2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வாழும் உரிமை யாருக்கு?

Menaka Mookandi   / 2016 ஜூலை 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி

இந்தப் பூமி தோன்றிய காலத்திலிருந்தே, உலகிலுள்ள உயிரினங்களை கண்ணும் கருத்துமாக காப்பாற்றியும் பாதுகாத்தும் வரும் ஒரே ஓர் உயிரினம், மனித இனம் மாத்திரமேயாகும். அதற்காகத்தான், விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக, அவற்றுக்கு ஆதரவான பல சட்டங்களை இந்த மனித இனம் மேற்கொண்டு வருகின்றது. இதனால்தான், மிருகபலி, ஜல்லிக்கட்டு, கோழிச்சண்டை போன்றவற்றுக்கான தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவ்வாறான தடைகள் மற்றும் சட்டங்களை மீறியும், மிருகங்களை வதைப்பதை சிலர் நிறுத்துவதாக இல்லை. இவ்வாறு, விலங்குகள் வதைக்கப்படுவதைப் பார்க்கும்போது இது மாதிரியான தடைச்சட்டங்கள் இல்லையெனில், இனி எந்த உயிரினமும் இந்த பூமியில் வாழ முடியாது என்ற நிலைமை உருவாகிவிடும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காளியம்மன் கோவிலில் மிருகபலி கொடுக்கும் பூஜை குறித்து, அண்மைக் காலங்களாக சர்ச்சைகள் எழுந்து வந்தன. பௌத்த நாடு என்ற அடிப்படையில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என, சிலர் வாதிட்டு வருகின்றனர். இது இந்த நாட்டின் பௌத்த மற்றும் இந்து மதங்களுக்கு இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், மனித உயிரைக் காப்பாற்றுவதற்கு ஓர் உயிரை பலி கொடுப்பது தப்பில்லை என்பதே காளி கோவில் நிர்வாகத்தினரின் வாதமாக இருக்கின்றது. உலகில் பழமையான நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும், மிருகபலியை தமது வரலாற்றில் வௌ;வேறு காலகட்டங்களில் கடைப்பிடித்து வந்துள்ளனர். அந்த வகையிலேயே, இந்தக் கோவிலிலும் மிருகபலி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே நிர்வாகம் கூறுகிறது.

மிருகபலி என்பது மத அடிப்படையில் மதச் சடங்குகளுடன் ஒரு மிருகத்தைக் கொல்வதாகும். இவ்வழக்கம், கடவுள் அல்லது கடவுளர்களைத் திருப்திப்படுத்தி, தமக்கு வேண்டுதலைப் பெற்றுக் கொள்வதற்காக பல மதங்களில் பல ஆயிரமாண்டுகளாக நடைமுறையிலிருந்து வரும் வழக்கமாகும்.

யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், தென்னமெரிக்காவின் அஷ்ரெக் போன்ற ஆதிக்குடியினர் மட்டுமன்றி, தமிழர்களும் கடவுளை மகிழ்ச்சிபடுத்த மிருகங்களைப் பலியிட்டுள்ளனர். மிருகங்களுடன் போராடுவது அல்லது மதம் சம்பந்தமான சடங்குகளுக்காக மிருகங்களைப் பலியிடும் பழமையான பாரம்பரியத்தின் கலாசார  தொடர்புகளை இன்றும் ஸ்பானிஸ் நாட்டவர்களின் மாட்டை அடக்குதல், தமிழர்களில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்களிலும் மத அடிப்படையில் மதச் சடங்குகளுடன்  மிருகங்களைப் பலியிடுவதை யூதர்களும் முஸ்லிம்களும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முன்னேஸ்வரத்தில் மட்டுமன்றி  யாழ்ப்பாணத்தில் பல  கிராமங்களிலுள்ள வைரவர் கோவில்களிலும் அண்ணமார் கோயில்களிலும் வேள்வி என்ற பெயரில் ஆண்டு தோறும் பெரிய அளவில் மிருகபலிகள் நடைபெறுகின்றன. இருப்பினும், அண்மையில் அதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. சமுதாயத்திலுள்ள மூடக்கொள்கைகளையும் மதத்துக்கு முரணான செயல்களையும் தடுக்கும் உரிமை, நீதிமன்றங்களுக்கும் சமய அமைப்புக்களுக்குமே உரியதாகும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை இந்து மாமன்றம், யாழ். மேல் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை வரவேற்றிருந்தது.  

இவ்வாறாக, சகல உயிரினங்களும் இறைவனின் குழந்தைகளென்றும் அவ்வாறான அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையே மதங்கள் வலியுறுத்துகின்றன. இதனையும் மீறி, மிருகபலி கொடுப்பதும் மிருகங்களை வேட்டையாடுவதும், வதைப்பதும் மனித இனத்துக்கு உகந்ததல்ல என்பதையே மதங்கள் போதிக்கின்றன. இந்த மிருகபலி என்ற சர்ச்சை ஓய்ந்துப்போயுள்ள நிலையில், மிருகங்களை கொடூரமான முறையில் வேட்டையாடுவது தொடர்பான சம்பவங்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  

கடந்த மார்ச் மாதமளவில், ஈவிரக்கமில்லா முறையில் ஒரு கழுகின் தோலை உரித்து, பின்னர் அதன் கால்களை வெட்டிக் கொல்ல முயலும் காட்சிகளின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. காலி, வஞ்சவல எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்களே இந்தக் கொடூரத்தை மேற்கொண்டார்கள் என்றும் அவர்களுக்கு எதிராக, தாவரங்கள் மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இரக்கமில்லாத விலங்குக் கொலைக் குற்றஞ்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்களேயான நிலையில், வித விதமான வன விலங்குகளை வேட்டையாடி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்த அறுவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது. மான், காட்டுப்பூனை, வெளவால், முயல், மரை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, காட்டுக்கோழி மற்றும் மர அணில் போன்றவற்றை வேட்டையாடியிருந்த இவர்கள், அவற்றை தொங்கவிட்டு, தோலுறித்தது மாத்திரமன்றி, நெருப்பில் சுட்டு சாப்பிடுவதற்கு தயார் செய்யும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இருப்பினும், இந்தப் புகைப்படங்களில் அடங்கிய காட்சிகள், இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், மடுல்கெலே என்ற பிரதேசத்தில் இடம்பெற்றவை என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது. பன்வில மற்றும் நாவுல போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி சந்தேகநபர்கள் வசமிருந்த எயார் ரைபிள்கள் இரண்டு, காஸ் மூலம் இயங்கும் பிஸ்டள் ஒன்று என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

சந்தேகநபர்கள் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களைக் கொண்டு, பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றை அடுத்து, சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், சட்டத்தரணியொருவரின் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்தே, ஏனைய சந்தேகநபர்கள் ஐவரும், பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்தே, அவர்கள் அனைவரும் தெல்தெனிய பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை நாளை வியாழக்கிழமை (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பிரதான சந்தேகநபர், தனியார்த் தோட்டமொன்றின் உரிமையாளர் என்று கூறப்படுகிறது. இவர்கள் 20, 22, 28, 30, 33 மற்றும் 42 வயதுடையவர்கள் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சாஜித் மொஹமட் சரான், நலிந்த வீரதுங்க, ரவீந்திர வீரதுங்க, ருவன் சஞ்ஜீவ, மருதன் நந்தகுமார் மற்றும் சந்திரசேகரன் விஜயகாந்த் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பன்வில, புனித ஜோன் தோட்டம், மடுல்கெலே பிரதேசத்தில், கடந்த 5 வருடங்களுக்கு முன்னரே, இந்த வேட்டைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டி மாவட்டத்துக்கு உட்பட்ட பன்வில பிரதேசத்தின் நக்கிள்ஸ் வனப்பகுதியிலேயே முள்ளம்பன்றிகள், காட்டுப் பன்றிகள் என்பன வேட்டையாடப்பட்டுள்ளன. இவர்களால் வேட்டையாடப்பட்ட காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள், சில நாட்களாகவே தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வந்துள்ளன. இந்நிலையிலேயே, இவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், தனது நண்பர்களுடன் இணைந்து, பாரியளவில் விலங்குகளை வேட்டையாடி உள்ளார் என்றும் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரிதொரு மனநோயே, வேட்டையில் ஈடுபடுவதற்கான காரணமாக அமைந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதால், அவரை மனநோய் வைத்தியரொவரிடன் முன்னிலைப்படுத்தி சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அவரது தந்தைக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், காட்டு விலங்குகளை வேட்டையாடுவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காலம் கணிந்துள்ளது என்று தெரிவித்துள்ள வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்டங்களை மேலும் பலப்படுத்தி, கடுமையான தண்டனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 30 வருடங்கள் பழமையான வனஜீவராசிகள் சட்டத்தை, முழுமையாக திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான சட்டக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைப் போன்று, மிருகங்கள் மற்றும் மரம், செடி, கொடிகளுக்கும் வாழும் உரிமை உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதையும் அமைச்சர் பெரேரா சுட்டிக்காட்டியிருந்தார்.

வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் அவற்றை வாழ வைப்பதிலும், இலங்கையர்களுக்கு வரலாற்று ரீதியான பந்தம் உள்ளது. மானொன்றை வேட்டையாடுவதற்கென அதனை துரத்திச்சென்ற தேவநம்பியதிஸ்ஸ மன்னனை, 'திஸ்ஸ, திஸ்ஸ' என்று சாந்தக் குரலில் அழைத்த, இலங்கைக்கு பௌத்த மதத்தைக் கொண்டுவந்த மஹிந்த தேரர், உயிரின் பெறுமதியையும் தர்மத்தையும் மன்னருக்கு போதித்தார். 'மன்னரே, நீர் இந்த பூமியின் பாதுகாவலர் மட்டுமே. தவிர, உரிமையாளர் அல்ல. உமக்கு உள்ள உரிமை மற்றும் சுதந்திரம் என்பன, இப்பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உள்ளது' என்று மஹிந்த தேரர் போதித்ததை வரலாற்றுச் சம்பவமாகும்.

இது தவிர, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையைக் கொண்ட இலங்கை, விலங்குகளின் வாழும் உரிமையைக் காக்கும் கடப்பாட்டில் உள்ளது. அதனால், அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. இந்நிலையில், வனவிலங்குகளை வேட்டையாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான தண்டனை, அபராதத்துடன் நின்றுவிடாமல், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இனியொரு கொடுமை நடக்காத வகையில் அமைவதாகவும் இருத்தல் வேண்டும் என்பதே அனைவரதும் வேண்டுகோளாக உள்ளது.

அத்துடன், மேற்படி விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள 'எயார் கன்' துப்பாக்கிகளுக்கும் தடை விதிக்கும் யோசனையொன்றை, வினஜீவராசிகள் அமைச்சர் முன்வைத்துள்ளார். அனுமதிப் பத்திரம் இன்றியே, மேற்படி துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்யக்கூடிய நிலைமை, இலங்கையில் உள்ளது. இதனால், வனவிலங்குகளுக்கு மாத்திரமின்றி, மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும். இவ்வகையான துப்பாக்கிகள், இளைஞர் மத்தியில் பாவனைக்கு வருமாயின், அமெரிக்காவில் இடம்பெறும் வகையிலான குற்றங்கள், இலங்கையிலும் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.  இன்று இந்த பூமியில் பல உயிரினங்கள் காணாமல் போய்விட்டன.

புலி கூட தனக்கு பசிக்கும்போது மட்டுமே ஒரே ஒரு மானை அடித்துச் சாப்பிடுகிறது. ஏனெனில், அடுத்த நாள் சாப்பிட மான் வேண்டும் என அதற்குத் தெரியும். ஆனால், இந்த மனிதனின் பேராசை ஊருக்கே விருந்து வைக்க கும்பல் கும்பலாக மானை வேட்டையாடியது மட்டுமில்லாமல், புலிப் பல், புலித்தோல் வேண்டும் என அந்த புலியையும் விட்டுவைக்காமல் முடித்துக் கட்டிவிட்டனர். இந்த இயற்கையின் சுழற்சி சக்கரத்தை அறுப்பதில் மிகவும் முனைப்பாக செயற்படுவது இந்த மனித இனத்தை தவிர வேறு யாருமாக இருக்க முடியாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .