2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தென்னாபிரிக்க அணி வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், செஞ்சூரியன் சுப்பர்ஸ்போர்ட் பார்க்கில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என தெரிவித்திருந்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்றது.

இதில் ஹஷிம் அம்லா 124 ஓட்டங்களையும், ரீலி ரொஸோ 89 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இதில் அம்லாவும், ரொஸோவும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 185 ஓட்டங்களை பகிர்ந்திருந்த போதும், அதன்பின் வேகமாக ஓட்டங்களை பெற தடுமாறியிருந்தது. மேலும் இந்த இன்னிங்சில் ஒருநாள் போட்டிகளில் 21வது சதத்தை பெற்ற அம்லா, தென்னாபிரிக்கா அணி சார்பாக அதிக சதங்களை ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்ட ஹேர்ஷல் கிப்ஸின் சாதனையை சமப்படுத்தினார்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் அடம் மிலின், மிட்செல் மக்கெலிச்சான் தலா இரண்டு விக்கெட்களையும், ஜிம்மி நீஷம் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர். எனினும் மக்கெலிச்சான் தனது 10 ஓவர்களில் 72 ஓட்டங்களை வழங்கியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. இதில் அவ்வணி சார்பாக டொம் லதாம் 60 ஓட்டங்களையும், கேன் வில்லியம்ஸன் 47 ஓட்டங்களையும், ஜிம்மி நீஷம் 41 ஓட்டங்களையும், கொலின் முன்றோ 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்கா அணி சார்பாக டேல் ஸ்டெயின், இம்ரான் தாகிர், வெரோன் பிலண்டர், டேவிட் வைஸ் தலா இரண்டு விக்கெட்களையும், கஜிஸ்கோ ரபடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர். வைஸ் 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தபோதும், தனது 7 ஓவர்களில் 63 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார்.

போட்டியின் நாயகனாக ஹஷிம் அம்லா தெரிவானார். இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(23) இடம்பெறவுள்ளது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .