2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இனப்பிரச்சினை, தமிழ் கைதிகள் விடயங்களையும் தேசிய எதிர்ப்பில் சேர்த்துக்கொள்ளுங்கள்: மனோ கணேசன்

Super User   / 2011 நவம்பர் 23 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

'மூன்று விடயங்களை முன்னிறுத்தி எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் தேசிய எதிர்ப்பு தினம் அனுஷ்டிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி எமது கட்சிக்கும் அழைப்புவிடுத்துள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில், நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் இனப்பிரச்சினை, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் விடயங்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறாயின் நாமும் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவித்துள்ளதாக' ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அங்குராரப்பணம் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன்,

'வரவு செலவு திட்டம்இ நஷ்டமடைந்த நிறுவனங்களை பறிமுதல் செய்யும் சட்டம் மற்றும் சரத் பொன்சேகா மீதான பழிவாங்கல் ஆகிய மூன்று விடயங்களை முன்னிறுத்தி ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்க போவதாக அறிவித்துள்ளது.

இதில் எமது கட்சியையும் கலந்துகொள்ளுமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க  எமக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் ஐக்கிய தேசிய கட்சி முன்வந்துள்ளமை நல்ல விடயம்.

ஆனால் இந்த எதிர்ப்பில் தமிழ் பேசும் மக்கள் சம்மந்தப்பட்ட விடயங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டால் தான் அது உண்மையான தேசிய எதிர்பாக இருக்கும். எமது மக்களின் பிரச்சினைகளை மறந்து அல்லது புறந்தள்ளிவிட்டு நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் தலைகாட்டிக் கலந்துகொள்ள எனக்கும், எமது கட்சிக்கும் முடியாது.

கொழும்பிலே நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் தமிழ் மக்களும் கலந்துகொள்வதற்கான நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். இதில் கொழும்பிலே தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுள்ள தமிழர்களின் தலைமை கட்சி என்ற முறையில் நாங்கள் இதில் கவனம் செலுத்துகின்றோம்.

யுத்தம் முடிவடைந்து மூன்றாவது ஆண்டுக்குள் நாடு சென்றுகொண்டிருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும் கூட இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதற்கான அறிகுறிகளையும் காணமுடியவில்லை.

அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தாமல் காலத்தைக் கடத்தி வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்கின்றதென்று நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

அதேவேளை, சரத் பொன்சேகா சிறையிலேயிருந்து விடுவிக்கப்படுவதைப்போல் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். சரத் பொன்சேகாவின் கைதை அனைத்து அரசியல் கைதிகள் விவகாரத்தின் அடையாளமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படும் தேசிய இனப்பிரச்சினை, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் பிரச்சினை ஆகிய விடயங்களும் உள்வாங்கப்பட வேண்டும். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே தமிழ் கட்சிகளும், தமிழ் மக்களும் தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குபற்றமுடியும். இல்லாவிட்டால் இவை கூலிக்கு மாரடிக்கும் கூத்தாகவே முடியும்' என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் வண. மாதுலுவாவே சோபித்த தேரர், தயாசிஸ்ரீ ஜயசேகர எம்.பி, சுமந்திரன் எம்.பி, விக்கிரமபாகு கருணாரட்ண, ஸ்ரீதுங்க ஜயசூரிய, சிரால் லக்திலக ஆகியோர் கலந்துகொண்டனர். Pix By: Samantha Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X