2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் 100 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியேற்ற பணிகள் பூர்த்தி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

முல்லைத்தீவு மாவட்டத்தில் 100 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 27 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன், தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு இன்று தெரிவித்தார்.  

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் புதுக்குடியிருப்பு, மந்துவில், மல்லிகைத்தீவு, சிவநகர், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, கோம்பாவில், இரணைப்பாலை, தேவிபுரம், வள்ளிபுனம், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு, சுதந்திரபுரம் ஆகியவற்றிலும், கரைதுரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில்; கிராம அலுவலகர் பிரிவில் கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, செம்மலை கிழக்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, அம்பலவன், பொக்கனை, தண்ணீரூற்று கிழக்கு, குமாரபுரம், தண்ணிமுறிப்பு, குமுழமுனை கிழக்கு, குமுழமுனை மத்தி ஆகியவற்றிலும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்  பிரிவில் மணவாளன் கட்டுமுறிப்பிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்பகுதிகளில் அதிகளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதற்கான சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றவுடன் மக்கள் மீள்குடியேற்றப்படுவரெனவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணியில் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட 202 குடும்பங்கள்  மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர். கருநாட்டுக்கேணியில் யுத்த காலத்தின்போது, புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தமக்கு சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள இக்குடும்பங்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் தற்காலிக கொட்டகைகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. தண்ணீர் விநியோகம், பொதுமலசலகூட வசதிகள் ஆகியனவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இம்மக்களுக்கு முதல் 3 நாள்களும் சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதுடன், பின்னர் அரசாங்கத்தின் உலர் உணவுப் பொருள்களும் வழங்கப்படவுள்ளன.

குமுழமுனை கிழக்கு, குமுழமுனை மத்தி ஆகியவற்றில் தற்போது கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவடைந்து வருகிறது. இதற்கான சான்றிதழ் இந்த மாதக் கடைசியில் கிடைக்கவுள்ளது. இந்நிலையில், குமுழமுனை கிழக்கில் 193 குடும்பங்களும் குமுழமுனை மத்தியில் 237 குடும்பங்களும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் ஏ.பத்திநாதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--