவசியமமாகும்.

உலகில் அதிக தற்கொலை நிகழும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது கயானா. இங்கு வருடமொன்றுக்கு ஒரு இலட்சம் பேரில் 44 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அந்த நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் ஏழரை இலட்சமாகும். ஆயினும், இங்கு முழு நேர உளவியல் வைத்தியர்கள் 10 பேருக்குள் மட்டுமே உள்ளனர். உளவியல் ரீதியான உதவிகளுக்கு அங்கு வேறு வழிகள் இல்லை என்பதும் அந்த நாட்டில் அதிகளவான தற்கொலைகள் இடம்பெறுவதற்கு ஒரு காரணமாகும்.
மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்போது தோன்றும் தற்கொலை உணர்வானது, எவ்வளவு பெரிய புத்திசாலியையும் தோற்கடித்து விடும். வரலாற்றில் அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அவற்றில் ஓர் உதாரணமாக ஏர்னஸ்ட் ஹெமிங்வே எனும் ஆளுமையைக் குறிப்பிட முடியும். ஏர்னஸ்ட் ஹெமிங்வே என்பவர் 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த மிகப் பெரும் நாவலாசிரியர், சிறுகதையாளர், ஊடகவியலாளர். இலக்கியத்துக்கான நோபல் பரிசினையும் வென்றவர். 1961ஆம் ஆண்டு தன்னுடைய 61ஆவது வயதில், ஒருநாள் தற்கொலை செய்துகொண்டார்.
ஏர்னஸ்ட் ஹெமிங்வே தொடர்பான ஆச்சரியம் என்னவென்றால், இவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்தார். இவருடைய சகோதரரும் தற்கொலை செய்து கொண்டார். சகோதரியின் மரணமும் தற்கொலையினாலேயே நிகழ்ந்தது. கடைசியில் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் பேத்தி கூட தற்கொலை செய்து கொண்டார்.
'தற்கொலை செய்யும் முடிவை எடுப்பவர்கள், தங்கள் தற்கொலை மூலம் பழிவாங்கல், வலியிலிருந்து தப்பிப்பது, மீட்பு மற்றும் தியாகம் போன்ற விஷயங்கள் நிறைவேறுவதாக நம்புகிறார்கள்' என்று சமூக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நாம் வாழும் கலாசாரச் சூழலுடன் தொடர்புடைய உயிரியல், மரபியல் மற்றும் சமூகக் காரணிகள்தான் இந்தக் கற்பனைகளை விளைப்பதாகவும் சமூக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட எட்டு இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தற்கொலை செய்துகொள்பவர்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமானவர்களாவர். 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின்படி, உலகில் தற்கொலை அதிகமான நடைபெறும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இங்குள்ள ஒரு இலட்சம் பேரில் 28 பேர் வருடத்தில் தற்கொலை செய்துகொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த தற்கொலைகள் பற்றிய தவல்களின்படி 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட பெண்கள்தான் தற்கொலையில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை 50, 59 வயதைக் கொண்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுமே அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த வயதுப் பிரிவு அவதானத்துக்குரியதாகும்.

இலங்கையில் போர்க்காலத்தில் மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களும் வலிகளும் அவர்களை மிக மோசமான உளப்பாதிப்புகளுக்கு உள்ளாக்கி இருக்கின்றன. ஆனால், அவ்வாறு உளரீதியான பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு இதுவரையில் முழுமையான உளவள சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலையில் உளவள சிகிச்;சைப் பிரிவொன்று சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு உளநோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட பலர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த இளம் தமிழ்ப் பெண்களாவர். இவர்களில் மிக அதிகமானோர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் தமது கணவன்மார்களை இழந்தவர்களாகவும் உள்ளனர். இதேவேளை, இவர்கள் வறுமையில் சிக்கித் தவிப்பவர்கள்  என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கான காரணங்களில் வறுமையும் ஒன்றாகக் கூறப்படுகிறது. உலகில் நடைபெறும் தற்கொலைகளில் முக்கால்வாசி அளவானவை வறுமை அதிகமுள்ள நாடுகளிலேயே இடம்பெறுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
பொதுவாக தற்கொலைக்கு எதிரான குரல்களும் அவற்றினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் உலகம் முழுவதும் இடம்பெற்று வருகின்றன. பெரும்பான்மையான மதங்களும் தற்கொலையை வெறுத்து ஒதுக்கியுள்ளன. உதாரணமாக, தற்கொலையினை இஸ்லாம் மிகக் கடுமையாகத் தடுத்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவர்களின் புகலிடம் நரகம்தான் என்று குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.

நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக தற்கொலையினை நாம் அங்கிகரிக்க முடியாது. ஆனாலும், உலகளவில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தற்கொலைத் தாக்குதல் என்ற பெயரில், உயிரை மாய்த்துக் கொள்ளுவதை ஊக்குவித்து வருகின்றமை, மனித குலத்தின் சாபக்கேடாகும்.

வாழும்வரை போராடு என்பதற்கும் சாகும்வரை போராடு என்பதற்கும் அர்த்தம் ஒன்றுதான். என்றாலும், மனதளவில் அவை இரண்டும் ஏற்படுத்தும் தாக்கங்கள் வித்தியாசமானவையாகும். எமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையின் பெறுமதி, நாம் நம்பிக்கொண்ருப்பதை விடவும் பெறுமதியானது.

 


 

 

 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X