2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

சவூதியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வழங்கக் கோரி வாகரையில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 23 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன், ஜிப்ரான்)

சவூதி அரேபியாவில் சித்திரைவதைக்குள்ளாக்கப்பட்ட  குடும்பப் பெண்ணொருவருக்கு நியாயம் வழங்குமாறு கோரி  மட்டக்களப்பு, வாகரையில் நேற்று புதன்கிழமை பாரிய கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

கடந்த 2003ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற இரு பிள்ளைகளின் தாயான மனோகரன் பவானி (வயது 31)  என்ற இப்பெண், கடமையாற்றிய வீட்டு எஜமானாரால் கடுமையாக சித்திரைவதைக்குள்ளாக்கப்பட்டதுடன், தனது இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளார்.  இந்த நிலையில் இப்பெண் கடந்த 13ஆம் திகதி தனது சொந்த இடமான வாகரைக்கு திரும்பியுள்ளார்.

இதனைக் கண்டித்தும் சவூதி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அப்பகுதி மகளிர் சமூக அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி, வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்', போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் 'வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமே நீதியை பெற்றுத் தா', 'எங்கள் பெண்கள் அராபியர்களுக்கு அடிமைகளா?',  'செய்யும் தொழிலுக்கு ஊதியமா? அல்லது சித்திரவதையா?', 'அரசாங்கமே பாதிக்கப்பட்ட பவானிக்கு நீதியையும் இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுக்கொடு', 'கிழக்கின் அரசியல்வாதிகளே பவானியின் சம்பவத்தை புதினம் பார்க்கின்றீர்களா?', போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகரை பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதேச செயலகம் வரை ஊர்வலமாகச் சென்றது. பின்னர் பிரதேச செயலகத்தில் கூட்டமொன்றும் நடைபெற்றதுடன், பாதிக்கப்பட்ட பவானியினால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கான மகஜரொன்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகியிடம் கையளிக்கப்பட்டது.

அரசாங்க அதிபரூடாக இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதுடன், தற்போது அவருக்கான அடிப்படைத் தேவைகளை வழங்க ஏற்பாடு செய்து தருவதாகவும் கூட்டத்தில் பிரதேச செயலாளர் இதன்போது கூறினார்.படப்பிடிப்பு:-ஆர்.அனுருத்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X