2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மீளக்குடியேறிய மன்னார், பெரியமடு மக்களின் அடிப்படை தேவைகளை செய்து தருமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்தாஜ்)

மன்னார், பெரியமடு முஸ்லிம் மக்களுக்கான அடிப்படைவசதிகளை பூர்த்தி செய்து தருமாறு பெரியமடு கிராம அபிவிருத்திச் சங்கம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அதன் விபரம் வருமாறு :-

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பெரியமடுக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு வரை 95 சதவீதமான முஸ்லிம்கள் வாழ்ந்து வாழ்ந்து வந்தனர். எனினும் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இம்மக்கள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது பெரியமடு  மக்கள் மீண்டும் அங்கு  மீளக் குடியேற ஆரம்பித்துள்ளனர்.

தற்போது 150 இற்கும் மேற்பட்ட குடும்ப தலைவர்கள் இங்கு மீள்குடியமர்ந்துள்ளனர். அம்மக்கள் இங்கு மீள்குடியமர்ந்த போதும் இம்மக்களது அடிப்படை வசதிகள் வழங்கப்படாத நிலையில் மீண்டும் ஒரு நலன்புரி நிலைய வாழ்க்கையை தமது தாயக மண்ணில் நடத்த வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. சொந்த வீடுகளிலோ, காணிகளிலோ வசிக்க முடியாத நிலையில் பள்ளிகளிலும், மதத் தலங்களிலும் தஞ்சமடைய வேண்டியுள்ளது.

பெரியமடு கிராமமானது இயற்கையாகவே காடடர்ந்த பிரதேசமாகும். 20 வருடங்களின் பின்னர் மீள்குடியமரும் போது வீட்டுக் காணிகள் அனைத்தும் காடுகள் போன்று மூடிக் காணப்படுகின்றன. அதற்குள் பாம்புகள், கரடி, யானை போன்ற காட்டு மிருகங்களும்
காணப்படுகின்றன.

மக்கள் வசித்து வந்த வீடுகள்  உடைக்கப்பட்டு, அவைகள் இருந்த இடங்களே தெரியாத நிலை காணப்படுகின்றது.

குடிநீர்க் கிணறுகள் யாவும் தூர்ந்து போயும், பாழடைந்தும், உடைந்துப் போயுள்ள நிலையில் குடிநீர் பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

மலசல கூடங்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இக்கிராம மக்களின் 97 சதவீதமானவர்களின் வாழ்வாதார செயற்பாடுகளாக கால்நடை வளர்ப்பும், விவசாயமுமே உள்ளன. இங்குள்ள விவசாயக் குளத்தை மையப்படுத்தி விவசாய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது இக்குளத்தின் துரிசு சேதமாக்கப்பட்டுள்ளதால் இந்நீரை தேக்கி வைக்க முடியாத நிலையுடன் காணிகளில் மிதிவெடிகள் இருப்பது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கிராம மக்கள் கூறிய
போதும் அப்பணிகள் நடைபெறவில்லை.

மின்சார வசதிகளில்லாத நிலை காணப்படுகின்றது. மக்கள் பிரயாணிப்பதற்கான பிற நகரங்களுக்கு செல்வதற்கான பாதைகள் காடுகளால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து செயற்பாடுகளும் உரிய முறையில் இடம் பெறுவதில்லை.

எமது மக்களின் கால்நடைகள் வேறு மனிதர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு மத்திய மருந்தகம் செயற்பட்டு வந்த போதும், தற்போது அது சேதமடைந்து எவ்வித பயன்பாட்டுக்கும் உரிய முறையில் இல்லாத நிலை காணப்படுகின்றது.

ஏற்கனவே, இங்கு இரு கூட்டுறவு கடைகள் செயற்பட்டுவந்தன. அவைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் இங்கு காணப்பட்ட பொது நோக்கு மண்டபம், நூல் நிலையம், விளையாட்டு மைதானங்கள், அரச கட்டிடங்கள் என்பன அழிவுற்று போயுள்ளன.

இவற்றை முறையாக பெற்றுக் கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. இக்கிராமமானது 1956 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் முழுமையான உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடமைப்புத் திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் 295 வீடுகள் அமைக்கப்பட்டு ஒரு குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் வீட்டுக் காணியும், 3 ஏக்கர் வயல் காணியும் வழங்கப்பட்டிருந்தது.  தற்போது 1,025 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் 300 குடும்பங்களுக்கே காணிகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில், எமது மக்களின் மிள்குடியேற்றத்துக்கு முக்கியமான தேவைப்படும் அடிப்படை வசதிகளை பெற்றுத்தருவதற்கு தாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இம்மக்கள் இருக்கின்றனர். அவைகளாவன:-

1- சகல குடியிருப்பு காணிகளும் புல்டோசர் மூலம் துப்புரவு செய்தல்.

2- காணியற்ற 725 குடும்பங்களுக்கு ஏற்கெனவே உள்ளவர்களுக்கு வழங்கியது போன்று வழங்க நடவடிக்கையெடுத்தல்.

3- குடியிருப்பதற்கு நிரந்தர வீடுகளோ அல்லது உடனடி பயன்படுத்தலுக்கு தற்காலிக கொட்டில்களோ அமைத்துக் கொடுத்தல்.

4- குடிநீர்க் கிணறுகளை துப்புரவு செய்தல்.

5- மலசல கூடங்களை அமைத்தல்.

6- வயல் காணிகளிலும் வீட்டுக் காணிகளிலும் காணப்படும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான பணிப்புரையினை அதிகாரிகளுக்கு வழங்குதல்.

7- மின்சாரத்தை பெற்றுத்தர நடவடிக்கையெடுத்தல் (பெரியமடு கிராமத்திற்கு 7 கிலோ மிற்றர் தூரத்திலுள்ள பாலம்பிட்டி கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மின் சாரத்தை பெறமுடியும்).

8- கிராமத்தின் உள்ளக பாதைக்கான 20 கிலோ மீற்றரை புனரமைப்பு செய்தல்.

9- நகரங்களை இணைக்கும் பெரியமடு-விடத்தல்தீவு வீதி 12 கிலோ மீட்டர், பெரயமடு- பாலம்பிட்டி வீதி 10 கிலோ மீற்றர் தார் பாதையாக மாற்ற நடவடிக்கையெடுத்தல்.

10- மீள்குடியமர்ந்துள்ள மக்களுக்கு அரச பண்ணைகள் ஊடாக கால் நடைகள் வழங்க நடவடிக்கையெடுத்தல்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X