2021 மே 12, புதன்கிழமை

லிவர்பூல், செல்சி, யுனைட்டெட் வெற்றி; சிற்றி, ஆர்சனல் தோல்வி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 22 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறிமியர் லீக் தொடரில் லிவர்பூல், செல்சி, மன்செஸ்டர் யுனைட்டெட், லெய்செஸ்டர், வெஸ்ட் புரோம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

இதில், மன்செஸ்டர் சிற்றி, லிவர்பூல் அணிகளுக்கிடையிலான போட்டியில், பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முன்னணியில் இருந்த மன்செஸ்டர் சிற்றி அணி, 4-1 என்ற கோல் கணக்கில் இளம் லிவர்பூல் அணியிடம் தோல்வியடைந்தது.

போட்டியின் ஏழாவது நிமிடத்தில் சிற்றியின் எலியாக்கும் மங்களாவின் மூலம் பெறப்பட்ட ஒவ்ண் கோலினால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற லிவர்பூல் அணி, 23ஆவது நிமிடம், 32ஆவது நிமிடத்தில் முறையே பிலிப்பே கோத்தின்கோ, ரொபேர்ட்டோ பேர்மின்கோவினால் பெறப்பட்ட கோல்களின் மூலம் 3-0 என்ற ரீதியில் முன்னிலையை அடைந்தது.

தொடர்ந்து போட்டியின் முதற்பாதிக்கு ஒரு நிமிடம் இருக்கையில் சிற்றியின் செர்ஜியோ அகுரோ பெற்ற கோலின் மூலம் இரண்டாவது பாதியில் சிற்றி போராட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் இரண்டாவது பாதியில் பெறப்பட்ட ஒரேயொரு கோலையும் லிவர்பூலின் மார்ட்டின் ஸ்கேர்ட்டல் பெற அவ்வணி, 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் காயமடைந்துள்ள சிற்றி அணியின் தலைவர் வின்சென்ட் கொம்பனி, டேவிட் சில்வா ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஏழு போட்டிகளில் கோலைப் பெற்றிருக்காத டியகோ கோஸ்ட்டா, போட்டியின் 64ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் செல்சி அணி, நோர்விச் அணியுடனான போட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றி தனது இறுதி நான்கு பிறிமியர் லீக் போட்டிகளில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்து கொண்டது.

அடுத்து, மன்செஸ்டர் யுனைட்டெட் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வட்போர்ட் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று, பிறிமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மெம்பிஸ் டிபே கோலைப் பெற்றிருந்ததுடன், ஆட்டம் முடிவடைய மூன்று நிமிடங்கள் இருக்கையில் கிடைத்த பனால்டியின் மூலம் வட்போர்ட் அணியின் ட்ரோய் டீனி கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியபோதும், இறுதி நிமிடத்தில் அவரால் பெறப்பட்டிருந்த ஒவ்ண் கோலின் மூலம் யுனைட்டெட் வெற்றி பெற்றது.

இதேவேளை, ஆர்சனல் அணி, 1-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் புரோம் அணியுடன் தோல்வியைத் தழுவியது. போட்டியின் 28ஆவது நிமிடத்தில், ஆர்சனல் அணியின் ஒலிவியர் ஜிரோட் ஒரு கோலைப் பெற்றிருந்ததோடு, 35ஆவது நிமிடத்தில் வெஸ்ட் புரோம் அணியின் ஜேம்ஸ் மொரிசன் ஒரு கோலினைப் பெற்றிருந்ததோடு, 40ஆவது நிமிடத்தில் ஆர்சனல் அணியின் மைக்கல் ஆர்டீட்டா ஒரு ஒவ்ண் கோலினையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில், நியூகாஸ்டில் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற லெய்செஸ்டர் அணியானது அதிர்ச்கரமாக பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .