2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

‘எல்லைப் புறத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமா?’

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறங்களிலுள்ள மஹாவலிக்குரிய காணிகள் மற்றும் வன இலாகாவுக்குரிய காணிகளில், திட்டமிட்ட சிங்களக் குடியற்றத்தைச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம், இவ்வாறான திட்டமிட்ட செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று, பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“கோறளைப்பற்று வடக்கு (வாகரை), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்ப்பற்று (செங்கலடி), மண்முனை மேற்கு (வவுணதீவு) போன்ற பிரதேசச் செயலகப் பிரிவுகளிலுள்ள மஹாவலி, வன இலாகவுக்குரிய காணிகள், பல தசாப்த காலமாக, ஆயிரக் கணக்கான கால்நடைகளுக்கென மேச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

“இப்பிரதேசங்களிலுள்ள கால்நடைப் பண்ணையாளர்களுக்கும் விவசாயம் செய்வோருக்கும் இடையில், ஒவ்வோர் ஆண்டும், தொழில் நிமித்தமாக முரண்பாடுகள் இருந்து வந்தமையால், கால்நடைகளுக்கென்றே இவை வரையறை செய்யப்பட்டன.

2017ஆம் ஆண்டுக்குப் பின், இப்பிரதேசங்களில் எல்லா இன மக்களும் போக்குவரத்துச் செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டதற்குப் பிற்பாடு, இக்காணிகளை அண்மித்து உள்ளவர்களும் ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களும், கெவிலியாமடு, விச்சித்திடல், மங்களகம எல்லைப்பகுதி, மாதவணை, மயிலத்தமடு, புணானை, ரிதிதென்ன ஆகிய மஹாவலிக்குச் சொந்தமான பகுதிகளில் குடியேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

1986ஆம் ஆண்டில் 17 குடும்பங்கள் மாத்திரமே இருந்த இடத்தில், 2020ஆம் ஆண்டில் 250 குடும்பங்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய துரைரெட்ணம், இது ஒருவகையான சிங்களக் குடியேற்றமா, இக்குடியேற்றத் திட்டத்துக்கான வீடுகளை நிர்மாணிக்க, யார் அனுமதி வழங்கினார் எனும் கேள்விகள், இன்று இந்தச் சமூகத்துக்கு மத்தியில் எழுந்துள்ளன என்றும் கூறினார்.

எனவே, இக்குடியேற்றம் தொடர்பாகவும் மேச்சல்தரைக் காணிகளைப் பயன்படுத்துவது தொடர்பாகவும், வனஇலாகா அதிகாரிகள், ஊர்காவற்படையினர் போன்றவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், அரசாங்கத்திடம் அவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .