2025 ஜூலை 09, புதன்கிழமை

அடிப்படையிலேயே வலுவிழக்கும் குற்றச்சாட்டு: வடமாகாண சுகாதார அமைச்சு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண நிர்வாகம் இயங்காத காலத்தில் இடம்பெற்ற ஒப்பந்தங்களில் அமைச்சரை சம்பந்தப்படுத்துவது அடிப்படையிலேயே வலுவிழக்கும் குற்றச்சாட்டாகும் என வட மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

'வடமாகாண வைத்தியசாலைகளுக்கான உலர் உணவு வழங்கலில் பலகோடிரூபாய் ஊழல் மோசடி செய்யப்பட்டுள்ளது'என்று சமூக வலைத்தளங்கள் சிலவற்றில் வெளியான செய்தி தொடர்பாக பொதுமக்களுக்கும் பொறுப்புள்ள ஊடகங்களுக்கும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திபற்றி விளக்கமளிக்கவேண்டிய கடப்பாடு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முகவரியற்ற வலைத்தளங்களிலும் அநாமதேயமான முகநூல்களிலும் வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்ட இந்த செய்திபற்றி உத்தியோகபூர்வான முறையில் பொறுப்புக்கூறவேண்டிய அவசியம் எமக்கு இல்லாவிடினும் இவ்வாறான செய்திகளை பரப்பும் நபர்கள் யார் என்பதையும் அவர்களின் உண்மையான உள்நோக்கம் என்னவென்பதையும் வெளிக்கொணரவேண்டிய பொறுப்பு எமக்குள்ளதாகவே கருதுகின்றோம்.

சுகாதார சுதேசவைத்தியதுறை அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் பற்றியும் அவரது கடந்தகால வாழ்க்கைபற்றியும் சிலவிடயங்களை இங்கு முன்வைப்பது பொருத்தமானதாக இருக்குமென நம்புகின்றோம். வவுனியா மாவட்டத்தில் 10 தலைமுறைகளுக்கு மேலாக ஆயர்வேதவைத்தியசேவை வழங்கிவரும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த இவர் 15 வருடங்களுக்கு மேலாக வைத்தியத்துறையில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

குறிப்பாக வன்னிபெருநிலப்பரப்பில் அனர்த்த காலங்களின் போது வைத்தியபணியாற்றியவர். இந்தநிலையில் ஏந்தவித அரசியல் பின்னணியும் இல்லாது குடும்பபின்னணியையும் வைத்தியத்துறையில் மக்களுக்கு ஆற்றிய அளப்பரியசேவையையும் மட்டுமே முதலீடாக கொண்டு மக்களுக்கான சேவை வழங்கும் ஒரேநோக்குடன் காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்குவந்தவர். தேர்தல் முடிந்தவுடன் அமைச்சுப்பதவிகளுக்கு போட்டிபோட்டுக்கொண்டு அரசியல் நாடகம் நடாத்திய அரசியல்வாதிகள் மத்தியில் அமைதியாக இருந்து கட்சிமேலிடத்தின் வேண்டுகோளிற்கிணங்க அமைச்சுப்பதவியை பொறுப்பேற்று கடந்த 5 மாதங்களாக பொறுப்புடன் கடமையை செய்துவருகின்றார்.

10.03.2014 திகதியிடப்பட்டு 20.03.2014 கையொப்பமிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டம் திருவையாறுபகுதியைச் சேர்ந்த திரு.கணபதிப்பிள்ளை கந்தசாமி என்பவர்  வடமாகாண முதலமைச்சருக்கு முறைப்பாட்டுக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இதன் பிரதி சுகாதார அமைச்சர், மற்றும் யாழ் மாவட்டத்தின் குறிப்பிட்டவொரு மாகாண சபை உறுப்பினர் மற்றும் வன்னி, கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கென அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் சம்பந்தப்பட்டவர் சுகாதார அமைச்சரையோ அல்லது அவர் ஊழல்மோசடி செய்ததாகவோ எதுவும் எழுதவில்லை. வடமாகாண சுகாதார அமைச்சின் கடந்தகால நிர்வாகத்தையே குறைகூறியுள்ளார். எனினும் சுகாதார அமைச்சின் அமைச்சர் என்றவகையில் இதுபற்றி பதிலளிக்கவேண்டிய கடப்பாடு சுகாதார அமைச்சர் உள்ளது.

பொதுமக்கள் தமக்குகிடைக்கும் சேவைதொடர்பில் அதிருப்தி ஏற்படும்போது சம்மந்தப்பட்ட திணைக்களத்தலைவருக்கோ மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கோ முறைப்பாட்டை தெரிவிப்பது பொதுவான நடைமுறையாகும். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. நீதியான விசாரணையின் பின்பே உரியதீர்வு கிடைக்கும். அதேபோன்று உள்ளக விசாரணை திருப்தியாக அமையாதுவிடின் சட்டஉதவியை நாடுவதற்கும் பொதுமக்களுக்கு உரிமையுண்டு.

எனினும் பொதுமகன் ஒருவரால் அனுப்பப்பட்ட சாதாரண முறைப்பாட்டுக்கடிதத்தை சம்மந்தப்பட்டவர்களின் கைக்குகிடைக்க முன்னரே அவசரமாக 'ஸ்கான்'; செய்து எந்தவித குறுக்கு விசாரணையோ உண்மைத்தன்மைபற்றிய அலசி ஆராய்தலோ இல்லாது முந்திக்கொண்டு முகவரியற்ற வலைத்தளங்களிலும் அநாமதேய முகநூல்களிலும் வெளியிடுவது இதன் பின்னணியில் எவ்வாறான அரசியல் சக்தியுள்ளதென்பதும் இந்த அரசியல்வாதிகள் இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதன் மூலம் எதை சாதிக்க முற்படுகிறார்கள் என்பதும் அடிப்படை அரசியல் அறிவுடைய யாருக்கும் புரிந்திருக்கும். எந்தவித அரசியல் சலசலப்புமில்லாது தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான விருப்புவாக்குகளை தனதாக்கி அதிகாரம் முடக்கப்பட்ட மாகாண அமைச்சிலும்கூட மக்களுக்கான தரமான சுகாதாரசேவையை வழங்குவதற்காக கடுமையாக உழைத்து சேவையாற்றிக்கொண்டிருக்கும் அமைச்சரின் அரசியல் வளர்ச்சியை பொறுக்கமுடியாத அரசியல் நாகரீகம் தெரியாதவர்கள் அவர்களின் ஊதுகுழல்களாகவுள்ள ஊடகதர்மத்தை மறந்த ஊடகங்கள் என தம்மை பறைசாற்றுபவர்களுடாக ஆற்றும் இந்த மக்கள்(விரோத) நடவடிக்கை இத்துடன் நிறுத்தப்படப்போவதில்லை.

இது தொடரும். ஓவ்வொருவருக்கும் அவர்களின் அறிவுக்கேற்ற வகையில் அவர்களால்  என்ன செய்யமுடியுமோ அதைத்தான் செய்வார்கள். அவர்கள் தங்கள் பணியை திறம்பட செய்யட்டும். நாங்கள் மக்களுக்கான எங்கள் பணியை தொடர்ந்தும் செய்துகொண்டிருப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .