2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

'ஸ்ரீலங்கா கிரிக்கெட்' அலுவலகத்தில் இரகசிய பொலிஸார் தேடுதல்

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் சபையிலுள்ள ( 'ஸ்ரீலங்கா கிரிக்கெட்')    'கிரிக்கெட்  உலகக் கிண்ண அலுவலகத்தை'  நேற்று மாலை சுற்றிவளைத்துள்ள இரகசிய பொலிஸ் குழுவொன்று, அங்கு பல மணிநேரங்கள் வரையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

உலகக் கிண்ண சுற்றுப்போட்டி குறித்து முக்கிய தகவல்கள் அடங்கிய கணினி ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போயுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையினால் பொலிஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ உள்ளிட்ட அதிகாரிகளினாலேயே மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு, மெட்லண்ட் வீதியிலுள்ள குறித்த அலுவலகத்துக்குச் சென்ற இரகசிய பொலிஸார், அங்குள்ள அனைத்துக் கணனி இயந்திரங்களையும் பாரிய சோதனைக்கு உட்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கைவிரல் அடையாளங்களையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேற்படி ஹார்ட் டிஸ்க் காணாமல் போனமையானது பிரிதொரு மோசடி நடவடிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவின் செயலாளர் நிஷாந்த ரனதுங்க தெரிவித்தார்.

  குறித்த ஹார்ட் டிஸ்க் காணாமல் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்தே மேற்படி சுற்றிவளைப்புத் தேடுதலுக்கு உத்தரவிடப்பட்டதாக இரகசிய பொலிஸ் பிரிவின் தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜய அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நான்கு 'ஹார்ட் டிஸ்குகள்' காணாமல் போயுள்ளன. இவற்றில் உலகக்கிண்ண சுற்றுப்போட்டி ரிக்கெற்று விநியோகம் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண சுற்றுப்போட்டிக்காக கொழும்பிலும் ஐ.சி.சி. அலுவலகமொன்றை திறந்திருந்தது.

டிக்கெற் விற்பனை மூலமான 2 கோடி ரூபாவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்னும் எதிர்பார்த்து  காத்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி உலகக்கிண்ணப் போட்டிகள் முடிவுற்ற போதிலும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊழியர்களுக்கு மேற்படி உலகக்கிண்ண அலுவலகம் இன்னும் பணத்தை கையளிக்கவில்லை.

உலகக்கிண்ண அலுவலகத்திலிருந்து பணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை நிதி பணிப்பாளர் கூறியுள்ள நிலையில் தமது ஜூன் மாத சம்பளம் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊழியர்கள் ஏற்கெனவே அச்சம் கொண்டிருந்ததனர். இந்நிலையிலேயே  இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .