2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆங்கிலேயர்கள் செய்ததை இந்தியா செய்யக்கூடாது

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

'பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு 200 வருடங்கள் ஆகின்றன. அன்று முதல் இன்றுவரை பிரித்தாளப்படுவதே நாம் இன்னும் மற்ற சமூகங்களைப்போல முன்னேற்றமடைய முடியாமல் இருப்பதற்கு காரணம். நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் நிச்சயமாக பல விடயங்களை சாதித்திருக்க முடியும். அன்று ஆங்கிலேயர்கள் செய்ததை இன்று இந்திய அரசாங்கம் செய்ய முற்படக்கூடாது' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

'இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டமானது ஒரு குறித்த தொழிற்சங்கத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படுத்தப்படுவதாக  ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு இந்திய அரசாங்கம் செயற்படுவதானது மிகுந்த வருத்தத்திற்கும் மலையக மக்கள் இந்திய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஒரு செயலாகவும் அமைந்துள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இந்திய அரசாங்கம் நேரடியாக  வடக்கில்  வீடமைப்புகளை மேற்கொண்டு அந்த மக்களின் பாவனைக்காக கையளிக்கின்றது. இது வரவேற்கக்கூடிய ஒரு விடயமாகும். அங்கே அவர்கள் தமிழத் தேசிய கூட்டமைப்பிற்கோ அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கோ வேறு அரசியல் கட்சிகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை.  ஏன் அதே நடைமுறையை மலையகத்தில் கடைபிடிக்க முடியாது என்ற கேள்வி எம்முள் எழுகின்றது.

அதைவிடுத்து குறித்த சில தொழிற்சங்கத்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுப்பதானது மலையகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் வீண் குழப்பத்தையும் தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கும்.

இதன்காரணமாக இந்திய அரசாங்கத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு நல்ல விடயத்தை முன்னெடுக்கின்ற இந்த நேரத்தில் ஏன் இவ்வாறான தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அது மாத்திரமல்லாமல் தொழிற்சங்கங்களுக்கு இடையிலும் வீண் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. மக்களின் அமைதியான வாழ்க்கையை குழப்பும் ஒரு செயலாகவே இதனை கருத வேண்டியுள்ளது. அப்படி நடந்தால் தொழிலாளர்கள் தமது சக தொழிலாளர்களுடன் சண்டையிட்டுக்கொண்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றங்களுக்கம் செல்லும் நிலையே ஏற்படும்.

வீடமைப்பு திட்டம் என்பது உண்மையிலேயே வீடற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணியின் எதிர்பார்ப்பாகும். இதில் தொழிற்சங்க பேதமோ அல்லது வேறு எந்த ஒரு வித்தியாசமோ காட்டக்கூடாது. அப்படி நடந்தால் நிச்சயமாக சரியானவர்களுக்கு சென்றடைவதற்கான வாய்ப்புகள் இருக்காது.  

மேலும் இந்திய அரசாங்கம் மலையகத்தில் அமைந்துள்ள தொழிற்சங்கம் அனைத்தையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டுமே தவிர அதில் பாரபட்சம் காட்டக்கூடாது. ஏனென்றால் அனைத்து தொழிற்சங்கங்களிலும் அங்கத்தவர்களாக இருப்பவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களே. தொழிற்சங்கங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் நலன் கருதியே செயற்பட்டு வருகின்றன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .