2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

பறிபோகிறது அஸார் அலியின் இடம்?

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவரான அஸார் அலி, அவ்வகைப் போட்டிகளின் தலைமைப் பதவியை மட்டுமல்லாது, அவ்வணியில் இடத்தையும் இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார். அஸார் அலியில் நம்பிக்கை இழந்துள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஹாரியார் கான் தெரிவித்துள்ளதையடுத்தே, இந்த எண்ணம் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 2015இல் அணித்தலைவராக அறிவிக்கப்பட்ட அஸார் அலி, தான் தலைவராகப் பதவி வகித்த 19 மாதங்களில், கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளார். அவர் தலைமை வகித்த 9 தொடர்களில், 4 தொடர்களில் மாத்திரம் வெற்றி கிடைத்துள்ளது. அவற்றில் இரண்டு, சிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு எதிரானவையாகும்.
அதேபோல், அவரின் தலைமையின் கீழ், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தரப்படுத்தலில் அவ்வணி, 9ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஷஹாரியார் கான், "ஒரு வீரராக, ஒரு மனிதராக, அஸார் மீது எமக்கு திருப்தி காணப்படுகிறது. ஆனால் அவரது தலைமைத்துவத் திறமைகள் குறித்து எமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அத்தோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில், அவரது இடம் குறித்தும் சந்தேகமுள்ளது.

"உண்மையில், இங்கிலாந்துத் தொடருக்குப் பின்னர், அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கினோம். ஆனால், இணைந்த முடிவாக, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும் அவரைத் தொடர்வதற்கு அனுமதியளித்தோம். அந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற பின்னர், அணித் தலைவர் குறித்து முடிவெடுப்பது கடினமானது" என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், மாற்றமொன்றை ஏற்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடி வருவதாகவும், பயிற்றுநர் மிக்கி ஆர்தரும், மாற்றத்துக்கு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு, மிஸ்பா உல் ஹக் ஓய்வுபெற்ற பின்னர், 3 வகையான போட்டிகளுக்கும் மலைவராக, சப்ராஸ் அஹமட் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--