2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

4ஆவது போட்டியில் நியூசிலாந்தைத் தோற்கடித்தது இலங்கை

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்திபடி முதலில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

மழை காரணமாக தாமதித்த இப்போட்டி 42 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு இடம்பெற்றது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதலாவது விக்கெட்டை 16 ஓட்டங்களுக்கு இழந்ததோடு, இரண்டாவது விக்கெட்டை 45 ஓட்டங்களுக்கு இழந்தது.

ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி, 29.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது.

அதன் பின்னர் 32 ஓவர்கள் கொண்ட போட்டியாக இப்போட்டி ஆரம்பித்ததுடன் 32 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக பிரென்டன் மக்கலம் 44 பந்துகளில் 30 ஓட்டங்களையும், கேன் வில்லியம்ஸன் 29 பந்துகளில் 21 ஓட்டங்களையும், ஜேம்ஸ் ஃபிராங்ளின் 37 பந்துகளில் 21 ஓட்டங்களையும் கைப்பற்றினர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ஜீவன் மென்டிஸ் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், நுவான் குலசேகர 5 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இலங்கை அணி 32 ஓவர்களில் 131 என்ற இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறையில் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட இலக்கை இலங்கை அணி 26.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து இலகுவாக அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக டினேஷ் சந்திமால் 65 பந்துகளில் 43 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும், உபுல் தரங்க 28 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ட்ரன்ட் போல்ட், ரிம் சௌதி, அன்ட்ரூ எலிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் ஜீவன் மென்டிஸ் தெரிவானதோடு, 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .