2021 மே 15, சனிக்கிழமை

பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது : முஸ்ஸில்

Niroshini   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

சிறுவர் உரிமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என திருகோணமலை மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்ஸில் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிண்ணியா அல் இர்பான் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் இன்று வியாழக்கிழமை காலை அதிபர் எம்.எஸ்.நசூர்தீன் தலைமையில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை சமவாயத்தை ஏற்றுக் கையெழுத்திட்ட முதன்மை நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும்.

இலங்கை இருமுகத் தன்மை கொண்ட நாடு என்ற வகையில் அந்த சமவாயத்தை அமுல்படுத்துவதற்காக பல்வேறு உள்நாட்டுச் சட்டங்களை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இதில் முக்கியமானது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டமாகும். இந்த அதிகார சபை சிறுவர் உரிமைகள் தொடர்பாக மிகப் பெறும் பணியாற்றி வருகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த அதிகார சபையின் விரைவு தொலைபேசி இலக்கமான 1929க்கு அழைப்பை ஏற்படுத்தி முறையிட முடியும். இதன் மூலம் துரித நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அதேபோல 14 வயது வரையிலான பிள்ளைகளுக்கான கட்டாயக் கல்விச் சட்ட அமுலாக்கம், சிறுவர் அபிவிருத்தி அமைச்சு உருவாக்கம், பிரதேச செயலகங்கள் தோறும் சிறுவர் உரிமை தொடர்பான உத்தியோகத்தர்கள் நியமனம், பிள்ளைகளை கொடிய நோயிலிருந்து பாதுகாப்பதற்கான தடுப்பூசித் திட்டம்,சத்துணவுத்திட்டம்,தற்போது கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் போஷாக்குணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்றது.

நல்ல முறையில் கல்வி கற்று ஒழுக்கசீலர்களாக இந்த நாட்டில் வாழ்வது தான் நீங்கள் செய்யும் கைம்மாறு. இந்தக் கைம்மாறின் எல்லா நன்மைகளையும் அனுபவிக்கப் போவது நீங்கள் தான். அதற்கு பின்னர் தான் உங்களது பெற்றோர் பெருமையடைவர். நீங்கள் கற்ற பாடசாலை, உங்களுக்காக செலவு செய்யும் அரசாங்கம் ஆகியன பெருமையடையும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .