2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

‘தமிழ் உணர்வு வரவேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களின் உரிமையைக் கோரி நடாத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் பிரகடனத்தை நினைவு கூருகின்ற வகையில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற நினைவுத் தூபியைப் பார்க்கின்ற போது எல்லோரிடமும் தமிழ் உணர்வு வர வேண்டுமென, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட பொங்குதமிழ் பிரகடன நினைவுத் தூபியை நேற்று திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றுகையிலையே துணைவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் என்பன உள்ளடங்கலாக ஒரு குழுவொன்று அமைக்கப்பட்டு பொங்குதமிழ் நடாத்தப்பட்டு பிரகடனமும் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு செய்யப்பட்ட பொங்குதமிழ் பிரகடன பெயர்ப்பலகை நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்க முடியாததொரு சூழ்நிலை ஏற்பட்டது.

“அதன் நினைவாக நினைவுத் தூபியொன்றை பல்கலைக்கழக மாணவர்கள் அமைத்துள்ளனர். அந்த நினைவுத் தூபி தான் மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.  கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இப் பொங்குதமிழ் நிகழ்வில் நானும் கலந்து கொண்டிருக்கின்றேன்.

“அது மக்களுக்காக மக்களுடைய உரிமையை வெளிக்காட்டும் உணர்வு.  அந்த வகையில் அந்த பிரகடனத்தை நினைவு கூரும் முகமாக இந்த நினைவுத் தூபி கட்டப்பட்டுள்ளது. இத் தூபியைப் பார்க்கின்ற போது எங்களுடைய தமிழ் தமிழ் உணர்வு எல்லோரிடமும் வர வேண்டும்.

“எங்களுடைய உரிமைக்காக அகிம்சை ஆயுதப் போராட்டத்தினூடாகவும் உரிமை கேட்டார்கள். அதே போன்று பொங்குதமிழ் மூலமும் உரிமையைக் கேட்டார்கள். அவ்வாறு உரிமையைக் கோரியதை நினைவுகூறுகின்ற வகையில் நினைவுத் தூபி திறந்து வைக்கப்படுகின்றது. இதனை முன்னின்று செய்து முடித்திருக்கும் மாணவர் ஒன்றியத்தினர் பாராட்டப்பட வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .