2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மலையகத் தமிழ் சமூக ரீதியான அரசியல் பிரதிநிதித்துவம் குறைவதற்கு ஒரு சில மலையகத் தமிழ் தலைமைகளே காரணம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ )

மலையகத் தமிழ்மக்கள் உட்பட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஊடகங்களில் குரல் கொடுக்கும் தமிழ் கட்சித் தலைவர்கள் சிலர் தேர்தல் காலங்களில் அந்த ஒற்றுமையை சகோதர கட்சிகளிடம் வெளிக்காட்ட முன்வருவதில்லை. இதுவே சமூக ரீதியான அரசியல் பிரதிநிதித்துவ குறைபாட்டுக்கான காரணம் ஆகும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவருமான எம்.உதயகுமார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

அரசாங்கம் இதுவரை நடைமுறையிலிருந்த முறைமைக்கு மாறாக புதிய முறைமை ஒன்றில் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டு வருகின்றது. முன்னைய விருப்பு வாக்கு முறை இல்லாது வேறு முறை வருமெனில் அதிகளவு வேட்பாளர்களை நிறுத்த முடியாது. எனவே மிகவும் புத்திசாதுரியமாக செயற்பட்டு நமது அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு மலையகத்தின் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உண்டு. தனித்தோ கூட்டாகவோ இதற்கான முடிவுகள் நிதானமாக எடுக்கப்பட வேண்டும். எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மலையகப் பகுதிகளில் ஜனநாயக மக்கள் முன்னணி போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களை அதன் தலைவர் மனோகணேசன்; நடத்தி வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். ஜனநாயக மக்கள் முன்னணி மலையகப்பகுதிகளில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் கடந்த காலங்களில் செயற்பட்டது போன்று வாக்குகளை சிதறடிக்கவும் பொருத்தமற்ற வேட்பாளர்களை உள்நுழைப்பதற்கும் அவர்களது செயற்பாடுகள் காரணமாகி விடக்கூடாது. கடந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் எமது தொழிலாளர் தேசிய சங்கத்துடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு வேட்புமனு தாக்கல் செய்ததோடு முறிக்கப்பட்டது. ஊவா மாகாணசபை தேர்தலில் தன்னிச்சையாக வேட்பாளர்களை நிறுத்தி எமது மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தை மற்றையவருக்கு தாரை வார்த்து கட்சி சார்ந்த  செயற்பாட்டாளர்கள் அல்லாமல் கட்சி சார்ந்தவர்கள் மலையக மக்கள் பிரதிநிதிகளாக மாறும் நிலை ஏற்பட்டது. எனவே தேர்தல் முறையும் மாற்றம் செய்யப்படுகின்ற புதிய சூழலில் மலையக சகோதர அரசியல் தொழிற்சங்க கட்சிகளுடன் கலந்துரையாடி இதயசுத்தியுடனான உடன்பாட்டின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வது சிறந்தது. ஜனநாயக மக்கள் முன்னணிக்கு பொதுத் தேர்தல் முடிவுகள் நல்ல படிப்பினைகளை பெற்றுக்கொடுத்திருக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--