2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

இவ்வாண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதியுமாறு இ.தொ.கா. அழைப்பு

Princiya Dixci   / 2016 மே 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டிற்கான வாக்காளர் தேர்தல் இடாப்பில் பெயர்களைப் பதிந்து கொள்ளுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அதன் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் சமூகசேவையாளருமான கருப்பையா கணேசமூர்த்தி தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, 

வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்துகொள்வது வாக்களிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரஜை என்ற உயரிய அந்தஸ்த்தையும், கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதாகும். 

இவ்வாண்டு இறுதியிலோ அல்லது 2017ஆம் ஆண்டு முதற் பகுதியிலோ உள்ளூராட்சிமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளது. நுவரெலிய, பதுளை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி மக்கள் வாக்காளர் இடாப்பில் தங்கள் பெயர்களை இதுவரையிலும் பதிவுசெய்துகொள்ளப்படவில்லை என்றதொரு கருத்து நிலவுகின்றது. ஓர் ஆய்வின்படி குறித்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பதியப்படவில்லை என்ற நிலை காணப்படுகின்றது. 

ஒவ்வொரு மனிதனும் வாக்குரிமை அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதனை உணர்ந்து தான் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 1988ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விசேட சட்டமூலத்தின் ஊடாக அமுல்படுத்தி அதன் வாயிலாக ஒரு சத்தியக் கடதாசி மூலம் இந்திய வம்சாவளி மக்கள் எங்கெங்கு வசிக்கின்றார்களோ அவர்கள் எல்லோரும் இந் நாட்டு பிரஜைகள் என்ற அங்கிகாரத்தைப் பெற்றுக்கொடுத்தார். 

மலையகம் எங்கும் உள்ள கிராம உத்தியோகத்தர் ஊடாக வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே தமது கிராமசேவக உத்தியோகத்தர் ஊடாக வாக்காளர்களாக தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும். 

வாக்காளர் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கும், தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய அனைத்து விடையங்களுக்கும் அத்தியவசியமானது என்பதை பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட அனைத்து மக்களுமே உணர்ந்துகொள்ள வேண்டும். ஜூன் மாதம் 01 திகதி முதல் வாக்காளர் பதிவில் மலையக மக்கள் சகலரும் இணைந்து கொள்ளுமாறு இ.தொ.கா. அழைப்பு விடுக்கின்றது என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .