2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

'இலங்கை அணியிடம் நம்பிக்கையுள்ளது'

Shanmugan Murugavel   / 2016 மே 23 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணி இவ்வாண்டில் பங்குபற்றியுள்ள 16 போட்டிகளில், 12 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதோடு, மூன்றே மூன்று போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. ஆசியக் கிண்ணம், உலக இருபதுக்கு-20 தொடர் என, பெரிய தொடர்களில் தோல்வியடைந்துள்ள அவ்வணி, இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளிலேயே, ஓர் இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.

இலங்கை அணியின் தோல்வியை வர்ணித்த அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 'வெட்ககரமான தோல்வி" எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் அண்மைக்காலத்தில் தெரிவிப்பது, இதுவொன்றும் முதற்றடவை கிடையாது. ஆனால், இலங்கை அணியின் உப தலைவரான டினேஷ் சந்திமால், இலங்கை அணி நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

'நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் தான், ஆனால் நாங்கள் நல்ல மனநிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் கடுமையாகப் பயிற்சி செய்கிறோம், மற்றையவருக்கு உதவுகிறோம். எங்களுடைய உடற்றகுதியும் கவனிக்கப்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு வெற்றிகளைப் பெறுவது எங்களுக்கு முக்கியமானது. அந்த வெற்றிகளை விரைவில் பெற்றால், அந்தத் தன்னம்பிக்கை காரணமாக நாங்கள் தொடர்ந்து செல்ல முடியும்" எனத் தெரிவித்தார்.

இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களில் ஓரளவு அனுபவமிக்கவரான டினேஷ் சந்திமால், முதலாவது போட்டியில் சறுக்கியிருந்தார். முதல் இனிங்ஸில் 15 ஓட்டங்களைப் பெற்ற அவர், இரண்டாவது இனிங்ஸில் 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். முதல் இனிங்ஸில் பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இனிங்ஸில் மொயின் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார்.

'இரண்டாவது இனிங்ஸில், பந்து அந்தளவுக்குச் சுழலும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒழுங்கான அடியொன்றை நான் அடிக்கவில்லை எனச் சொல்ல முடியும், அதுகுறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால், பந்தை நான் அடிக்கும் முறை குறித்து, நான் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்" என அவர், தனது ஆட்டமிழப்புக் குறித்துத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .